இன்று 60 மின்சார ரயில்கள் ரத்து அதிருப்தி! தீபாவளி ஷாப்பிங் செய்ய சிரமம்
சென்னை, தீபாவளி பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், வார விடுமுறை நாளான இன்று, புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் வாங்க, குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் இன்று, 60க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் ரத்து செய்திருப்பது, பயணியரிடையே ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.தீபாவளி பண்டிகை, வரும் 31ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ள பொதுமக்கள், ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை, நேரம் கிடைக்கும்போது வாங்கி வருகின்றனர்.கடந்த சில நாட்களாகவே, தாம்பரம், மாம்பலம், பிராட்வே, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள பெரிய ஜவுளி, நகை கடைகளில் தீபாவளி ஷாப்பிங் செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.இன்று வார விடுமுறை என்பதால், பெரும்பாலான குடும்பத்தினர், ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக, புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்வர்.இந்நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் இன்று அதிகாலை 4:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, வழக்கமான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக, நேற்று முன்தினம் இரவு, சென்னை ரயில் கோட்டம் திடீரென அறிவித்தது.இதற்கு மாற்றாக, 20 நிமிட இடைவெளியில் இரு மார்க்கத்திலும், 35 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.அதேபோல், கடற்கரை - திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடத்திலும், ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில், வழக்கமான ரயில்களை இன்று ரத்து செய்திருப்பது, பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் சடகோபன் கூறியதாவது:தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதாவது, இன்று ஷாப்பிங் செல்ல, பலரும் முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில், மின்சார ரயில்களை ரத்து செய்வது, பயணியருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆட்டோ, கால் டாக்சிகளில் சாதாரண நாட்களிலேயே, பல மடங்கு கட்டணம் வசூலிக்கும் நிலையில், மின்சார ரயில்கள் ரத்து செய்திருப்பது, மேலும் கூடுதல் கட்டண வசூலிக்க வழிவகுக்கும்.பராமரிப்பு பணிகளை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். அல்லது பண்டிகை முடிந்த பின் மேற்கொள்ள வேண்டும்.பண்டிகை நாட்களில் கூடுதல் மின்சார ரயில்களை இயக்குவர் என எதிர்பார்த்த நிலையில், வழக்கமான ரயில்களை கூட ரத்து செய்திருப்பது, பயணியருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.சிறப்பு ரயில் உண்டுஎழும்பூர் - கடற்கரை இடையே, 4வது புது பாதை பணி மற்றும் கடற்கரை பணிமனை மேம்பாட்டு பணியால், இன்று வழக்கமான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.இருப்பினும், 20 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாலை 5:00 மணிக்கு பின், ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் ஓடும்.- தெற்கு ரயில்வே அதிகாரிகள்