உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றாத நகராட்சி நிர்வாகம்!

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றாத நகராட்சி நிர்வாகம்!

“தனியாருக்கு ஆப்பு அடிச்சிட்டாங்க பா...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய். “எந்த துறையில வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி. “தமிழகத்தில், 147 நகராட்சிகள்லயும் தனியார் மூலமா தான் துாய்மைப் பணிகளை செஞ்சுட்டு இருந்தாங்க... இப்ப எல்லாத்தையும் ரத்து பண்ணிட்டு, தமிழக அரசின் மகளிர் திட்டத்தின் கீழ் இயங்கும், ‘நகர்ப்புற மேம்பாட்டு மையம்’ பொறுப்புல துாய்மைப் பணிகளை ஒப்படைச்சிட்டாங்க பா... “இதுக்கு முன்னாடி, தனியார் நிறுவனங்கள்ல நிறைய முறைகேடுகள் நடந்துச்சு... அதாவது, தினமும் 6 முதல் 7 டன் குப்பைகளை மட்டும் அள்ளிட்டு, 12 டன் வரை அள்ளியதா கணக்கு காட்டி, பணத்தை வாங்கியிருக்காங்க பா... “அதேபோல, ‘இத்தனை பணியாளர்களை வச்சு குப்பைகள் அள்ளுவோம்’னு ஒப்பந்தத்துல குறிப்பிட்டாலும், குறைவான ஊழியர்களையே ஈடுபடுத்துவாங்க... அதேநேரம், ஒப்பந்தத்துல குறிப்பிட்ட ஊழியர்களுக்கான ஊதியத்தை வாங்கி, அதுல உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கமிஷனும் குடுத்திருக்காங்க... ‘இது பத்தி விசாரணை நடத்தினா, பெரிய முறைகேடுகள் அம்பலத்துக்கு வரும்’னு நகராட்சி ஊழியர்கள் சொல்றாங்க பா...” என்றார் அன்வர்பாய். “மண் கடத்தலை கண்டுக்க மாட்டேங்கிறாங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... “சென்னை அம்பத்துார் தொகுதிக்கு உட்பட்ட கொரட்டூர், கள்ளிக்குப்பம், ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்’ பக்கத்துல அரசு மற்றும் தனியார் சார்பில் நிறைய கட்டுமானப் பணிகள் நடக்குது... இதுக்காக பள்ளம் தோண்டுறப்ப நிறைய சவுடு மண் கிடைக்குதுங்க... “இந்த மண்ணை சட்டவிரோதமா லாரிகள்ல கடத்திட்டு போயிடுறாங்க... சென்னை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள், அம்பத்துார்ல ஒரே வாரத்தில், 25 யூனிட் மண் கடத்திட்டு போன ஐந்து லாரிகளை பிடிச்சு, போலீசாரிடம் ஒப்படைச்சிருக்காங்க... “ஆனா, இந்த மண் கடத்தலை கண்காணிச்சு தடுக்க வேண்டிய அம்பத்துார் தாலுகா அதிகாரி உள்ளிட்ட வருவாய் துறையினர், இதை கண்டும் காணாமலும் இருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி. ஒலித்த மொபைல் போனை எடுத்த பெரியசாமி அண்ணாச்சி, “டாலி மேடம்... சாயந்தரமா பேசுதேன்...” என கூறி வைத்தபடியே, “ஆக்கிரமிப்பு கடைகளை முறைப்படுத்தணும்னு சொல்லுதாவ வே...” என்றார். “எந்த ஊர்ல ஓய்...” என கேட்டார் குப்பண்ணா. “சபரிமலை போயிட்டு வர்ற அய்யப்ப பக்தர்கள், ராமேஸ்வரம் கோவிலுக்கும் வருவாவ... இவங்களுக்கு கம்பளி உள்ளிட்ட துணிகளை விற்பனை செய்றதுக்காக, ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டை சுத்தியிருக்கிற இடங்களை ஆக்கிரமிச்சு, ரெண்டு மாசங்களுக்கு உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் கடைகள் போடுவாவ வே... “இந்த கடைகளை, வெளியூர் வியாபாரிகளுக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வாடகைக்கு விடுவாவ... இந்த கடைகளுக்கு வரியா, நகராட்சிக்கு தலா, 7,000 ரூபாய் மட்டுமே கட்டுதாவ வே... “ஆக்கிரமிப்பு கடைகளுக்கு இடம் பிடிக்கிறதுல, சமீபத்துல அரசியல் பிரமுகர்களுக்கு இடையில மோதல் வந்துட்டு... இதனால, கடைகளை எல்லாம் அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செஞ்சிட்டு வே... “உடனே ஆக்கிரமிப்பாளர்கள் எல்லாரும் சேர்ந்து, நகராட்சி அதிகாரிகளுக்கு ஒரு தொகையை வெட்ட, அவங்களும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் முடிவை கைவிட்டுட்டாவ... ‘இந்த கடைகளுக்கு நகராட்சி நிர்வாகமே முறைப்படி டெண்டர் விட்டா, தனி நபர் கைகளுக்கு போற பணம் நகராட்சிக்கு வரும்’னு, இந்த பகுதி மக்கள் சொல்லுதாவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி. பேச்சு முடிய பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !