உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சென்ற இடமெல்லாம் ஆவின் அதிகாரி திரிசமன்!

சென்ற இடமெல்லாம் ஆவின் அதிகாரி திரிசமன்!

''ஜாதி தலைவர்களை சந்திச்ச அதிகாரிகள் பட்டியல் எடுத்துட்டு இருக்காங்க...'' என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அந்தோணிசாமி.''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''தமிழகத்துல நடந்து முடிஞ்ச லோக்சபா தேர்தல்ல, பல தொகுதிகள்ல வேட்பாளர்களுக்கு ஜாதி ரீதியான ஆதரவு இருந்துச்சு... இதுல, பல போலீசாருக்கும் தொடர்பு இருந்திருக்குதுங்க...''இதனால, போலீஸ் உயர் அதிகாரிகளை கண்காணிக்கும்படி உளவுத்துறை போலீசாருக்கு அறிவுறுத்தி இருக்காங்க... அவங்களும், அதிகாரிகளை கண்காணித்து, அவங்களை யார் யார் சந்திக்கிறாங்க, அதுல சமுதாய தலைவர்கள், பிரமுகர்கள் யாரும் உண்டான்னு தகவல்கள் சேகரிச்சிருக்காங்க...''இந்த தகவல்களை ஒரு தொகுப்பா தயாரிச்சிட்டு இருக்காங்க... ஆட்சி மேலிடம் கேட்கிறப்ப, இந்த தொகுப்பை தரும்படி உத்தரவு வந்திருக்குது... தங்களுக்கு கீழே பணிபுரியும் சாதாரண போலீசார், தங்களை கண்காணிச்சதை கேள்விப்பட்டு, உயர் அதிகாரிகள் அதிருப்தியில இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.''கிட்டத்தட்ட, 85 லட்சம் ரூபாய் என்னாச்சுன்னு தெரியல வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''உடுமலை வனச்சரகத்தில், வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக தடுப்பணைகள், குடிநீர் தொட்டிகள் அமைக்க நபார்டு திட்டத்தின் கீழ், 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்குனாவ... ஆனா, பெயரளவுக்கு மட்டும் இந்த பணிகளை செஞ்சுட்டு, ஒட்டுமொத்த நிதியையும் சுருட்டிட்டாவ வே...''இப்ப, தடுப்பணைகள், குடிநீர் தொட்டிகள் எங்க இருக்குன்னே தெரியல... பல குடிநீர் தொட்டிகள் மாயமா மறைஞ்சிட்டு வே... வனப்பகுதியில குடிநீர் பற்றாக்குறையால, வனவிலங்குகள் ஊருக்குள்ள வந்துடுது... 'இது சம்பந்தமா, உயர் அதிகாரிகள் தீவிரமா விசாரணை நடத்தினா, பல முறைகேடுகள் அம்பலமாகும்'னு வன துறை ஊழியர்களே சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.''சிவகுமார் சார், ஊர்ல இருந்து எப்ப வந்தேள்...'' என, நண்பரிடம் விசாரித்த குப்பண்ணாவே, ''பொறி வச்சு புடிச்சுட்டால்லியோ...'' என்றார்.''யாரை, யாருப்பா பிடிச்சது...'' என கேட்டார், அன்வர்பாய்.''திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையில் இருந்து, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட, முறைகேடா, 1,620 லிட்டர் பால் எடுத்துட்டு போனதை, ஆவின் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் பண்ணால்லியோ... ''இது சம்பந்தமா, காக்களூர் பொது மேலாளர் ரமேஷ் குமார், 'சஸ்பெண்ட்' ஆகியிருக்கார்... இவர், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், ஆவின் நந்தனம் விற்பனை பிரிவு தலைமை அலுவலகத்துல பொது மேலாளரா இருந்தார் ஓய்... ''அப்பவும், பால் விற்பனை பண்ற மொத்த டீலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியதுல முறைகேடு செய்து, பணி மாறுதல் செய்யப்பட்டார்... அதே நந்தனம் விற்பனை பிரிவுல பொது மேலாளரா இருந்தப்ப, சில அதிகாரிகளுடன் சேர்ந்து தரமற்ற பொருட்களை வாங்கி, ஆவின் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கார் ஓய்...''இப்படி, போற இடமெல்லாம் திரிசமன் பண்றதே, அவருக்கு வாடிக்கையா போயிடுத்து... அதனால, இந்த முறை பல நாட்களா அவரை கண்காணிச்சு, முறைகேட்டை கையும், களவுமா பிடிச்சுட்டா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
மே 30, 2024 19:33

ஆவின் அனைத்து பால் பண்ணைகளிலும் திரிசம தில்லுமுல்லு சர்வ சாதாரணம். 1981 லேயே கிருஷ்ணகிரி பால்பண்ணையில் பார்த்துள்ளேன்


R.RAMACHANDRAN
மே 30, 2024 08:38

குற்றவாளிகளை விசாரணை இன்றி நிரந்தர பணி நீக்கம் செய்யாமல் தற்காலிக பணி நீக்கம் செய்வது இயன்றவரை அவர்களிடம் கரந்துகொண்டு மீண்டும் பணியில் சேர்த்து மீண்டும் ஊழல் செய்து பங்கு தருவதற்காகவே ஆகும்.


D.Ambujavalli
மே 30, 2024 06:43

ஒன்றும் நடக்காது அவரை அடுத்த ஊருக்கு மாற்றுவார்கள் அங்கும் இதே திரிசமன், பலவித பரிமாணங்களை செய்வார்


Dharmavaan
மே 30, 2024 02:55

ஆவின் அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் டிஸ்மிஸ் செய்யவில்லை. இங்கு தலையே கமிஷன் கரப்ஷன் கலெக்க்ஷனில் இதெல்லாம் நடப்பது என்ன ஆச்சரியம் அவனவன் அளவுக்கு லஞ்சம்


மேலும் செய்திகள்



புதிய வீடியோ