''தன் சமுதாய ஓட்டு களை வாங்கி தரல பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.''எந்த தொகுதி விவகாரம் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.''கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலரா, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி இருக்காரு... இவரது மனைவி ஜோதி, 2019ல் நடந்த ஓசூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்ல போட்டியிட்டாங்க பா...''அப்ப, நாயுடு சமுதாய மக்கள், இவங்களுக்கு ஓட்டு போடாம போயிட்டதால ஜோதி தோற்று போயிட்டாங்க... இதனால, பாலகிருஷ்ணா ரெட்டி கடும் அதிருப்தியில இருந்தாரு பா...''இப்ப முடிஞ்ச லோக்சபா தேர்தல்ல, கிருஷ்ணகிரி வேட்பாளரா, நாயுடு சமுதாயத்தை சேர்ந்த, எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர் ஜெயப்பிரகாஷ் போட்டியிட்டாரு... இவருக்கு ரெட்டி, தன் சமுதாய ஓட்டுகளை வாங்கி தர எந்த முயற்சியும் எடுக்கல பா...''ஓசூர், தளி சட்டசபை தொகுதிகள்ல இருக்கிற ரெட்டி சமுதாய ஓட்டுகள் பெரும்பாலும் பா.ஜ.,வுக்கு போயிடுச்சு... குறிப்பா, தளியில பா.ஜ., இரண்டாடம் இடத்துக்கு வந்துடுச்சு... '2019 இடைத்தேர்லுக்கு பழிவாங்குற விதமா ரெட்டி நடந்துக்கிட்டார்'னு ஜெயப்பிரகாஷ் ஆதரவாளர்கள் புலம்பிட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''வார விடுமுறையை மறந்துட்டாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''போலீசாருக்கு வார விடுப்பு தரணும்னு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு போட்டிருந்தாருல்லா... ஆரம்பத்துல, கோவை மாநகர போலீசாருக்கு வார விடுப்பை முறையா குடுத்தாவ வே...''லோக்சபா தேர்தல் சமயத்துல, போலீசார் பற்றாக்குறையை காரணம் காட்டி, வார விடுப்பு தராம இருந்தாவ... தேர்தல் முடிஞ்சும், இதுவரைக்கும் வார விடுப்பு தரல வே...''இதனால, சட்டம் - ஒழுங்கு போலீசார் ரொம்பவே சிரமப்படுதாவ... உடம்பு சரியில்லாதவங்களை கூட, 'சில மணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்துடுங்க'ன்னு அதிகாரிகள் சொல்றதால, கடும் மன உளைச்சல்ல இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''இலக்கு நிர்ணயித்து மாமூல் வசூலிக்கறாங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா.''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.''பூட்டுக்கு பேர் போன ஊரின் மாநகராட்சிக்கு, போன ஜனவரியில மாநகர் நல அலுவலரா பெண் டாக்டர் வந்தாங்க... இவங்களுக்கு கீழே, 12 சுகாதார ஆய்வாளர்கள் இருக்கா ஓய்...''இந்த 12 ஆய்வாளர்களும், அவாவா ஏரியாக்கள்ல செயல்படற பிளாஸ்டிக் குடோன்கள், குட்கா கடைகள்ல இருந்து மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை வசூல் பண்ணி தரும்படி, 'டார்கெட்' குடுத்திருக்காங்க... இதுக்கு சில ஆய்வாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அவாளை மட்டும் கட்டம் கட்டி பழிவாங்கற மாதிரி செயல்பட்டிருக்காங்க ஓய்...''வேற வழியில்லாம, 12 ஆய்வாளர்களும் பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள், குட்கா வியாபாரிகளிடம் எவ்வளவு வசூல் செய்தோம்கற பட்டியலுடன் மாதா மாதம் பெண் டாக்டருக்கு லட்சக்கணக்குல கப்பம் கட்டறா... ஆய்வாளர்கள் வசூலிக்கறது எவ்வளவு, அதிகாரிக்கு தர்றது எவ்வளவு என்ற கணக்கை, மூத்த ஆய்வாளர் ஒருத்தர் கண்காணிக்கறார்...''இந்த வசூல் விவகாரத்தால, பிறப்பு, இறப்பு சான்றிதழ்ல கூட மாநகர நல அலுவலர் கையெழுத்து போடாம இருக்கறதால, அப்பாவி மக்கள் பாதிக்கப்படறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.