உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / போலீசார் துணையுடன் நடக்கும் கட்டப்பஞ்சாயத்து!

போலீசார் துணையுடன் நடக்கும் கட்டப்பஞ்சாயத்து!

''யா ரையும் சந்திக்க மாட்டேங்கறா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் ஆஜரானார் குப்பண்ணா. ''யாரை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''வெளிநாடுகள்ல இருந்து சென்னை ஏர்போர்ட்ல வந்து இறங்கும் பயணியர், முறையான ஆவணங்கள் இல்லாம எடுத்துண்டு வர்ற பொருட்களை, சுங்க அதிகாரிகள் நிறுத்தி வச்சிடுவா... அப்புறமா, பயணியர் அபராதம் கட்டியோ அல்லது முறையான ஆவணங்களை காட்டியோ, இந்த பொருட்களை வாங்கிண்டு போவா ஓய்... ''சமீப காலமா, தங்களது பொருட்களை எடுக்க பயணியர் வந்தா, சுங்க அதிகாரிகள் யாரும் அவாளை சந்திக்கவே மாட்டேங்கறா... அதுவும் இல்லாம ஏற்றுமதி, இறக்குமதியிலயும் சில பார்சல்களை சுங்க அதிகாரிகள் நிறுத்தி வச்சிருப்பா ஓய்... ''ஏற்றுமதி நிறுவனங்களின் ஏஜன்ட்கள், இது சம்பந்தமான ஆவணங்களுடன் அதிகாரிகளை சந்திக்க போனா, 'அப்பாயின்ட்மென்ட் இருக்கா, ஆதார் கார்டு இருக்கா'ன்னு கேட்டு, 'செக்யூரிட்டி'கள் படுத்தி எடுக்கறா... சமீபத்துல, சென்னை விமான நிலைய முதன்மை கமிஷனர் மற்றும் துணை கமிஷனரை, திடீர்னு டில்லிக்கு மாத்திட்டா... ''இதனால, 'இப்ப இருக்கற அதிகாரிகளும் பயந்து போய், யாரையும் பார்க்கிறதை தவிர்க்கறா'ன்னு சுங்க ஊழியர்கள் பேசிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''சீட் தந்துடுவாங்களோன்னு பம்முறாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... ''துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டசபை தொகுதி, பெரும்பாலும் அ.தி.மு.க.,வுக்கே சாதகமா இருக்கும்... இப்ப தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா இருக்கும் மார்கண்டேயனும் முன்னாடி, அ.தி.மு.க.,வுல தான் இருந்தாருங்க... ''அங்க சீட் கிடைக்காத அதிருப்தியில, சுயேச்சையா நின்னு ஜெயிச்சு, அப்புறமா தி.மு.க.,வுல சேர்ந்துட்டாரு... போன வருஷம் நடந்த லோக்சபா தேர்தல்ல, இந்த தொகுதியில, அ.தி.மு.க.,வுக்கு கூடுதல் ஓட்டுகள் விழுந்துச்சு... ''இந்த தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சின்னப்பன்... இப்ப, கூட்டணி பலமில்லாம இருக்கிறதால, தன்னை தலைமை போட்டியிடச் சொல்லிடு மோன்னு பயப்படுறாராம்... கூட்டணிக்கு த.வெ.க., வந்தா போட்டியிடலாம்னு நினைக்கிறாருங்க... ''இதனால, வெளியே தலை காட்டுறதையே தவிர்க்கிறாரு... தீபாவளி சமயத்துல கூட, வாழ்த்து சொல்ல கட்சி யினர் வந்துடுவாங்கன்னு பயந்து, தன் பண்ணை வீட்டுல பதுங்கிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''மறுபடியும் ஆரம் பிச்சிட்டாவ வே...'' என , கடைசி மேட்டருக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி. ''என்னத்த பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''தர்மபுரி மாவட்டத்தில், கொஞ்ச காலமா அடங்கி யிருந்த கட்டப்பஞ்சாயத்துகள் மறுபடியும் தலைதுாக்குது... அதாவது, கந்துவட்டி, நில விவகாரங்கள்ல பாதிக்கப்பட்டவங்க, போலீஸ்ல புகார் குடுப்பாங்கல்லா... ''முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தொடர்புல இருக்கிற போலீசார், இந்த புகார்கள் பத்தி, அவங்களுக்கு தகவல் குடுத்துடுதாவ... உடனே, அரசியல் கட்சி பிரமுகர்கள், ரெண்டு தரப்பையும் கூப்பிட்டு சமரச பேச்சு நடத்துதாவ வே... ''அதுல, உடன்பாடு ஏற்படலைன்னா ரெண்டு தரப்பையும் மிரட்டி, புகாரை வாபஸ் வாங்க வச்சிடுதாவ... கடன் தொகை, நிலத்தின் மதிப்பின் அடிப்படையில, பல ஆயிரம் ரூபாய்ல இருந்து, பல லட்சங்கள் வரை கமிஷனா கறந்துடுதாவ... இதுல, தகவல் தந்த போலீசாருக்கும் உரிய பங்கு போயிடுது வே...'' என முடித்தார், அண்ணாச்சி. பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
நவ 05, 2025 06:14

கோர்ட் கேஸ் என்று அலைந்து, சொத்தில் பாதியை வக்கீல்கள் பிடுங்கிக்கொண்ட போதும், வெற்றி வாய்ப்பு ஊசலாட்டம்தான் என்ற நிலையில் எதையாவது 'கொடுத்து' தங்களுக்குள்ளேயே முடித்துக்கொண்டு விடலாம் என்று மக்கள் நினைப்பது போலீசுக்கு கொண்டாட்டமாகி விடுகிறது


புதிய வீடியோ