உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மத்திய அரசின் எச்சரிக்கையை மீறி மேலும் 2 விமானங்களுக்கு மிரட்டல்

மத்திய அரசின் எச்சரிக்கையை மீறி மேலும் 2 விமானங்களுக்கு மிரட்டல்

புதுடில்லி,விமானங்களுக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு எச்சரித்திருந்த நிலையில், மேலும் இரண்டு தனியார் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.

அச்சுறுத்தல்

கடந்த சில நாட்களாக 'ஏர் இந்தியா, இண்டிகோ' உட்பட பல்வேறு விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும், 19 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. குறிப்பாக, வெளிநாடுகள் செல்லும் சர்வதேச விமானங்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களால், பயணியர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். சமூக வலைதளங்கள் வாயிலாக விடுக்கப்படும் எச்சரிக்கைகள் பெரும்பாலும் புரளியாகவே உள்ளன.இது தொடர்பாக ஆலோசனை நடத்திய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து மும்பை வந்த, விஸ்தாரா நிறுவன விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக, மும்பை விமான நிலையத்துக்கு நேற்று மிரட்டல் விடுக்கப்பட்டது. காலை 7:45 மணிக்கு, 134 பயணியர் மற்றும் 34 ஊழியர்களுடன் மும்பை வந்த விமானம், தனியிடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.இதேபோல், மத்திய கிழக்கு நாடான துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து மும்பை வந்த விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இயல்பு நிலை

அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையில், அது வெறும் புரளி என தெரியவந்ததை அடுத்து, மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் விமான நிலைய அதிகாரிகள் இயல்புநிலைக்கு திரும்பினர்.

விதிகளை கடுமையாக்க முடிவு

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க, விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான வழக்குகளை கையாள வெளிநாடுகளில் பின்பற்றும் விதிமுறைகளை ஆய்வு செய்யவும் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மிரட்டல் விடுக்கும் நபர்களை விமான நிறுவனங்களின் 'நோ ப்ளை' பட்டியல் அதாவது விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படும் நபர்களின் பட்டியலில் சேர்ப்பது குறித்தும் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். விதிகளில் மாற்றங்களைச் செய்வது தொடர்பாக கருத்துகள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அதிகாரிகள், போலி மிரட்டலை அடையாளம் காணும் விதமாக தொழில்நுட்ப வசதிகளை அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை