உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மேயருக்கு ஆதரவாக அடக்கி வாசிக்கும் அ.தி.மு.க.,

மேயருக்கு ஆதரவாக அடக்கி வாசிக்கும் அ.தி.மு.க.,

நாளிதழை மடித்தபடியே, ''கூண்டோடு மாத்திடுவார்னு சொல்லுதாவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''யாரை, எங்க மாத்த போறாங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''திருச்சி மாவட்டம், சமயபுரம் தனிப்பிரிவுபோலீஸ் ஒருத்தர், மணல் கடத்திய லாரியை பிடிச்சு, அதுல இருந்த மணலை ஒரு போலீஸ்காரருக்கு வித்துட்டதா ஏற்கனவே பேசியிருந்தோமுல்லா...''இது சம்பந்தமா விசாரிக்க, எஸ்.பி., வருண்குமார் உத்தரவு போட்டாரு... ஏ.டி.எஸ்.பி., நடத்தியவிசாரணையில, போலீசார் பறிமுதல் செய்து, ஸ்டேஷன் பக்கத்துல நிறுத்தி வச்சிருந்த லாரிகள்ல இருந்த மணலைஎஸ்.ஐ., ஒருத்தரும்,தனிப்பிரிவு போலீசும் சேர்ந்து, அதே போலீஸ்காரருக்கு சலுகை விலையிலவித்தது தெரியவந்துச்சு வே...''இதை கேள்விப்பட்டு எஸ்.பி., அதிர்ச்சி ஆகிட்டாரு... 'சமயபுரம் போலீஸ் ஸ்டேஷன்ல இன்னும் என்னென்ன தில்லுமுல்லு நடக்குது'ன்னு விரிவான விசாரணை நடத்த உத்தரவு போட்டிருக்காரு...''இதே மணல் விவகாரத்துல சிக்கி, கொள்ளிடம் போலீசார் கூண்டோடு மாத்தப்பட்டது மாதிரி, 'சமயபுரம்போலீசாரும் மாத்தப்படுவாங்க'ன்னு மாவட்ட போலீஸ் அதிகாரிகள் பேசிக்கிடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.''பைக் ரேஸ்க்கு முடிவு கட்டுனா நல்லாயிருக்கும் பா...'' என்றார், அன்வர்பாய்.''எந்த ஊர் விவகாரமுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஆத்துார், நரசிங்கபுரம் நகர் வழியா போகுது... இதுல, ஆத்துார் நகர் பகுதியில ராத்திரி நேரம் மற்றும் விடுமுறை நாட்கள்ல, இளைஞர்கள் பைக் ரேஸ்லஈடுபடுறாங்க பா...''விலை உயர்ந்த பைக்குகள்ல வர்ற இளைஞர்கள், பந்தயம் வச்சு அதிவேகத்துல ரேஸ் நடத்துறாங்க... இதனால, சாலையில போற மற்ற வாகனங்கள் பதறி ஒதுங்குது பா...''இதை கண்காணிச்சுநடவடிக்கை எடுக்க வேண்டிய போக்குவரத்து போலீசாரோ, ஹெல்மெட், சீட் பெல்ட் போடாம போறவங்களை பிடிச்சு, அபராதம் வசூலிக்கிறதுல தான் ஆர்வம் காட்டுறாங்க... பைக் ரேஸ்ல ஈடுபடுறவங்களால, அவங்களுக்கு மட்டுமில்லாம, சாலையிலபோற அப்பாவிகளுக்கும் ஆபத்து இருக்குது... இவங்களுக்கு கடிவாளம் போட்டா நல்லது பா...'' என்றார், அன்வர்பாய்.''தி.மு.க., மேயரை ஆதரிச்சவா மேல எந்த நடவடிக்கையும் இல்ல ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''காஞ்சிபுரம் தி.மு.க., மேயர் மகாலட்சுமிக்கு எதிரா, சொந்த கட்சி கவுன்சிலர்களே போர்க்கொடி துாக்கினாளோல்லியோ... இதனால, எட்டு மாசமா மன்ற கூட்டமே நடத்த முடியாம இருந்துது ஓய்...''ஒருவழியா போன வாரம், மேயர் தலைமையில் மன்ற கூட்டம் கூடியது... கூட்டம் நடத்த மொத்தமுள்ள, 51 கவுன்சிலர்கள்ல, 17 பேர் கலந்துக்கணும் ஓய்...''இதுல, 18 கவுன்சிலர்கள் வருகை பதிவேட்டுல கையெழுத்து போட்டு, மேயருக்கு ஆதரவா கூட்டம் நடத்த ஒத்துழைப்பு தந்தா... இதுல, 14 தி.மு.க.,வினர், மூன்று அ.தி.மு.க.,வினர் மற்றும் ஒரு சுயேச்சையும் அடக்கம் ஓய்...''அ.தி.மு.க.,வில் மூணு பேர் வராம புறக்கணிச்சிருந்தா, மேயரால கூட்டத்தை நடத்த முடிஞ்சிருக்காது... இதை மாவட்ட செயலரான சோமசுந்தரமும் கண்டுக்கல... பொதுவா, மேயர் விவகாரத்துல காஞ்சிபுரம் அ.தி.மு.க.,வினர் அடக்கியே வாசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
செப் 12, 2024 18:39

கார் ரேஸை அடுத்து அரசே பைக் ரேஸ் நடத்தும் நாள் வந்தால் இருக்கட்டுமென்று பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளவா போலீஸ் இருக்கிறது? மேயர் தன்னைக் ‘காப்பாற்றிக் கொடுத்த ‘ அதிமுக , சுயேச்சை கவுன்சிலர்களுக்கு டீலிங்குகளில் ‘நேயராக’ இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்