உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ரூ.9 லட்சம் வழிப்பறி வழக்கில் தப்பிய போலீசார்!

ரூ.9 லட்சம் வழிப்பறி வழக்கில் தப்பிய போலீசார்!

டபராவில், பில்டர் காபியை ஆற்றியபடியே, ''ஹிட் லிஸ்டில் இருந்தவா எல்லாம் நிம்மதி பெருமூச்சு விட்டுண்டு இருக்கா ஓய்...'' என, பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.''யாரை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்''முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா போறதுக்கு முன்னாடி, 'அமைச்சரவை மாற்றம் இருக்குமா'ன்னு பத்திரிகையாளர்கள் கேட்டப்ப, 'பொறுத்திருந்து பாருங்கள்'னு பூடகமா சொல்லிட்டு போனாரோல்லியோ...''இதனால, துறை ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் புகார்கள்ல சிக்கியிருந்த அமைச்சர்கள் எல்லாம், குளிர் ஜுரம் வந்த மாதிரி நடுங்கிண்டு இருந்தா ஓய்...''ஆனா, மதுரை புத்தக திருவிழாவில், பள்ளி மாணவியர் நடன மாடியது, மேலுார்ல பள்ளி கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் பண்ணது, ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு விவகாரம்னு பள்ளிக்கல்வி துறை தொடர் சர்ச்சையில சிக்கிட்டே வரதே...''இதனால, அந்த துறையின் அமைச்சர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்காம, தங்கள் மீது மட்டும் முதல்வர் நடவடிக்கை எடுக்க முடியாதுங்கறதால, பயத்துல இருந்த அமைச்சர்கள் எல்லாம் இப்ப உற்சாகத்துல இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''முக்கியமான ரெண்டு போட்டிகளை கொண்டு வராம இருக்காங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''கோவை, பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள்ல, சிலம்பம், கராத்தே ஆகிய போட்டிகள் மட்டும் இதுவரைக்கும் கொண்டு வரலைங்க... இந்த விளையாட்டு களை கொண்டு வந்தா, பலமான எதிர் அணிகள் உருவாகி, நமக்கு தோல்வி கிடைச்சிடும்னு சில கல்வி நிறுவனங்கள் இந்த விளையாட்டுகளுக்கு முட்டுக்கட்டை போடுதுங்க...''அதுவும் இல்லாம, இந்த இரண்டு விளையாட்டுகளுக்கும் ஏராளமான சங்கங்கள் இருக்கிறதும், அவங்களுக்குள்ள ஒற்றுமை இல்லாம இருக்கிறதும், இன்னொரு முக்கிய காரணமுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''வேலியே பயிரை மேய்ந்த கதையை கேளுங்க வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''துாத்துக்குடி மாவட்டத்துல இருக்கிற ஒரு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,யும், போலீஸ்காரர் ஒருத்தரும், சமீபத்துல, பக்கத்து ஸ்டேஷன் எல்லையில் பைக்குல போன ஒருத்தரை வழிமறிச்சு நிறுத்தி, அவர் கொண்டு போன 9 லட்சம் ரூபாயை வழிப்பறி பண்ணிட்டாவ... ''அவருக்கு வழி செலவுக்கு, 500 ரூபாயை குடுத்து துரத்தி விட்டிருக்காவ வே...''பணத்தை பறிகொடுத்தவர், உயர் அதிகாரிகளிடம் புகார் பண்ணிட்டாரு... அவங்க விசாரிச்சதுல, பணத்தை ரெண்டு பேரும் வழிப்பறி பண்ணியது உறுதியாகிட்டு... உடனே, ஆடிப்போன ரெண்டு பேரும், பணத்தை திருப்பி தந்துட்டு, பைக் ஆசாமியிடம் மன்னிப்பு கேட்டு, புகாரை வாபஸ் பெற வச்சுட்டாவ வே...''போலீஸ் சீருடையில் வழிப்பறியில ஈடுபட்ட ரெண்டு பேரையும் நியாயமா கைது பண்ணி, 'உள்ள' தள்ளியிருக்கணும்... ஆனா, ரெண்டு பேரையும் சத்தமில்லாம ஆயுதப்படைக்கு மாத்தி, அதிகாரிகள் பிரச்னையை ஊத்தி மூடிட்டாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.டீ கடையில் கூட்டம் சேர ஆரம்பிக்க, பெரியவர்கள் வீட்டுக்கு கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
செப் 16, 2024 19:11

என்ன இருந்தாலும் தங்கள் துறை ஆட்களை உள்ளே தள்ளி பெயரைக் கெடுத்துக்கொள்வார்களா ? ஆனால் இப்படியே ஒவ்வொன்றுக்கும் மேலிடம் போய் சாதித்துக்கொள்ள எத்தனை பேரால் முடியும் ?


Kanns
செப் 16, 2024 06:56

Abolish Police Superior Officers as they have Completely Failed to Prevent Misuse of Powers, become Agents of MegaLoots and Wasteful Expenditures of TaxPaying Peoples Money


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை