உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மெமோ நடவடிக்கையால் அரசு மீது டாக்டர்கள் அதிருப்தி!

மெமோ நடவடிக்கையால் அரசு மீது டாக்டர்கள் அதிருப்தி!

''ஆ ட்சியை பிடிக்கிறதுக்கான வியூகத்தோட வாங்கன்னு அனுப்பிட்டாரு பா...'' என்ற படியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய். ''எந்த கட்சி விவகாரம் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா. ''புதுச்சேரி மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், சமீபத்துல டில்லியில் ராகுலை சந்திச்சு பேசியிருக்காங்க... அப்ப, அவங்களை ராகுல் பேசவே விடலையாம் பா... ''அதாவது, '2021 சட்டசபை தேர்தல்ல, புதுச்சேரியில் நாம ஏன் தோல்வி அடைஞ்சோம்னு எண்ணி பாருங்க... சும்மா ஒருத்தர் மேல ஒருத்தர் குறை சொல்லிட்டு இருக்காதீங்க... 2026 சட்டசபை தேர்தல்ல, ஜெயிக்கிறதுக்கான வியூகங்களை வகுத்துட்டு வாங்க'ன்னு கறாரா சொல்லி அனுப்பிட்டாராம் பா...'' என்றார், அன்வர்பாய். ''பாட்டியின் புகாரால பதற்றத்துல இருக்காவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''சென்னை, ராமாபுரத்தைச் சேர்ந்தவங்க, 78 வயது மூதாட்டி உமையவள்ளி... இவங்களுக்கு செங்கல்பட்டு , ஒத்திவாக்கம் கிராமத்தில், 12.5 சென்ட் நிலம் இருக்கு வே... ''ஆனா, இந்த நிலத்துக்கான பட்டாவை , ஞானப்பிரகாசம் என்பவர் உள்ளிட்ட சிலருக்கு அதிகாரிகள் முறைகேடா குடுத்துட்டாவ... ''திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் மூதாட்டி வாங்கிய வில்லங்க சான்றிதழ்ல, '1987 முதல் 2025 ஜூன் 22 வரை, எந்த பத்திரமும் பதிவாகல'ன்னு தெரியவந்திருக்கு வே... ''இப்படி பத்திரமே பதிவாகாத நிலத்துக்கு அதிகாரிகள் சிலர், 'கட்டிங்' வாங்கிட்டு பட்டா குடுத்திருக்காவ... இதை எதிர்த்து மூதாட்டி கோர்ட்ல வழக்கு போட்டு, ஜெயிச்சுட்டாங்க வே... ''அப்புறமும் மூதாட்டி அசரல... லஞ்சம் வாங்கி, சட்டவிரோதமா என் நிலத்துக்கு பட்டா குடுத்த, அப்ப பணியில இருந்த வி.ஏ.ஓ., நில அளவை துணை ஆய்வாளர், வண்டலுார் தாசில்தார் , தாம்பரம் ஆர்.டி.ஓ., ஆகியோர் மீதும், அவங்க மீது நடவடிக்கை எடுக்க தவறிய டி.ஆர்.ஓ., மற்றும் கலெக்டர் மீதும், லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் குடுத்துட்டாங்க... ''இதனால, இந்த விவகாரத்துல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எல்லாம் நடுக்கத்துல இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி. ''வெந்த புண்ணுல வேலை பாய்ச்சறான்னு புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு டாக்டர்கள் பல போராட்டங்களை நடத்திண்டு வரால்லியோ... ''கொரோனா நேரத்துல பணியாற்றி உயிரிழந்த டாக்டர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி, சேலத்துல இருந்து சென்னையில கருணாநிதி நினைவிடம் வரை, சமீபத்துல டாக்டர்கள் பாதயாத்திரை நடத்தினாளே ஓய்... ''அவாளை தேனாம்பேட்டையிலயே தடுத்து போலீசார் கைது பண்ணிட்டா... இப்ப, இவாளுக்கு எல்லாம், 'மெமோ' குடுக்க சுகாதாரத் துறை முடிவு பண்ணிடுத்து ஓய்... ''முதல் கட்டமா, டாக்டர்கள் சங்க தலைவர் பெருமாள் பிள்ளையிடம் விளக்கம் கேட்டு, சென்னை மருத்துவ கல்லுாரி முதல்வர் மெமோ அனுப்பியிருக்கார்... அவரது விளக்கத்தை பொறுத்து, மற்ற டாக்டர்களுக்கும் மெமோ தரணுமா, வேண்டாமான்னு முடிவு பண்ண போறாளாம்... ''இதை கேள்விப்பட்ட அரசு டாக்டர்கள், 'கால்ல கொப்புளங்கள் வர்ற அளவுக்கு, காந்திய வழியில் பாதயாத்திரை நடத்தியது தப்பா'ன்னு புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா. அரட்டை முடிய, பெரியவர்கள் நகர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஆக 03, 2025 17:00

அந்தப் பெண்மணியின் இந்தத் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள் ஆனால் அவருக்கும், அவருடைய குடும்பத்துக்கும் எத்தனை, மிரட்டல்கள், தடங்கல்கள் வருமோ என்பதுதான் கவலையாக இருக்கிறது


Mrs. Marie-Thérèse Evariste
ஆக 03, 2025 02:38

I am a regular reader for the past several years, and to the best of my remembrances, I have never seen topics / problems of my native place, Pondichéry State in this "Tea Kadai Bench" discussions. Today, I am extremely happy to know about my native place also. As the 2026 elections are fast approaching, hope from time to time, you will continue to discuss on the problems of our Pondichéry also. Thanking you in advance.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை