ஏ லக்காய் டீயை பருகியபடியே, ''வாரத்துக்கு, 1 கோடி ரூபாயை செலவழிச்சிருக்காங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய். ''யாரு வே அந்த பெரும் புள்ளி...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல ஊழல் நடந்திருக்குன்னு, அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருக்கே... ''இது சம்பந்தமா, தமிழக அரசின் தலைமைச் செயலர், டி.ஜி.பி., மற்றும் லஞ்ச ஒழிப்பு து றைக்கு, அமலாக்கத் துறையினர் அனுப்பிய கடிதத்தில், நேருவின் உறவினர் ஒருத்தர், அவரது வலது கரங்களா செயல்படும் இருவர் பெயர்களை குறிப்பிட்டிருக்காங்க பா... ''இதுல, உறவினருக்கும், அவரது வலது கரத்தில் ஒருத்தருக்கும், சென்னை கோடம்பாக்கம் சினிமா வட்டாரங்கள்ல நிறைய தொடர்புகள் இருக்கு... இந்த ரெண்டு பேரும், வார இறுதி நாட்கள்ல கோடம்பாக்கத்துல முகாமிட்டு, 'ஜாலி'யா இருப்பாங்களாம் பா... ''அப்ப, 80 லட்சம் முதல், 1 கோடி வரைக்கும் பணத்தை தண்ணீரா செலவு பண்ணியிருக்காங்க... 'இந்த பணம் எப்படி இவங்களுக்கு வந்துச்சு'ன்னு கோடம்பாக்கம் பக்கம், அமலாக்கத் துறை ரகசிய விசாரணையை துவங்கிடுச்சு பா...'' என்றார், அன்வர்பாய். ''ரவிச்சந்திரன், செல்வமணி இப்படி உட்காருங்க...'' என, நண்பர்களுக்கு இடம் தந்த அந்தோணிசாமியே, ''கந்து வட்டிக்கு பணம் வாங்கி, குடும்பம் நடத்துறாங்க...'' என்றபடியே தொடர்ந்தார்... ''சென்னை மாநகராட்சியின், திரு.வி.க., நகர் மண்டலத்துல வர்ற, 73வது வார்டில் இருக்கிற பூங்காக்களை பராமரிக்கிற பணிகளை, தனியார் நிறுவனத்திடம் குடுத்திருக்காங்க... இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, மூணு மாசமா சம்பளம் தரலைங்க... ''இதனால, ஊழியர்கள் குடும்பம் நடத்த ரொம்பவே சிரமப்படுறாங்க... நிறைய ஊழியர்கள், கந்து வட்டிக்கு கடன் வாங்கி சமாளிச்சிட்டு இருக்காங்க... 'வர்ற பொங்கலுக்குள்ள சம்பள பாக்கியை தந்தாங்கன்னா, மகிழ்ச்சியா பொங்கல் கொண்டாட முடியும்'னு புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''அரசின் புதிய அறிவிப்பு, ஆர்.டி.ஓ., அதிகாரிகளுக்கு வசதியா போயிடுத்து ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் குப்பண்ணா. ''என்ன அறிவிப்பை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''புதுசா கார், பைக் வாங்கினா, அதை ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு எடுத்துண்டு போய் பதிவு செய்யணுமோல்லியோ... இதுல, பைக்குக்கு 500 ரூபாய், கார்னா 1,000 ரூபாய்னு அதிகாரிகளுக்கு, 'கப்பம்' கட்டணும் ஓய்... ''புது வாகனங்களை விற்பனை பண்ற டீலர்கள், இதை எல்லாம் தங்களது வாடிக்கையாளர்களிடம் வசூல் பண்ணிடுவா... இப்ப, 'புதுசா வாங்கற வாகனங்களை ஆர்.டி.ஓ., ஆபீஸ்களுக்கு எடுத்துண்டு வர வேண்டாம்'னு அரசு உத்தரவு போட்டிருக்கு ஓய்... ''இதனால, வாகனங்களை பதிவு பண்றதுக்கான, 'கட்டிங்'கை, ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் உசத்திட்டா... கேட்டா, 'நீங்க பைக், கார்களை இங்க கொண்டு வரதுக்கு டிரைவர், மற்றும் பெட்ரோல் செலவு எல்லாம் மிச்சம் தானே... அதை எங்களுக்கு தந்துடுங்கோ'ன்னு அசால்டா சொல்றா... ''வேற வழியில்லாம இந்த பணத்தை குடுக்கற டீலர்கள், அந்த செலவை வழக்கம் போல வாடிக்கையாளர்கள் தலையில கட்டிடறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா. அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.