சாலை ஓர பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி
மறைமலை நகர்:மறைமலை நகர் -ஆப்பூர் சாலை 7 கி. மீ., துாரம் உடையது. இந்த சாலையை சட்டமங்கலம், பனங்கொட்டூர், திருக்கச்சூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை சிங்கபெருமாள் கோவில்- - ஸ்ரீ பெரும்புதுார் சாலையின் இணைப்பு சாலை. இந்த சாலையில் தினமும், ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் தனியார் தொழிற்சாலை பேருந்துகள் சென்று வருகின்றன.மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரகடம் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் ஆப்பூர் தாலிமங்கலம் இடையே 200 மீட்டர் துாரம் இருபுறமும் காப்புகாடுகள் உள்ளன. இதில் உள்ள சீமகருவேல மரங்கள் வளர்ந்து சாலையின் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.இந்த பகுதியில் மரங்கள் வளர்ந்து சாலை குறுகலானதால் வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்ல தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் சாலையில் உள்ள சீமகருவேல மரங்களை அகற்றி, சாலை ஓரம் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆப்பூர் ஊராட்சி நிர்வாகம் கூறியதாவது:சாலை ஓரம் உள்ள சீமகருவேல மரங்களை அகற்றி பள்ளங்களை சீரமைக்க முயலும் போது வனத்துறை அதிகாரிகள் தடுக்கின்றனர். அனுமதி கேட்டு கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது. வனத்துறை அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைப்பதில்லை.இவ்வாறு கூறப்பட்டது.