பசை பதவியில் பக்குவமாக நியமிக்கப்பட்ட அதிகாரி!
''த னிப்பட்ட நிகழ்ச்சிக்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்கிறாரு பா...'' என்றபடியே, நாயர் தந்த ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய். ''யாரு வே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை பொது கணக்கு குழு தலைவராகவும் இருக்காரு... இது சம்பந்தமா, தமிழகம் முழுக்க இவர் ஆய்வுக்கு போறப்ப, போலீஸ் பாதுகாப்பு தருவாங்க பா... ''சமீபத்துல, வேலுாருக்கு கட்சி நிகழ்ச்சி மற்றும் திருமண விழாவுக்கு இவர் போயிருக்காரு... அதுக்கும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு, வேலுார் எஸ்.பி.,க்கு கடிதம் அனுப்பியிருக்காரு... போலீஸ் அதிகாரிகளோ, 'ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கிறதால, ஓவரா பந்தா பண்றாரே'ன்னு புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''தி.மு.க.,வினரை கடுப்படிக்கிறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... ''மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழல் சம்பந்தமா, தி.மு.க., மேயர் இந்திராணி, ராஜினாமா பண்ணிட்டாங்கல்ல... இப்ப, மா.கம்யூ., கட்சியை சேர்ந்த துணை மேயர் நாகராஜன் தான், மேயர் பொறுப்பை கவனிக்கிறாருங்க... தினமும் அதிகாலையே வார்டுகள்ல ஆய்வுக்கு போறாரு... அதிகாரிகளையும் அழைச்சு வேலை வாங்குறாருங்க... ''இதுக்கு இடையில, துாய்மை பணியாளர்கள், 23 பேரை வேலையை விட்டு நீக்கிய, தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு எதிரா, மா.கம்யூ., கட்சியின் சி.ஐ.டி.யு., சங்கம், போராட்டத்தை அறிவிச்சது... நாகராஜன் உடனே கலெக்டர், மாநகராட்சி கமிஷனரை சமாதானம் பேச வச்சு, போராட்டத்தை வாபஸ் பெற வச்சிட்டாருங்க... ''அதோட, 23 தொழிலாளர்களையும் மீண்டும் வேலைக்கு சேர்க்க வச்சு, அவங்களுக்கு தீபாவளி போனசும் வாங்கி குடுத்துட்டாரு... 'தி.மு.க., மேயரே இருந்தாலும் இப்படி நிர்வாகம் பண்ண முடியாது'ன்னு, ஆளுங்கட்சியினரை, கம்யூனிஸ்ட்காரங்க வெறுப்பேத்திட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''முக்கிய பதவிக்கான அதிகாரி நியமன கதையை கேளுங்கோ ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... ''நீர்வளத்துறையின், சென்னை மண்டலம், பாலாறு வடிநில கோட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர் பணியிடம், 'பசை'யானது... வருஷம் முழுக்க பல நுாறு கோடி ரூபாய்க்கு வேலை நடக்கும் ஓய்... ''ஆறு மாசத்துக்கு முன்னாடி, துறையின் முக்கிய புள்ளியின் உதவியாளரை, 'கவனித்த' ஒருவர் இந்த பதவிக்கு வந்தார்... அதே பதவிக்கு காத்திருந்த இன்னொரு அதிகாரிக்கு, இணை பதவிதான் கிடைச்சது ஓய்... ''இது, 'டம்மி' பதவிங்கறதால, அவர் ரெண்டு மாசம் லீவ்ல போயிட்டார்... ஆனாலும், 'முதன்மை'யானவரின் உதவியாளரை பார்த்து, பசை பதவிக்கு காய் நகர்த்தினார்... உதவியாளரும், சட்டசபை கூட்டம் நடந்த நேரம், முதன்மையானவர், 'பிசி'யா இருந்த நேரமா பார்த்து, 'பசை' பதவிக்கான பைலை நீட்டி கையெழுத்து வாங்கிண்டார் ஓய்.. . ''இதுக்கு சில கோடிகள் கைமாறியிருக்கு... ஏற்கனவே பசை பதவியில் இருந்தவரை, இணை பதவிக்கு மாத்திட்டு, புதிய அதிகாரிக்கு பசை பதவியை குடுத்துட்டா... ஆறே மாசத்துல பதவியிழந்த அதிகாரி, புலம்பிண்டு இருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா. ஒலித்த மொபைல் போனை எடுத்த அண்ணாச்சி, ''அந்த நிலத்தை, மகேஷ்கிட்ட இருந்து செல்வகுமாருக்கு கைமாத்தி விட்டுட்டீரா வே...'' என, நண்பரிடம் பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.