உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சீமான் கட்சியால் 50,000 ஓட்டுகளை அள்ள முடியுமா?

சீமான் கட்சியால் 50,000 ஓட்டுகளை அள்ள முடியுமா?

''கான்ட்ராக்டர்கள் எல்லாம் கலக்கத்துல இருக்கா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.''அவங்களுக்கு என்ன வே பிரச்னை...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''தமிழகம் முழுக்க, கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறா ஏறிடுத்து... ஆனாலும், அரசு துறை பணிகளுக்கு, பழைய விலைவாசி அடிப்படையில் தான், டெண்டர் தொகையை நிர்ணயிக்கறா ஓய்...''இதனால, கான்ட்ராக்டர்கள் யாரும் டெண்டர் எடுக்க ஆர்வம் காட்ட மாட்டேங்கறா... உதாரணமா, திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில், 32 கோடி ரூபாய் பணிகளுக்கு டெண்டர் அழைச்சிருக்கா ஓய்...''ஆன்லைன்லயே டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம்... ஆனா, தமிழகம் முழுக்க இருந்து ஒருத்தர் கூட விண்ணப்பிக்கல... 'பழைய ரேட்ல பணியை செய்து, நஷ்டப்பட முடியுமா'ன்னு கான்ட்ராக்டர்கள் கேக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''சீரமைப்பு பணிகள் தீவிரமா நடக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''விடுதலை சிறுத்தைகள் கட்சியில, 144 மாவட்டச் செயலர்கள் இருந்தாங்க... அந்த பதவிகளை எல்லாம் கலைச்சுட்டு, 234 தொகுதிகளுக்கும் தலா ஒருத்தர் வீதம், 234 மாவட்டச் செயலர்களை நியமிக்க இருக்காங்க...''ஏற்கனவே, சட்டசபை தொகுதிக்கு தலா ஒரு மேலிட பொறுப்பாளரை நியமிச்சிருக்காங்க... அந்த பொறுப்பாளர்கள், தொகுதியில் கட்சிப் பணிகளை சுறுசுறுப்பா செய்றவங்க யார் யார், சரியா செயல்படாதவங்க யார் யார்னு பட்டியல் எடுத்து, தலைமையிடம் குடுக்கிறாங்க...''இந்த பட்டியலை, தலைமையில இருக்கிற 10 பேர் குழு ஆய்வு செய்து, அதுல இருந்து தகுதியான ஒருத்தரை மாவட்டச் செயலரா தேர்வு செய்வாங்க...''இப்ப, கட்சியின் பொதுச் செயலர்களா ரவிகுமார் எம்.பி.,யும், சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ.,வும் இருக்காங்க... துணை பொதுச் செயலரா இருக்கிற வன்னியரசுக்கு பொதுச் செயலர் புரமோஷன் தரப் போறாங்க...''இப்ப, துணை பொதுச் செயலர்களா இருக்கிற சிலரை, உயர்மட்டக் குழு உறுப்பினர் பதவிக்கு நியமிச்சிட்டு, கட்சிக்கு நீண்டகாலமா உழைச்சிட்டு இருக்கிற சிலருக்கு துணை பொதுச் செயலர் பதவி தரவும் திருமாவளவன் முடிவு பண்ணியிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.''டிபாசிட் வாங்கிடணும்னு முடிவு பண்ணியிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.''ஈரோடு கிழக்கு தகவலா பா...'' என்றார், அன்வர்பாய்.''ஆமா... அங்க முக்கிய கட்சிகள் எல்லாம் ஒதுங்கிட்டதால, தி.மு.க.,வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தான் போட்டியே நடக்கு... ஆளுங்கட்சி வெற்றி உறுதின்னாலும், 'நாம் தமிழர் கட்சி ஓட்டு வங்கியை உயர்த்தணும்'னு, கட்சி நிர்வாகிகளிடம் சீமான் சொல்லியிருக்காரு வே...''கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சீதாலட்சுமியை வேட்பாளரா நிறுத்திட்டதால, அந்த சமுதாயத்தினர் ஓட்டுகளை அள்ளிடலாம்... அதுவும் இல்லாம, அ.தி.மு.க., - பா.ஜ., - த.மா.கா., போன்ற கட்சியினரின் ஓட்டுகளும் தங்களுக்கு கிடைக்கும்னு சீமான் நினைக்காரு வே...''கடந்த இடைத்தேர்தல்ல இளங்கோவன் ஜெயிச்சப்ப, சீமான் கட்சி 10,000 ஓட்டுகள் வாங்குச்சு... இந்த முறை பிரதான கட்சிகள் இல்லாததால, 50,000 ஓட்டுகளுக்கு மேல வாங்கி, டிபாசிட்டையும் தக்கவச்சுக்கணும்னு திட்டமிட்டு, தேர்தல் பணிகளை சீமான் செய்யுதாரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

வல்லவன்
ஜன 23, 2025 14:32

சீமானெல்லாம் ஒரு தலைவன்னு ஊரே சிரிக்குது


என்றும் இந்தியன்
ஜன 17, 2025 16:49

தவறான நம்பர். சீமான் கட்சியால் 5000 ஓட்டுகளை அள்ள முடியுமா என்று கேட்க வேண்டும்


RAVINDRAN.G
ஜன 17, 2025 15:20

பட்டி பார்முலா இந்த தடவை இருக்காது . ஏன்னா அதிமுக , பிஜேபி களத்தில் இல்லை ஆகையால் மக்களுக்கு கூலி கம்மியா கொடுத்தால் போதும். அதையும் வாங்காம விடுவார்களா? வந்த வரைக்கும் லாபம்னு வாங்குவாங்க. ஓட்டுக்கு காசு வாங்கும் மக்கள் இருக்கும்வரை இந்த கேடு கெட்ட ஆட்சியாளர்கள் கை தான் ஓங்கி இருக்கும். இதனால் உண்மையா சிந்தித்து ஓட்டு போடுறவனும் பாதிக்கப்படுகிறான்.


Dharmavaan
ஜன 17, 2025 07:01

ஒரு மாற்றத்துக்காக சீமான் கட்சி ஜெயிக்க வேண்டும்


D.Ambujavalli
ஜன 17, 2025 07:00

வாக்காளர்களை பட்டி ஆடுகளாக அடைத்த ஒட்டு வாங்க வேண்டாம் ஆனால் ஒன்று பாவம் மக்களுக்கு 200/ 300 வருமானம் போய்விடுமே ஒருவேளை இந்த வெறுப்பிலேயே சீமான் கட்சிக்கு போட்டாலும் போட்டு விடுவார்கள்