சாமுண்டீஸ்வரி கோவிலில் மேம்பாட்டு பணிக்கு தடை
பெங்களூரு, மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் மேம்பாட்டு பணிகள் செய்யும் விஷயத்தில் மைசூரு அரச குடும்பத்தினர், காங்கிரஸ் அரசுக்கு இடையே நடக்கும் சட்ட போராட்டத்தில், அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. மைசூரின், சாமுண்டீஸ்வரி கோவில் அமைந்துள்ள சாமுண்டி மலையில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, காங்., அரசு திட்டமிட்டுள்ளது. புதிய சட்டம்
இதற்கு, மைசூரு மன்னர் குடும்பத்தினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். அரச குடும்பத்தின் பிரமோதா தேவி, 'சாமுண்டீஸ்வரி கோவில், எங்களின் குடும்ப சொத்து. எங்கள் அனுமதி இல்லாமல் அங்கு எந்த பணிகளும் நடத்த கூடாது' என, எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், மாநில அரசு, 'ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோவில் மேம்பாட்டு ஆணைய சட்டம் - 2024' ஐ இயற்றியது. இந்த சட்டம், சாமுண்டீஸ்வரி கோவில் மேம்பாட்டு ஆணைய தலைவரான முதல்வருக்கு, ஆணைய உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தாமல் முடிவு செய்யும் அதிகாரத்தை அளிக்கிறது. அரசு தலையிடாது
இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் பிரமோதா தேவி தாக்கல் செய்து உள்ள மனுவில், 'அரச குடும்பத்தினர், மாநில அரசு இடையிலான வழக்கு விசாரணையில் உள்ளது. இதற்கிடையில், இந்த சட்டத்தை அறிவித்துள்ளனர். இது சட்டவிரோதமானது' என, குறிப்பிட்டிருந்தார்.மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் தேவதாஸ், 'ஏற்கனவே வழக்கு விசாரணை கட்டத்தில் இருப்பது உண்மைதான். கோவிலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துக்கள் விற்கப்படாது. கோவிலின் சம்பிரதாயங்கள் மாற்றப்படாது. அதில் அரசு தலையிடாது' என்றார்.அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 'நீதிமன்ற உத்தரவு இல்லாமல், சாமுண்டீஸ்வரி கோவிலில் எந்த மேம்பாட்டு பணிகளும் நடத்த கூடாது. புதிய சட்டத்தின் கீழ், எந்த முடிவுகளும் எடுக்க கூடாது' என, அரசுக்கு உத்தரவிட்டது.