உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பெண் அதிகாரியை ஏமாற்றும் நகை கடை உரிமையாளர்!

பெண் அதிகாரியை ஏமாற்றும் நகை கடை உரிமையாளர்!

ஆ யுத பூஜை வாழ்த்துகளை பரிமாறி கொண்ட நண்பர்கள் மத்தியில்,''தந்தை பாணியில் தனயனும் களம் இறங்கிட்டாருங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி. ''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா. ''முதல்வர் ஸ்டாலின் வெளியூர் போனா, காலையில அந்த ஊரின் முக்கிய வீதிகள்ல, 'வாக்கிங்' போய், மக்களை சந்திச்சு பேசுவாருங்க... சமீபத்துல, ஆய்வு கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகள்ல கலந்துக்க மதுரை வந்த துணை முதல்வர் உதயநிதி, தனியார் நட்சத்திர ஹோட்டல்ல தங்கியிருந்தாருங்க... ''மறுநாள் காலை 5:30 மணிக்கு கட்சியின் இளைஞர் அணி மாநில துணை செயலர் ஜி.பி.ராஜாவுக்கு மட்டும் போன் போட்டு, அவரை கூட்டிட்டு வாக்கிங் கிளம்பிட்டாரு... ரேஸ்கோர்ஸ் ரோடு, பழைய நத்தம் ரோடு வழியா போய் திரும்பியிருக்காருங்க... ''வழியில், துாய்மை பணியில் இருந்த பெண் பணியாளர்களை பார்த்து, 'உங்க வேலை எப்படி போகுது... சம்பளம் எல்லாம் சரியா தர்றாங்களா'ன்னு விசாரிச்சிருக்காருங்க... உதயநிதி வாக்கிங் போன தகவல், மாவட்டச் செயலர்களுக்கு லேட்டா தான் தெரிஞ்சிருக்கு... அவங்க அடிச்சு பிடிச்சு அப்புறமா ஓடி வந்திருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''கஞ்சா கடத்தியவருக்கு கட்சி பதவி குடுத்திருக்காங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்... ''ஈரோடு கள்ளுக்கடை மேட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருத்தரை, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கார்ல 2 கிலோ கஞ்சா கடத்தியதா, ஈரோடு தாலுகா போலீசார் கைது செஞ்சாங்க... ''இந்த சூழல்ல, இவருக்கு அ.தி.மு.க.,வில், ஈரோடு ரயில் நிலைய பகுதி மாணவரணியில் முக்கிய பதவி வழங்கியிருக்காங்க... பதவி அறிவிப்பு வர்றதுக்கு முன்னாடியே, இவரை பத்தி தலைமைக்கு சிலர் புகார் அனுப்பியிருக்காங்க பா... ''இதனால, அவருக்கு பதவி தரமாட்டாங்கன்னு நினைச்சாங்க... ஆனா, அதை கண்டுக்காம பதவி குடுத்துட்டாங்க... வாலிபரின் அம்மா, அந்த பகுதி அ.தி.மு.க.,வில் பதவியில் இருப்பதால, மகனுக்கும் பதவி வாங்கிட்டதா சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''நவீன், இந்த பேப்பரை அங்க வையும்...'' என்ற குப்பண்ணாவே, ''அதிகாரி புகாருக்கே மதிப்பில்ல ஓய்...'' என்றார். ''எந்த துறையில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''நகராட்சி நிர்வாக துறையில் பணிபுரியும் ஒரு பெண் அதிகாரி, சென்னை மந்தைவெளியில் வசிக்கறாங்க... இவங்க, மயிலாப்பூர்ல ஒரு நகை கடையில், தன் பழைய தங்க நகைகளை குடுத்து, புதுசா செய்து தரும்படி கேட்டிருக்காங்க ஓய்... ''கடை உரிமையாளர், 30,000 ரூபாய் கேட்டிருக்கார்... 20,000 ரூபாய் அட்வான்சா குடுத்த அதிகாரி, மீதியை நகைகளை வாங்கறச்சே தர்றதா சொல்லியிருந்தாங்க ஓய்... ''இதெல்லாம் போன வருஷம் நவம்பர்ல நடந்திருக்கு... கிட்டத்தட்ட, 10 மாசமாகியும், நகைகளை இன்னும் தராம கடை உரிமையாளர் அலைக்கழிக்கறார் ஓய்... ''வெறுத்து போன அதிகாரி, மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுத்திருக்காங்க... புகாரை வாங்கிய போலீசார், அதுக்கான ஒப்புகை சீட்டு கூட தரலையாம்... 'எனக்கே இந்த நிலையா'ன்னு பெண் அதிகாரி புலம்பறாங்க ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா. ஒலித்த மொபைல் போனை எடுத்த அண்ணாச்சி, ''ஜெயகுமாரி மேடம்... எஸ்.ஆர்.கிட்ட பேசிட்டீயளா... முடிவா என்ன தான் சொல்லுதாரு...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
அக் 01, 2025 23:44

1.நகையை பறிகொடுத்த நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரி பத்து மாசமாகவா புகார் கொடுக்காமல் வெயிட் பண்ணுவாங்க. 2. ஒருவேளை கணக்கில் காட்டமுடியாத நகைககளா..? 3. நகராட்சியில் தன்னிடம் நிர்வாக சம்பந்தமாக வரும் மனுக்களுக்கு வாங்கிய லஞ்சம் பணத்தில் சேர்த்த சொத்து போலும்.. எளியோரை வலியோர் வாட்டினால் வலியோரை தெய்வம் வாட்டும் என்பதற்கு உதாரணம் இது. இதில் நாம் இறக்கப்பட ஒன்றுமில்லை. மயிலாப்பூரில் இது எந்த நகை கடை என்பதை மட்டும் பொதுமக்கள் அறிவது நல்லது.


D.Ambujavalli
அக் 01, 2025 19:00

தங்கம் விலை போகும் ஏற்றத்தில், நகை வாங்காவிட்டால், உள்ளதை இவ்விதம் மாற்றவோ, அழித்துச் செய்யவோ கொடுத்தால், நகையை மறந்துவிட வேண்டியது தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை