உள்ளூர் செய்திகள்

டீ கடை பெஞ்சு

உள்ளாட்சித் தேர்தல்: தயங்கும் உடன்பிறப்புகள்: ''பத்திரிகையாளர்களை பார்த்தாலே அமைச்சர்கள் பயப்படுதாங்க வே...'' என்றபடி விவாதத்தை துவக்கினார் பெரியசாமி அண்ணாச்சி.

''எடக்கு மடக்கா கேள்விகளை கேக்குறாங்களாங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''அதெல்லாம் இல்லை வே... புது அரசு அமைந்த பிறகு, முதல் சட்டசபைக் கூட்டத் தொடர் துவங்கியது... இதை சாக்கா வைச்சு, என்னென்னமோ நாளிதழ், வாரப் பத்திரிகைகள், 'டிவி'கள் பெயரைச் சொல்லிட்டு, தினமும், 300 பேர் கோட்டைக்கு வர ஆரம்பிச்சிட்டாங்க... தினமும் கொடுக்கற சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டதும், அந்த தேதியில விவாதம் நடந்த துறையோட அமைச்சர்கள் அறைக்கு படையெடுத்திட்டாங்க...

''தங்களை கவனிக்கும்படி, கூட்டம் கூட்டமா பத்திரிகைக்காரங்க பெயருல வந்த இவங்களை பார்த்து, அமைச்சர்கள் ஆடிப் போயிட்டாங்க... செய்தித் துறையினராலேயும் இவங்களை சமாளிக்க முடியலை... சட்டசபையிலேயும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் யாராவது பேசினா, அதை பத்திரிகைகள்ல வர வைக்கிறோம்ன்னு சொல்லி வசூல் வேட்டை நடத்தினாங்க... இந்த டுபாக்கூர்கள் தொல்லை தாங்க முடியாம, அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும், இவர்களை பார்த்தாலே ஓட்டம் பிடிக்காங்க வே...'' என்றார் அண்ணாச்சி.

''சிறையில நடிச்சவர், உள்ளேயே இருக்கும்படி ஆகிடுச்சாம் பா...'' என்றபடி அடுத்த மேட்டருக்கு தாவினார் அன்வர்பாய்.

''அப்படி என்ன நடந்ததுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''பணமோசடி வழக்குல, மதுரை தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் ஜெயராமன், அந்த ஊர் சிறையிலே அடைக்கப்பட்டார் பா... வேற இரண்டு வழக்குகள்ல அவரை கைது செய்திருக்கற தகவலை, சிறையில் போலீசார் சொன்னதும், அதிர்ச்சியில் மயக்கமடைந்திருக்கார்... உடனே அவரை சிறை மருத்துவமனையில் சேர்த்திருக்காங்க... அவரை சோதிச்ச டாக்டர்கள், மருத்துவமனையிலேயே இருந்துக்க இவர் நாடகமாடியிருக்கார்ன்னு கண்டுபிடிச்சிட்டாங்க... இது தெரிஞ்ச போலீசார், இவரைகுண்டர் சட்டத்துல கைது செஞ்சு, மொத்தத்துல வெளியே வர முடியாம செய்துட்டாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''தி.மு.க., அறிவிப்பு, ஒரு பக்கம் மகிழ்ச்சியையும், மற்றொரு பக்கத்துல கவலையையும் ஏற்படுத்தியிருக்காம் ஓய்...'' என, கடைசி தகவலுக்குள் நுழைந்தார் குப்பண்ணா.

''உள்ளாட்சித் தேர்தல் விவகாரமா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''ஆமாம் ஓய்... 'தனித்துப் போட்டி'ன்னு, கட்சித் தலைமை அறிவிச்சிடுத்து... இதனால, கட்சிக்காராளுக்கு தாராளமா, 'சீட்' கிடைக்கும்... சட்டசபை தேர்தல்ல, பல கட்சிகள் கூட்டணியில இருந்ததால, உடன்பிறப்புகளை திருப்திபடுத்த முடியாத நிலை இருந்தது... அந்தக் குறை, இந்த தேர்தல்ல இருக்காது...'' என்றார் குப்பண்ணா.

''அதெல்லாம் சரி... ஆனா, கிடைக்கற இடத்தில் எல்லாம் ஜெயிச்சிட முடியுமா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''இது தான், உடன்பிறப்புகள் கவலைக்கு காரணம் ஓய்... போட்டியிட்டு, வெட்டியா கைக்காசை செலவழிக்கணுமான்னு, எல்லாரும் தயங்கறா... இப்படிப்பட்டவா மேல, உரிய நேரத்துல நடவடிக்கை எடுக்க, தலைமை திட்டமிட்டுருக்கு ஓய்...'' எனக் கூறிவிட்டு, குப்பண்ணா நடையைக் கட்ட, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி