உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மிரட்டலால் அலறும் கான்ட்ராக்டர்!

 ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மிரட்டலால் அலறும் கான்ட்ராக்டர்!

பில்டர் காபியை பருகியபடியே, “பண பலன்கள் தராம இழுத்தடிக்கறா ஓய்...” என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா. “எந்த துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய். “தமிழக மின் வாரியத்தில் வேலை பார்க்கற ஊழியர்கள் சிலர், மின் விபத்துகள் மற்றும் உடல்நலக் குறைவால இறந்து போயிருக்கா... இவாளது குடும்பத்தினருக்கு பண பலன்களும், வாரிசுகளுக்கு வேலையும் தரணும் ஓய்... “ஆனா, இவற்றை வழங்காம இழுத்தடிக்கறா... பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், அந்தந்த மாவட்ட மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் போய் கேட்டா, 'உங்களது ஆவணங்களை எல்லாம் சென்னை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிட்டோம்... அங்கிருந்து தான் பதில் வரணும்'னு சொல்றா... சென்னையில எல்லாத்துக்கும், 'லேட்' பண்றதால, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பரிதவிச்சுண்டு இருக்கா ஓய்...” என்றார் குப்பண்ணா. “பாலியல் தொல்லையால பாதிக்கப்பட்டிருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி. “யாரை சொல்றீர் ஓய்...” என கேட்டார் குப்பண்ணா. “சென்னை, அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனர் அலுவலக நிர்வாகத்துல ஒரு அதிகாரி இருக்காரு... இவர், தன் எல்லைக்குள்ள வர்ற ஸ்டேஷன்கள்ல பணிபுரியும் பெண் போலீசாரை, 'மீட்டிங்'னு சொல்லி, அலுவலகத்துக்கு கூப்பிட்டு வச்சு மணிக்கணக்குல அரட்டை அடிக்கிறாருங்க... “அப்ப, 'டபுள் மீனிங்'ல பேசி பெண் போலீசாரை சங்கடப்படுத்துறாரு... பக்கத்துல இருக்கிற அரசு குடியிருப்பில் தனியா வசிக்கும் அதிகாரி, தினமும் ஒரு பெண் போலீசை, வீட்டுல இருந்து சாப்பாடு எடுத்துட்டு வரும்படி சொல்றாருங்க... “ஏற்கனவே இந்த அதிகாரி, விருதுநகர்ல இருந்தப்ப பெண் போலீசாரிடம் அத்துமீறி நடந்த புகார்ல சிக்கி தான், சென்னைக்கு துாக்கியடிக்கப்பட்டாரு... சென்னையில் பூக்கடை, அமைந்தகரை, கோயம்பேடுன்னு இவர் வேலை பார்த்த இடங்கள்ல எல்லாம் பெண் புகார்ல சிக்கியிருக்காரு... அண்ணாநகர்லயும் அதே வேலையை தொடர்றதால, பாதிக்கப்பட்ட பெண் போலீசார் பலரும், உயர் அதிகாரிகளிடம் எழுத்துபூர்வமாகவே புகார் குடுத்திருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி. “ஜெயபிரகாஷ், இதையும் கேட்டுட்டு கிளம்பும்...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே, “போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு குடுத்திருக்காரு வே...” என்றபடியே தொடர்ந்தார்... “கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த த.வெ.க., - எம்.எல்.ஏ., ஒருத்தர், சென்னையைச் சேர்ந்த, 'கான்ட்ராக்டர்' ஒருத்தரிடம் தொழில் ரீதியா பெரிய தொகையை கடனா வாங்கியிருந்தாரு... இதுக்கு, 7 கோடி ரூபாய்க்கு, 'செக்' குடுத்திருக்காரு வே... “ஆனா, அது வங்கியில் பணமில்லாம திரும்பிட்டு... இதனால, எம்.எல்.ஏ., மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், கான்ட்ராக்டர் செக் மோசடி வழக்கு போட்டிருக்காரு வே... “இந்த வழக்கால தன் பதவிக்கு ஆபத்து வந்துடுமோன்னு பயப்படுற எம்.எல்.ஏ., 'வழக்கை வாபஸ் வாங்கு'ன்னு கான்ட்ராக்டருக்கு அடியாட்கள் மூலமா மிரட்டல் விடுத்திருக்காரு... இதனால, தனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு முதல்வர் மற்றும் சபாநாயகருக்கு, கான்ட்ராக்டர் மனு அனுப்பியிருக்காரு வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி. “வாரும், சண்முகன்... மொடக்குறிச்சியில் இருந்து எப்ப வந்தீர்...” என நண்பரிடம் குப்பண்ணா நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Anantharaman Srinivasan
ஜூலை 13, 2026 21:20

மக்கள் அரசியல் நிலவரம் / நடப்பை அறியாது, தராதரமின்றி தேர்ந்தெடுத்தால் அவனவன் தன் கை வீக்கமளவிற்கு மிரட்டி பிழைக்கத்தான் முயல்வான். இதில் தீயசக்தியென்ன தூயசக்தியென்ன..? பராசக்தி கூட அடங்கி விடுவாள்.


MARUTHU PANDIAR
ஜூலை 13, 2026 15:06

நடப்பது மைனாரிட்டி ஆட்சி என்பதை அவர் மறந்திருக்கலாம்.


VSMani
ஜூலை 13, 2026 12:19

தவெக MLA க்கள் எல்லாருமே ஒரு சிலரைத்தவிர நடுத்தர வகுப்பினர் என நினைத்தோம். மொடக்குறிச்சி சண்முகன்.சென்னையைச் சேர்ந்த, கான்ட்ராக்டர் ஒருத்தரிடம் தொழில் ரீதியா பெரிய தொகையை கடனா வாங்கியிருந்தாரு... இதுக்கு, 7 கோடி ரூபாய்க்கு, செக் குடுத்திருக்காரு ன்னா பெரிய ஆளாகத்தான் இருப்பாரு. ஒருவேளை, தவெக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் பணத்தை ஆட்டையப்போட்டு 7 கோடி ரூபாய் கடனை செலுத்திவிடலாம் என கணக்கு போட்டிருப்பாரோ? அல்லது வாங்கிய கடன் 7 கோடி ரூபாயை ஆட்டைய போட்டிரலாம் என நினைத்திருப்பாரோ? வழக்கை வாபஸ் வாங்குன்னு கான்ட்ராக்டருக்கு அடியாட்கள் மூலமா மிரட்டல் விடுகிற இவரை போல MLA க்களை வைத்துக்கொண்டு எப்படித்தான் விஜய் ஊழலலை ஒழிக்கப்போகிறாரோ? ஊழலுக்கே வெளிச்சம்.


duruvasar
ஜூலை 13, 2026 11:59

நடப்பது திமுகவின் கார்பன் காப்பி அரசுதான் என சொல்லவைக்கும் தினசரி நிகழ்வுகள் .


MARUTHU PANDIAR
ஜூலை 13, 2026 11:00

ஆல் பவர்புல் சி.எம் ஆபீசுக்கு ஒரு தினமலர் பிரதியை காம்ப்ளிமெண்டாக அனுப்பி வெச்சா ரொம்ப புண்ணியமாய் போகும். அதுவும், அடாவடி அத்து மீறல் லஞ்சம் போன்றவற்றையும் , டீக்கடை பெஞ்சை ப்ரத்யேகமாக ஹைலைட் செய்து அனுப்பினால் நலம். பி.கு: காமராசர் முதல்வராய் இருந்த போது இரவும் எத்தனை நேரம் ஆனாலும் அன்றைய தினசரியை படிக்காமல் உறங்கச் செல்ல மாட்டாராம். அரசின் நடப்பை தெரிந்து கொள்ளாமல் இருக்கவே மாட்டாராம்.


S. Venugopal
ஜூலை 13, 2026 14:02

கம்ப்லைன்ட்டை எப்படி காம்ப்ளிமென்ட்டா அனுப்பும்


Anantharaman Srinivasan
ஜூலை 13, 2026 21:11

மருது பாண்டியார் கவனத்துக்கு.. தினமலர் மட்டுமல்ல தமிழ்நாட்டில் பிரிண்ட் செய்யப்படும் அத்தனை பத்திரிகைகளும் தினமும் இரண்டு காப்பிகள் free யாக அனைத்து மந்திரிகளுக்கும் முதல்வர் ஆபீஸ்க்கும், தலா ஒரு காப்பி MLA / கெசட்டெட் அதிகாரிகளுக்கும் வினியோகிக்கப்படுகிறது. முதல்வர் அலுவலகத்தில் Fix செய்யப்பட்ட ஒரு அதிகாரி அன்றைய முக்கிய செய்திகளை மார்க் செய்து முதல்வர் பார்வைக்கு வைக்க வேண்டும். பத்திரிகை படிக்க இன்றைய முதல்வர்கள் என்ன காமராஜரா..?


S.V.Srinivasan
ஜூலை 13, 2026 09:57

ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. தொடர்கிறது. ஜெயப்ரகாஷ், ஷண்முகன் போன்ற ஆளுங்க அவனகுளா திருந்தினாதான் உண்டு. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற எம் ஜி ஆர் பட பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருது.