நண்பர்கள் மத்தியில் அமர்ந்ததுமே, ''ஆளுங்கட்சி புள்ளி, அ.தி.மு.க.,வுக்கு தாவிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தெற்கு பகுதி தி.மு.க., செயலரா இருந்தவர் திம்மராஜ்... குரும்பர் சமூகத்தைச் சேர்ந்த இவர், வேப்பனஹள்ளி தொகுதியில், 2021 சட்டசபை தேர்தல்ல, 'சீட்' கேட்டு கிடைக்கல பா... ''அப்புறமா மாநகராட்சி கவுன்சிலர் சீட் கேட்டு, அதுவும் கிடைக்காம அதிருப்தியில் இருந்தாரு... 'கிருஷ்ணகிரி தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் பிரகாஷ், எங்க சமூகத்தை புறக்கணிக்கிறார்'னு பகிரங்கமாகவே புலம்பிட்டு இருந்தாரு பா...''இப்ப, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி மூலமா, சேலம் போய் பழனிசாமி முன்னிலையில, அ.தி.மு.க.,வுல சேர்ந்துட்டாரு... 25க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களையும் கூடவே கூட்டிட்டு போயிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.''மிரட்டியே வசூல் பண்றார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''பெரம்பலுார் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரி ஒருத்தர், 'நான் சொல்ற கடைகள்ல தான், ஊராட்சிகளுக்கு மின் மோட்டார் வாங்கணும்'னு உத்தரவு போட்டிருக்கார்... ஒரு மோட்டார் 1.75 லட்சம் ரூபாய்னு கூடுதல் விலைக்கு விற்க சொல்லி, கமிஷன் தொகையை, அந்த கடைகள்ல வாங்கிக்கறார் ஓய்...''தனக்கு கீழே பணிபுரியும் அலுவலர்களை ஜாதி ரீதியா திட்டி, தவறான பைல்கள்ல கையெழுத்து போடச் சொல்றார்... மறுத்தா, 'திட்ட இயக்குநரிடம் சொல்லி, உன்னை இடமாறுதல் பண்ணிடுவேன்'னும் மிரட்டறார்...''ஏற்கனவே, வேப்பந்தட்டை ஒன்றியத்துல இவர் இருந்தப்ப, லஞ்ச ஒழிப்பு துறை வழக்குல சிக்கி, அது இன்னும் நிலுவையில இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே, ''அறிவழகன் இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்தார்.'மோசடி நபரை காப்பாத்த துடிச்சாரான்னு பட்டிமன்றம் நடக்கு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.''திருப்பூர் மாநகராட்சி, அனுப்பர்பாளையம் - 1 ரேஷன் கடையில், 2,900 கிலோ அரிசி, 70 கிலோ துவரம் பருப்பு, 40 கிலோ சர்க்கரை குறைச்சலா இருந்துச்சு... இந்த வகையில, 80,000 ரூபாய் வரை மோசடி நடந்திருக்கிறதை கூட்டுறவு துறையினர் கண்டுபிடிச்சாவ வே...''பொதுவா, 5,000 ரூபாய்க்கு குறைவான இழப்புன்னா, கூட்டுறவு துறையே நடவடிக்கை எடுத்து முடிச்சிடும்... அதுக்கும் மேலான தொகைக்கு இழப்புன்னா, 'புட்செல்' போலீசுக்கு வழக்கு போயிடும் வே...''அனுப்பர்பாளையம் கடையின் விற்பனையாளர், இந்திய கம்யூ., கட்சியின் தொழிற்சங்க நிர்வாகியா இருக்காரு... இதனால, திருப்பூர் தொகுதி இந்திய கம்யூ., - எம்.பி.,யான சுப்பராயன் ஆபீஸ்ல இருந்து, 'பிரச்னையை கூட்டுறவு துறையிலயே முடிச்சு விடுங்க'ன்னு சொல்லி இருக்காவ வே...''இதை கேள்விப்பட்ட மற்ற கட்சிகளின் தொழிற்சங்கத்தினர், 'இதை நாங்க சும்மா விட மாட்டோம்'னு கொந்தளிச்சுட்டாவ... இதனால, கூட்டுறவு துறையினர் வேற வழியில்லாம, பிரச்னையை புட்செல் போலீசாருக்கே அனுப்பிட்டாவ... இப்ப கடையின் விற்பனையாளரை, 'சஸ்பெண்ட்' பண்ணியிருக்காவ வே...''அதே நேரம், 'எம்.பி.,க்கு தெரியாமலா, அவரது ஆபீஸ்ல இருந்து பேசியிருப்பாங்க'ன்னு, கூட்டுறவு துறை அதிகாரிகள் முணுமுணுத்துட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடிய நண்பர்கள் நகர்ந்தனர்.