உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  நாசுக்காக மிரட்டி வாரி சுருட்டும் மா.க.வாரிய அதிகாரி!

 நாசுக்காக மிரட்டி வாரி சுருட்டும் மா.க.வாரிய அதிகாரி!

“நில எடுப்பு பணிகள்ல வாரி குவிக்கறா ஓய்...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா. “எந்த ஊருல பா...” என கேட்டார் அன்வர்பாய். “துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா, வெம்பூர் பகுதியில், தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகம் எனும், 'சிப்காட்' வளாகம் அமைக்கும் பணியை, கடந்த தி.மு.க., ஆட்சியில் துவங்கினா... இதுக்காக, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்துண்டு இருக்கு ஓய்... “இதுல ஈடுபட்டிருக்கும் வருவாய் துறையின் ரெண்டு அதிகாரிகள், நில உரிமையாளர்கள் பெயர்களை போலியா உருவாக்கி, அவாளுக்கு இழப்பீடு குடுத்ததா கணக்கு காட்டி, அரசு பணத்தை சுருட்டிக்கறா... நிலத்தின் நிஜமான உரிமையாளர்கள் ஆவணங்களோடு போய் இழப்பீடு கேட்டா, அவாளை மிரட்டி அனுப்பிடறா ஓ ய்... “அதுவும் இல்லாம, 'மாவட்ட நில எடுப்பு அதிகாரியை நாங்க சரிக்கட்டி வச்சிருக்கோம்... எங்க போய் புகார் குடுத்தாலும், எங்களை ஒண்ணும் பண்ண முடியாது'ன்னு மிரட்டலா பேசறா ஓய்...” என்றார் குப்பண்ணா. “ராமகிருஷ்ணன், நாகராஜன் வர்றாங்க... சங்கரலிங்கம் தள்ளி உட்காருங்க...” என்ற அந்தோணிசாமியே, “கறார் வசூல் அதிகாரி கதையை கேளுங்க...” என்றபடியே தொடர்ந்தார்... “சென்னை பக்கத்துல மாங்காடு நகராட்சி இருக்கு... இங்க சாலைகள், மழைநீர் கால்வாய், ஆழ்துளை கிணறுகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுறதுன்னு பல பணிகள் நடக்குதுங்க... “இந்த பணிகளை செய்ற ஒப்பந்ததாரர்களுக்கு, அதுக்கான பணத்தை விடுவிக்க, '2 சதவீதம் கமிஷன் வேணும்'னு நகராட்சி பெண் அதிகாரி கறாரா கேட்கிறாங்க... தராதவங்களுக்கு பணத்தை விடுவிக்காம இழுத்தடிக்கிறாங்க... “போன வாரம், ஒப்பந்ததாரர் ஒருத்தருக்கு பணத்தை விடுவிக்க, 32 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி எழுத்தர் வைத்தீஸ்வரனை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமா பிடிச்சாங்க... ஆனா, 'பெண் அதிகாரிக்கு வச்ச பொறியில, எழுத்தர் மாட்டிக்கிட்டார்'னு, அங்க வேலை செய்றவங்க புலம்புறாங்க...” என்றார் அந்தோணிசாமி. ஒலித்த மொபைல் போனை பார்த்த பெரியசாமி அண்ணாச்சி, “ராணி மேடம் கூப்பிடுதாங்க... அப்புறம் பேசிக்கலாம்...” என முணுமுணுத்தபடியே, “என்கிட்டயும் ஒரு வசூல் மேட்டர் இருக்குல்லா...” என்றபடியே தொடர்ந்தார்... “பெரம்பலுார் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்துல ஒரு அதிகாரி இருக்காரு... இவர், கல் குவாரி, கிரஷர் உரிமையாளர்களை மொபைல் போன்ல கூப்பிட்டு, 'உங்க கல் குவாரி, கிரஷர்ல இருந்து நிறைய துாசு, புகை பரவி, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துறதா ஏகப்பட்ட புகார்கள் வருது... இப்ப தான் ரெண்டு கிரஷர்களுக்கு, 'சீல்' வச்சுட்டு வந்தேன்... உங்களுக்கு எப்படி வசதி'ன்னு கேட்காரு வே... “இப்படி பேசினா, 'கப்பம் கட்டுங்க'ன்னு அர்த்தம்... அதேபோல, குவாரிகளுக்கு இவர் ஆய்வுக்கு போனா லஞ்சம் வாங்கறதும் இல்லாம, அவரது காருக்கு பெட்ரோல் செலவு, மதிய சாப்பாடும் ஏற்பாடு செய்ய சொல்லுதாரு வே... “புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க அனுமதி தரணும்னா, பெரிய தொகை வெட்டணும்... இதனால, 'இவரை பத்தி, துறையின் அமைச்சரிடமே புகார் செய்யலாம்'னு, கிரஷர் உரிமையாளர்கள் குமுறிட்டு இருக்காவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி. “சுகுமார், இங்க உட்காருங்க பா...” என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
செப் 16, 2026 20:32

மாற்றம். இல்லை திமுக, அதிமுகவின் மாற்றுக்கட்சிதான். என்பதை வந்து. 100. நாளிலேயே. நிரூபித்துவிட்டார்கள் 'லஞ்சம். கேட்டால், இது. 'விஜய். ஆட்சி லஞ்சம் தரமாட்டோம். என்று. கூறுங்கள்'. என்று. முழங்கினாரே , லஞ்சம். தினம்தினம். எப்படி. ஒழிகிறது என்று. பார்க்கட்டும்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ