“மோ டியிடம் பேசுறதா வாக்குறுதி தந்திருக்கார் ஓய்...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா. “என்ன விஷயமுங்க...” என கேட்டார் அந்தோணிசாமி. “பா.ஜ., விவசாய அணியின் தமிழக தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள், சமீபத்துல டில்லி போய் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்திச்சு பேசியிருக்கா... அப்ப, ‘தென்னை மரத்தில் இருந்து கிடைக்கற நீரா பானத்தில் எவ்வித ரசாயனமும் சேர்க்காம, ‘டெட்ரா பேக்’கில் அடைச்சு விக்கலாம்... இது, 18 மாசங்கள் கெடாது... ‘நீரா பானம் தாய்ப்பாலுக்கு இணையானது; புற்றுநோயை தடுக்கும் ஊட்டச்சத்துகள் இருக்கு... இதை, ஹைதராபாதில் இருக்கற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எனும் ஐ.சி.எம்.ஆர்., நிறுவனத்திற்கு அனுப்பி, அறிக்கை கேட்டிருக்கோம்... அறிக்கை கிடைச்சதும், பிரதமர் மோடியிடம் நீங்க பேசி, நாடு முழுக்க நீரா பானம் விற்பனைக்கு அனுமதி வாங்கி தந்து, தென்னை விவசாயிகளை காப்பாத்தணும்’னு கோரிக்கை வச்சிருக்கா ஓய்... “துணை ஜனாதிபதியும், ‘கண்டிப்பா பிரதமர் கவனத்துக்கு கொண்டு போறேன்’னு உறுதி தந்திருக்கார்... இதனால, அவா மகிழ்ச்சியா ஊர் திரும்பியிருக்கா ஓய்...” என்றார் குப்பண்ணா. “உறவினருக்கு, ‘டெண்டர்’ குடுத்துட்டாரு பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்... “தமிழகத்தில், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை, முதல்வர் விஜய் சமீபத்துல தொடங்கி வச்சாரே... இதுல, உணவு வினியோகத்தை தனியாருக்கு, ‘டெண்டர்’ குடுத்திருக்காங்க பா... “மதுரையில், சில மாநகராட்சி பள்ளிகள்ல மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு வினியோகம் இல்லன்னு புகார்கள் எழுந்துச்சு... இது சம்பந்தமா பள்ளிகள் சார்பில், மாநகராட்சி கல்விப் பிரிவுக்கு புகார் அனுப்பியிருக்காங்க பா... “ஆனா, கல்விப் பிரிவில் இருக்கும் அதிகாரி ஒருவரது உறவினர் தான், காலை உணவு டெண்டரை எடுத்திருக்கார்... இதனால, அது சம்பந்தமான புகார்களை கமிஷனர் பார்வைக்கு போகாம, அதிகாரி தடுத்துடுறாரு பா...” என்றார் அன்வர்பாய். “பாலமுருகன், என்கிட்டயும் ஒரு மாநகராட்சி தகவல் இருக்கு வே... கேட்டுட்டு கிளம்பும்...”என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... “சென்னை மாநகராட்சியின் அம்பத்துார் மண்டலம், 92வது வார்டு பாரி சாலையில் நிறைய தள்ளுவண்டி கடைகள் இருக்கு... இந்த கடைகளால, வாகன ஓட்டிகள் ரொம்பவே சிரமப்படுதாவ வே... “இது பத்தி அந்த பகுதியைச் சேர்ந்த ஒருத்தர், 92வது வார்டு அதிகாரியிடம் புகார் சொல்லியும் அவர் நடவடிக்கை எடுக்கல... இதனால, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பிட்டாரு வே... “இதனால கடுப்பான அதிகாரி, தன்னிடம் புகார் தந்தவரின் மொபைல் போன் எண்ணை, தள்ளுவண்டி வியாபாரிகளிடம் குடுத்துட்டாரு... அவங்க, அந்த நம்பருக்கு மாறி மாறி போன் போட்டு, புகார் குடுத்தவரை மிரட்டுதாவ வே... “அதிகாரியிடம் புகார்தாரர் கேட்டதுக்கு, ‘ஆமா, நான் தான் உங்க நம்பரை குடுத்தேன்... அதுக்கென்ன இப்ப’ன்னு அசால்டா கேட்கிறாரு வே... “புகார் குடுத்தவர், ‘என் உயிருக்கு ஆபத்து இருக்கு... என் நம்பரை குடுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கணும்’னு புலம்பிட்டு இருக்காரு வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி. “வெங்கடகிரி, நாளைக்கு பார்க்கலாம் பா...” என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.