சட்டவிரோதமாக குடிநீர் திருட்டு சோழவரத்தில் நான்கு பேர் கைது
சோழவரம், சோழவரம் அடுத்த விஜயநல்லுார் பகுதியில், ஆழ்துளை கிணறுகளை அமைத்து தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்யும் குடிநீர் ஆலைகள் உள்ளன. இவற்றில் உரிய அனுமதி மற்றும் உரிமம் இன்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த, ஒன்பது குடிநீர் ஆலைகள் பொன்னேரி வருவாய்த்துறையினரால் சமீபத்தில் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டன.இந்நிலையில், அங்குள்ள மேலும சில ஆலைகளில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சி லாரிகளில் விற்பனைக்கு அனுப்பப்படுவது தொடர்ந்தது.இது குறித்து சோழவரம் போலீசாருக்கு வந்த புகாரின்படி, அங்கு சென்று குடிநீர் நிரப்பிக்கொண்டிருந்த நான்கு லாரிகளை மடக்கி பிடித்தனர்.இது தொடர்பாக வழக்கு பதிந்து, சட்டவிரோதமாக குடிநீர் திருட்டில் ஈடுபட்டதாக திருவாரூர் மாவட்டம் நடக்கத்தான்குடியை சேர்ந்த லாரி டிரைவர் சுப்ரமணியன், 35, சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த லாரி டிரைவர் சாமுவேல் துரைசிங், 52, சென்னை மணலியை சேர்ந்த லாரி உரிமையாளர் ஞானசேகர், 54, திருவண்ணாமலை மாவட்டம் எருமைவெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜசேகர், 30 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குடிநீர் திருடுவதற்கு பயன்படுத்திய லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.