உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மேயர், கவுன்சிலர்களுக்கு தடை போட்ட அமைச்சர்!

மேயர், கவுன்சிலர்களுக்கு தடை போட்ட அமைச்சர்!

''த னக்கான தொகுதிக்கு குறி வச்சுட்டாருங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி. ''யாரை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்டச் செயலர் இளங்கோவனை தான் சொல்றேன்... கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமிக்கு ரொம்பவே நெருக்கமானவர்... இவரது மாவட்டத்துல ஏற்காடு, ஆத்துார், கெங்கவல்லி, வீரபாண்டி ஆகிய நாலு சட்டசபை தொகுதிகள் வருதுங்க... ''இதுல ஏற்காடு, ஆத்துார், கெங்கவல்லி தனி தொகுதிகளாகவும், வீரபாண்டி மட்டுமே பொது தொகுதியாகவும் இருக்கு... சமீபகாலமா, இந்த தொகுதியில் அடிக்கடி இளங்கோவன் வலம் வர்றாருங்க... ''கடந்த, 2006 சட்டசபை தேர்தல்ல பனமரத்துப்பட்டி தொகுதியில், தி.மு.க.,வின் ராஜேந்திரன்கிட்ட, 3,889 ஓட்டுகள் வித்தியாசத்துல தான் இளங்கோவன் தோற்று போனாரு... இப்ப, பனமரத்துப்பட்டி தொகுதியை நீக்கிட்டாங்க... ''அதே நேரம், 2006ல் ராஜேந்திரன் வெற்றிக்கு உதவிய வாழப்பாடி ஒன்றியம், இப்ப ஏற்காடு தொகுதிக்கு போயிடுச்சு... இதனால, 'வீரபாண்டி தொகுதியில் அ.தி.மு.க.,வுக்கு அதிக ஓட்டுகள் இருக்கு... இந்த முறை இங்க நின்னா சுலபமா ஜெயிச்சிடலாம்'னு இளங்கோவன் கணக்கு போடுறாருங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''விதிகளை மீறி பணியில இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... ''வணிகவரி துறையில், மூணு வருஷத்துக்கு முன்னாடி, துணை வரி அலுவலர், உதவி கமிஷனர் அந்தஸ்தில் பணியாற்றிய, 118 பேரை இடமாறுதல் செய்தா... இப்படி இடமாறுதல்ல போன பலரும், தங்களது சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் வாங்கிட்டு போயிட்டா ஓய்... ''இத்தகைய உயர் அதிகாரிகளை, பொதுவா சொந்த மாவட்டங்கள்ல நியமிக்க கூடாதுங்கறது விதி... ஏன்னா, அவாளுக்கு வேண்டிய வணிகர்கள் மற்றும் உறவினர்களுக்கு சாதகமா நடந்துப்பான்னு தான் இந்த நிபந்தனையை விதிச்சிருக்கா ஓய்... ' 'ஆனா, அதை எல்லாம் காத்துல பறக்க விட்டுட்டு, பலரும் சொந்த மாவட்டங்கள்ல பணியில இருக்கா... இப்பவும், வணிகவரி துறையில இடமாறுதலுக்கான ஏற்பாடுகள் நடக்கு... 'மறுபடியும் அதே மாதிரி விதிமீறல் நடந்துடப்டாது'ன்னு நேர்மையான அதிகாரிகள் எல்லாம் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''மேயர், கவுன்சிலர்களுக்கு தடை போட்டுட்டாரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் தியாகராஜன், மதுரை மத்திய தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா இருக்காருல்லா... தேர்தல் வர போறதால, தன் தொகுதியில் வாரம் ஒரு முறை, 'மக்கள் சந்திப்பு' நிகழ்ச்சியை நடத்துதாரு வே... ''இதுக்கு, 'அந்த பகுதி வட்ட மற்றும் பகுதி செயலர்கள் மட்டும் வந்தா போதும்... மேயர், கவுன்சிலர்கள் யாரும் வரக்கூடாது'ன்னு சொல்லிட்டாரு வே... ''மாநகராட்சியில் நடந்த, 200 கோடி ரூபாய் சொத்து வரி விதிப்பு முறைகேடு சம்பந்தமா, மேயர் இந்திராணியின் கணவரை கைது பண்ணியிருக்காவ... தியாகராஜன் பரிந்துரையில் தான் இந்திராணியை மேயராக்கினாவ வே... ''அதேபோல, வரி முறைகேட்டுல சிக்கி, மண்டல மற்றும் நிலைக்குழு தலைவர் பதவிகளை ராஜினாமா பண்ணிய கவுன்சிலர்கள் பலரும் தியாகராஜன் சிபாரிசு பண்ணியவங்க தான்... அவங்க, தன் கூட வந்தா, தன் மீதும் மக்கள் கோபமாகிடுவாங்கன்னு பயந்து தான், எல்லாரையும் அமைச்சர் தடுத்துட்டாரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி. அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !