கோவை: கோவை நேரு ஸ்டேடிய வணிக வளாக கடைகள் ரூ.2.84 கோடி வாடகை பாக்கி வைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு பெரிய தொகை விஷயத்தில் முன்பிருந்த அதிகாரிகள், அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை நேரு ஸ்டேடிய வணிக வளாகத்தில், 89 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய(எஸ்.டி.ஏ.டி.,) தங்கும் விடுதி, ஜிம் உள்ளிட்ட தேவைகளுக்காக, 10 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, 79 கடைகளில் தனியார், அரசுத்துறைகளின் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இருந்து வரும் வாடகையானது, பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.இச்சூழலில், கடை உரிமையாளர்கள் பலர் லட்ச கணக்கில் வாடகை செலுத்தாமல் பாக்கி வைப்பது, வளர்ச்சி பணிகளுக்கு முட்டுக்கட்டையாகவும் அமைந்து விடுகிறது. இந்நிலையில், கோவையை சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன், நேரு ஸ்டேடிய வணிக வளாக கடைகளின் வாடகை பாக்கி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம்(ஆர்.டி.ஐ.,) வாயிலாக, எஸ்.டி.ஏ.டி.,யிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கானபதிலறிக்கையில், ரூ.2 கோடியே, 84 லட்சத்து, 68 ஆயிரத்து, 460 பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக(கடை எண்: 42-47) மருதம் கோ-ஆப்டெக்ஸ் ஒரு கோடியே, 70 லட்சத்து, 35 ஆயிரத்து, 157 ரூபாய், அரசு அருங்காட்சியகம்(கடை எண்:21-23) ரூ.71 லட்சத்து, 808, தனியார் ஒருவர் ரூ.43 லட்சத்து, 32 ஆயிரத்து, 495 பாக்கி வைத்துள்ளார். இவ்வளவு பெரிய தொகை நிலுவை வைக்கப்பட்டுள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கு மேலாகமுன்பு இருந்த எஸ்.டி.ஏ.டி., அதிகாரிகள், எச்சரிக்கை நோட்டீஸ் வழங்காமல்என்ன செய்துகொண்டிருந்தனர் என்பது, கேள்வியாக எழுந்துள்ளது.
வருவாய் ஒரு கோடி; கழிவறை மோசம்
முன்பு இருந்த வாடகை தொகை, மூன்று மடங்கு வரை உயர்த்தப்பட்டு, 2013க்கு பிறகு கடை உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது. இப்படி வணிக வளாகத்தில் இருந்து மாதம் ரூ.ஒரு கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. ஆனால், நேரு ஸ்டேடியத்தில் கழிவறை உள்ளிட்டவை பராமரிப்பின்றி கிடக்கிறது.
'வாடகை மட்டும் வருகிறது; நிலுவை அப்படியே நிற்கிறது'
எஸ்.டி.ஏ.டி., மண்டல முதுநிலை மேலாளர் அருணா கூறியதாவது: 2013ல் 'டெண்டர்' விடப்பட்டு விலையும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையும் வாடகை கட்டணத்தில், 15 சதவீதம் உயர்த்தப்படுகிறது. உயர்த்தப்பட்ட, 15 சதவீத கட்டணத்தை செலுத்தாமல் உள்ளனர். அதேசமயம், நிர்ணயிக்கப்பட்ட வாடகையைசரியாக செலுத்தி வருகின்றனர். நிலுவை வைத்துள்ள கடைகளுக்கு கடிதம் வழங்கியுள்ளோம். அரசுத்துறை சார்ந்த கடைகளுக்கான, வாடகைநிலுவையை இம்மாதம் அல்லது அடுத்த மாதம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். நான் வந்தது முதல்,வாடகை சரியாக செலுத்தி வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.