டில்லி மெட்ரோவில் முதல் பயணம் சாதனை படைக்கிறார் 65 வயது நபர்
புதுடில்லி: டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், புதிய வழித்தடத்தில் ரயில்களை இயக்கும் போது, முதல் நாளில் டிக்கெட் வாங்கி பயணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார், 65 வயதான அனில் மார்வா. டில்லியில் நேற்று முன்தினம், மஜ்லிஸ் பார்க்கிலிருந்து மாஜ்பூர் வரையும், மஜ்லிஸ் பார்க்கிலிருந்து, தீபாளி சவுக் வரையிலும் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில் சேவையை, பகல், 3:00 மணிக்கு, பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த புதிய ரயில் சேவையிலும், அனில் மார்வா, டில்லி மெட்ரோ ஸ்மார்ட் கார்டை புதிதாக வாங்கி, அதில் பயணித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: ஜப்பானில், நான், 1988 முதல், 1989 வரை வாழ்ந்துள்ளேன். அப்போது முதல், மெட்ரோ ரயில்களின் மீதான ஈர்ப்பு எனக்கு வந்து விட்டது. கடந்த, 2002ல் டில்லியில் மெட்ரோ ரயில் சேவை துவங்கியது. அப்போது முதல், நேற்று வரை, முதல் நாளில் பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். மெட்ரோ ரயில்களில் பயணிக்க, மெட்ரோ கார்டுகள் வழங்கப்படுகின்றன. அந்த கார்டுகளை வழங்கும் நாளில், முதல் நபராக பெற்று, முதல் நாளில் மெட்ரோ ரயில்களில் பயணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். இவர், ராஜேந்திரநகரில் வசிக்கிறார். அங்கிருந்து ஷாதாரா சென்று, மஜ்லிஸ் பார்க் மெட்ரோ ரயிலில் நேற்று முன்தினம் பயணம் செய்தார்.