மேலும் செய்திகள்
முதல்வர் அலுவலகம் பெயரில் மிரட்டும் அதிகாரி!
11-Sep-2025
ப டித்துக் கொண்டிருந்த நாளிதழை மடித்தபடியே, ''இரட்டை குழல் துப்பாக்கியா செயல்பட்டு, வசூலை வாரி குவிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி. 'சென்னை மாநகராட்சி, 110வது வார்டு நுங்கம்பாக்கத்துல, ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருக்கு... குறிப்பா, பொன்னங்கிபுரம் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவுநீரால், பொதுமக்கள் நடக்கவே முடியாம சிரமப்படுறாங்க பா... ''இதை எல்லாம், மாவட்ட தி.மு.க.,வில் முக்கிய பதவியில் இருக்கிற, அந்த ஏரியா கவுன்சிலர் கண்டுக்கவே மாட்டேங்கிறாரு... ''அந்த பகுதி ஆளுங்கட்சியின் ரெண்டு வட்ட செயலர்களும், குடிநீர் இணைப்புக்கு லட்சக்கணக்கில், 'கட்டிங்' வசூல் பண்ணி, முக்கிய புள்ளிக்கும் பங்கு குடுத்து, அவரிடம் நல்ல பெயர் வாங்குறாங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''தினேஷ், குணா, சிற்றரசு எல்லாம் சேர்ந்து வரா... பில்டர் காபி குடும் நாயரே...'' என்ற குப்பண்ணாவே, ''சிறுபான்மையினரை கவரும் பணிகள் துவங்கிடுத்துன்னு சொல்றா ஓய்...'' என்றார். ''தி.மு.க.,வை சொல்லுதீரா...'' என பட்டென கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''ஆமா... சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூரில், புகழ் பெற்ற திரு இருதய ஆண்டவர் சர்ச் இருக்கு... இதை, பழமை மாறாம புதுப்பிச்சு, அருங்காட்சியகம் அமைக்கற பணிகளுக்காக, தமிழக அரசு, 1.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கு ஓய்... ''சமீபத்தில், ராமநாதபுரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சிகள்ல கலந்துக்க, மதுரையில் இருந்து கார்ல கிளம்பிய முதல்வர் ஸ்டாலின், இந்த சர்ச் பணிகளை பார்வையிட்டார்... அவர் சர்ச்சுக்கு வர போறதா, சில மணி நேரத்துக்கு முன்னாடி தான், அதிகாரிகளுக்கு தகவல் வந்திருக்கு ஓய்... ''சர்ச்சுல எந்த புனரமைப்பு பணிகளும் துவங்காத நிலையில், முதல்வர் வர்றார்னதும், அருங்காட்சியகம் கட்டும் இடத்தில், அவசர, அவசரமா மூணு குழிகளை தோண்டி வச்சா... முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ராத்திரி, 8:30 மணிக்கு அங்க வந்து சில நிமிடங்கள் ஆய்வு பண்ணிட்டு, ராமநாதபுரம் கிளம்பிட்டா ஓய்... ''சீக்கிரமே தேர்தல் வர்றதால, சிறுபான்மையினரை கவர முதல்வர் திடீர் விசிட் அடிச்சிருக்கார்னு லோக்கல் அ.தி.மு.க.,வினர் விமர்சனம் பண்ணிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''கடும் அதிருப்தியில இருக்காவ வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''தமிழக மின் வாரியத்தின் கள பிரிவில், 30,000 உட்பட, 50,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருக்கு... இதுல, கள உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு, 10,200 பேரை நியமிக்க , அரசிடம் வாரியம் அனுமதி கேட்டுச்சு வே... ''ஆனா, ரெண்டு வருஷமா இழுத்தடிச்ச அரசு, கடைசியா, 1,850 கள உதவியாளர் களை நியமிக்க அனுமதி தந்திருக்கு... பல ஆயிரம் பணியிடங்கள் காலியா இருக்கிற சூழல்ல, சொற்ப எண் ணிக்கைக்கு மட்டும் அனுமதி தந்த அரசு மீது, தொழிற்சங்கங்கள் எல்லாம் கடும் அதிருப்தி யில் இருக்கு வே... ''இது சம்பந்தமா, வாரிய உயர் அதிகாரிகளிடம் சங்க நிர்வாகிகள் முறையிட்டிருக்காவ... அவங்களும், 'அரசிடம் பேசி, கூடுதல் பணியிடங்களை நிரப்ப அனுமதி வாங்குதோம்'னு சொல்லியிருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி. அரட்டை முடிய, நண்பர்கள் கிளம்பினர்.
11-Sep-2025