''இடம் தராம நெருக்கடி தர்றாவ வே...'' என, கருப்பட்டி டீயை பருகியபடியே பேச்சை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.''யாருக்குங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் துவங்கினாருல்லா... கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த, அவரது கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுக்க இடம் தேடிட்டு இருக்காவ வே...''சேலம், ஆத்துார் அடுத்துள்ள பெத்தநாயக்கன் பாளையத்துல, ஏழெட்டு மாசத்துக்கு முன்னாடி தி.மு.க., இளைஞர் அணி மாநாட்டை நடத்து னாங்கல்லா... அந்த இடத்தை, விஜய் கட்சி பொதுச்செயலர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் போய் பார்த்து, இடத்தின் உரிமையாளர்களிடம் கேட்டிருக்காவ வே...''அவங்க, தி.மு.க., தலைமைக்கு தகவல் தெரிவிக்க, 'இடம் தரக்கூடாது'ன்னு தலைமை கண்டிப்பான உத்தரவு போட்டுட்டாம்... இதனால, விழுப்புரம், விக்கிரவாண்டின்னு இடம் தேடிட்டு இருக்காவ... இன்னும், 'பைனல்' ஆக மாட்டேங்கு வே...'' என்றார், அண்ணாச்சி.''மாநகராட்சி கமிஷனருக்கே போன் போட்டு பேசிட்டாங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''மதுரை மாநகராட்சி வார்டுகள்ல நெருநாய்கள் தொல்லை அதிகமாகிடுச்சுங்க.. இதனால, துாத்துக்குடி யில் நாய்கள் பிடிக்கிறதுல பயிற்சி பெற்ற சிறப்புக்குழுவை அழைச்சு, மாதம் 1,000 நாய்களை பிடிச்சு குடும்பக்கட்டுப் பாடு செய்ற நடவடிக் கையை கமிஷனர் தினேஷ்குமார் முடுக்கி விட்டாருங்க... இது, மாவட்டத்துல இருக்கிற விலங்குகள் ஆர்வலர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துச்சுங்க...''அவங்க, முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் உரிமை ஆர்வலருமான மேனகாவுக்கு புகார் அனுப்பியிருக்காங்க... அவங்களும் டில்லியில இருந்து, மதுரை மாநகராட்சி கமிஷனரின் மொபைல் போனுக்கு பேசி, 'நாய்களை துன்புறுத்திப் பிடிக்கிறதா புகார்கள் வருதே'ன்னு விசாரிச்சிருக்காங்க...''கமிஷனரும், 'நாய்களுக்கு வலிக்காத வகையில், பிரத்யேகமான பட்டர்பிளை வலை பயன்படுத்தி தான் பிடிக்கிறோம்... அதுக்கான ஆதாரங்கள் இருக்கு மேடம்'ன்னு பக்குவமா விளக்கியிருக்காரு... அவங்களும் சமாதானமாகி, 'ஓகே' சொல்லிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''கூட்டணி கட்சின்னு கூட பார்க்க மாட்டோம்னு எச்சரிக்கை விடுத்திருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.''புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த அம்மாப் பட்டினத்துல, தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில நிர்வாகி முகமது இஸ்மாயிலுக்கு சொந்தமான நிலம் இருந்துச்சாம்... இந்த இடத்தை உள்ளூர் தி.மு.க., நிர்வாகி ஒருத்தர் ஆக்கிரமித்து, 'கலைஞர் அறிவாலயம்'னு பெயர் பலகையும் வச்சுட்டார் ஓய்...''நில அபகரிப்பு விவகாரம் தொடர்பா, மாவட்ட போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு இஸ்மாயில் புகார் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கல... இதனால, 'எனது நிலத்தை மீட்டு தரணும்... இல்லன்னா கூட்டணி கட்சின்னு கூட பார்க்காம, காங்., நிர்வாகிகள், தொண்டர்களை திரட்டி போராட்டம் நடத்துவேன்'னு இஸ்மாயில் எச்சரிக்கை விடுத்திருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.