செக்யூரிட்டியை போலீஸ் எனக்கருதி ஓட்டம் பிடித்த கஞ்சா விற்ற கும்பல்
ஓசூர்:செக்யூரிட்டியை பார்த்து போலீஸ் எனக்கருதி, மாடியில் இருந்து குதித்து கஞ்சா கும்பல் ஓட்டம் பிடித்தனர். இதில், ஒருவர் மட்டும் சிக்க, 1 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கர்நாடக மாநில எல்லையான ஆனைக்கல் அருகே கர்பூர் கிராமத்தில், அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 45 நாட்களுக்கு முன், வாலிபர்கள் நான்கு பேர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினர்.நேற்று முன்தினம் அந்த குடியிருப்பு பகுதி வழியாக காக்கி சட்டை அணிந்த செக்யூரிட்டி ஒருவர் நடந்து சென்றார். அவரை பார்த்து, போலீசார் என நினைத்து, முதல் மாடியில் இருந்து நான்கு வாலிபர்களும் கீழே குதித்தனர். மூன்று பேர் தப்பி ஓட்டம் பிடித்த நிலையில், ஒருவருக்கு மட்டும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு, பொதுமக்களிடம் சிக்கினார்.தகவலறிந்து ஆனைக்கல் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது, கேரள மாநிலத்தை சேர்ந்த சச்சின், 28, என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி வந்து, தமிழகத்தின் எல்லையில் உள்ள ஓசூர் சுற்றுப்புற பகுதியில் விற்பனை செய்ததும் தெரிந்தது.சச்சினை கைது செய்த போலீசார், வீட்டில் இருந்த 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 169 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், 800 கிராம் அளவிலான சில போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பிய கேரளாவை சேர்ந்த ராஷி, சஞ்சு, உமேத் ஆகிய மூன்று பேரை, ஆனைக்கல் போலீசார் தேடி வருகின்றனர்.