வாசகர்கள் கருத்துகள் ( 1 )
danalakshmi govindaya namaha
மெ து வடையை சட்னியில் புரட்டியபடியே, ''காங்கிரஸ் கட்சியினரை கண்டுக்கலன்னு புலம்பறா ஓய்...'' என்றபடியே, பெஞ்ச் நண்பர்களை ஏறிட்டு பார்த்தார் குப்பண்ணா. ''ஆளுங்கட்சி தகவலாங்க...'' என பட்டென கேட்டார், அந்தோணிசாமி. ''ஆமா... சென்னை சூளைமேடு திருவேங்கடபுரம் பகுதியில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் இருக்கு... கோவிலின் அறங்காவலர் உறுப்பினர்கள் பதவிக்கு, சமீபத்தில் அஞ்சு பேரை நியமிச்சிருக்கா ஓய்... ''இதுல, நாலு பேர் தி.மு.க.,வினர்... அவாளும் கூட, அந்த பகுதியைச் சேர்ந்தவா இல்லையாம்... அந்த பகுதியைச் சேர்ந்த காங்., நிர்வாகியின் தந்தை தான், இந்த கோவிலை அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்தார் ஓய்... ''அவரது பேரனுக்கு அறங்காவலர், உறுப்பினர் பதவி கேட்டிருக்கா... ஆனா, அவருக்கு வழங்காம, தினகரன் நடத்தும், அ.ம.மு.க., கட்சி நிர்வாகிக்கு அஞ்சாவது உறுப்பினர் பதவியை அறநிலைய அதிகாரிகள் குடுத்துட்டா ஓய்... ''அதுவும் இல்லாம, கோவில்ல, 10 முதல் 15 வருஷங்களா பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் தரல... அவாளை பணி நிரந்தரமும் செய்யாம இழுத்தடிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''வார விடுப்பு கிடைக்காம தவிக்கிறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அன்வர்பாயே தொடர்ந்தார்... ''விருதுநகர் எஸ்.பி.,யா ஸ்ரீனிவாச பெருமாள் இருந்த வரை, தனிப்பிரிவு போலீசாருக்கு சுழற்சி முறையில் வார விடுப்பு குடுத்தாரு... அவரை மாத்திட்டு, பெரோஸ் கான் அப்துல்லா, கண்ணன்னு அடுத்தடுத்து புதிய எஸ்.பி.,க்கள் வந்தாங்க பா... ''ஆனா, ஸ்ரீனிவாச பெருமாள் போன பிறகு, தனிப்பிரிவு போலீசாருக்கு வார விடுப்பு தர்ற வழக்கமும் போயிடுச்சு... அடுத்தடுத்து வந்த ரெண்டு எஸ்.பி.,க்களும் இதை கண்டுக்கல பா... ''இதனால, தனிப்பிரிவு போலீசார் வெறுத்து போயிருக்காங்க... 'தீபாவளி சமயத்துல கூட, குழந்தைகளுக்கு ஜவுளி, பட்டாசுகள் வாங்க போக முடியாம டூட்டி பார்க்கிறோம்'னு புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''ஓடையில் கட்டடம் கட்டியவரை மிரட்டியே பல லட்சம் ரூபாய் வசூல் பண்ணிட்டாங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அந்தோணிசாமி. ''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''பெரம்பலுார் பாலக்கரை பகுதியில், துறைமங்கலம் ஏரிக்கு தண்ணீர் போகும் பெரிய ஓடைக்கு பக்கத்துல, தனியார் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருத்தருக்கு கொஞ்சம் நிலம் இருந்துச்சு... அவர், தன் இடத்தோட ஓடையை முழுசா ஆக்கிரமிச்சு, ஓடைக்கு மேல பாலமும் கட்டிட்டாருங்க... ''இப்ப, அதன் மீது கட்டடமும் கட்டிட்டு இருக்காரு... இதை பார்த்த சில கட்சிகளின் உள்ளூர் பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் சிலர், இதை கண்டிச்சு போராட்டம் நடத்தப் போறதா தொழிலதிபரை மிரட்டி, சில லட்சம் ரூபாயை கறந்துட்டாங்க... ''தகவலை கேள்விப்பட்டு, கலெக்டர் மிருணாளினியும் அந்த இடத்தை நேர்ல போய் ஆய்வு செஞ்சாங்க... ஆனா, எந்த நடவடிக்கையும் இல்ல... கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடக்குதுங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி. ''முத்தையா, இப்படி உட்காருங்க பா...'' என, நண்பருக்கு இடம் தந்து அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
danalakshmi govindaya namaha