ஆயத்த ஆடையகம் அமைக்க மானியத்துடன் அரசு நிதியுதவி
செங்கல்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், ஆயத்த ஆடையகம், நவீன சலவையகம் ஆகியவை அமைக்க, மானியம் வழங்கப்படுகிறது என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் உள்ளனர். இவர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக, ஆயத்த ஆடையக உற்பத்தி மற்றும் நவீன சலவையகம் அலகு அமைக்க, தமிழக அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இத்திட்டங்களை செயல்படுத்த, இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில், தலா 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க, 10 நபர்கள் கொண்ட குழுவாக செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம், 1 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, செங்கல்பட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.