உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / போலி பில்லுக்கு பணம் தராத அதிகாரி துாக்கியடிப்பு!

போலி பில்லுக்கு பணம் தராத அதிகாரி துாக்கியடிப்பு!

இஞ்சி டீயை பருகியபடியே, ''போலீசாரின் முயற்சி பலிக்குமான்னு தெரியலைங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''சிவகங்கை மாவட்டம், மானாமதுரை போலீஸ் சப் டிவிஷன்ல, மானாமதுரை, சிப்காட், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், பழையனுார், பூவந்தின்னு ஆறு போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்கு... இந்த ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதி கள்ல சில வருஷங்களா, பழிக்குப் பழியா பல கொலைகள் நடக்குதுங்க...''கடந்த ஆறு மாசத்துல மட்டும், எட்டு கொலைகள் நடந்திருக்கு... கொலை வழக்குல சிக்கியவங்க ஜாமின்ல வந்து வெளியூருக்கு போனாலும், அங்கயும் தேடி போய் கொலை பண்றாங்க...''இது போக, இந்த பகுதிகள்ல ஜாதி மோதல்களும் அடிக்கடி நடக்குது... இதனால, கொலை வழக்குல தொடர்புடையவங்க மற்றும் ஜாமின்ல வந்தவங்க விபரங்களை, முடிஞ்சவரைக்கும் போலீசார் ரகசியமா வச்சிருக்காங்க...''அதுவும் இல்லாம, 'கொலை சம்பவங்கள் நடந்த பகுதிகள்ல இருக்கிற கண்காணிப்பு கேமரா பதிவுகளை, தனிப்பட்ட யாருக்கும் வழங்கக்கூடாது'ன்னும் வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவு போட்டிருக்காங்க... அப்படியாவது, குற்றங்கள் குறையும்னு நினைக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''பட்டா வழங்க முடியாம தவிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''எந்த மாவட்டத்துல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''தமிழகத்துல, இந்த வருஷ கடைசிக்குள்ள, 5 லட்சம் பட்டாக்கள் வழங்க அரசு முடிவெடுத்திருக்கு... மதுரை மாவட்டத்துல, 50,000 பேருக்கு பட்டா வழங்க திட்டமிட்டிருக்கா ஓய்...''கடந்த ஏப்ரல் மாசம் மதுரைக்கு முதல்வர் வந்தப்ப, அவர் கையால வழங்க 3,000 முதல் 4,000 பட்டாக்களை தயார் பண்ணும்படி அதிகாரிகள் உத்தரவு போட்டிருந்தா... ஆனா, நகர் பகுதிகள்ல பயனாளிகளை கண்டுபிடிக்கறதே அதிகாரிகளுக்கு பெரும்பாடா போயிடுத்து ஓய்...''இதனால, ஏப்ரல்ல பட்டா வழங்க முடியல...இப்ப, மதுரையில நடந்த தி.மு.க., பொதுக்குழுவுக்கு முதல்வர் வந்தப்ப, பட்டா குடுத்துடலாம்னு முயற்சி பண்ணா... ஆனாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் பட்டாக்களை தயார் பண்ண முடியாததால, அந்த யோசனையை அதிகாரிகள் கைவிட்டுட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''பணம் தராத அதிகாரியை மாத்திட்டாரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்துல, ஓவர்சியரா பணியாற்றிய அதிகாரி ஒருத்தரை, சமீபத்துல மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகத்துக்கு அதிரடியா மாத்திட்டாவ... ''பெரம்பலுார் எம்.எல்.ஏ., தொகுதி நிதியில், வெங்கலம் பஞ்சாயத்துல, தலா 2 லட்சம் ரூபாய்ல, நாலு இடத்துல போர்வெல், மினி தொட்டி, மோட்டார் இணைப்பு போட நிதி ஒதுக்கியிருந்தாவ வே...''இந்த பணிகளை எடுத்த ஆளுங்கட்சி ஒன்றிய நிர்வாகி, போர்வெல் போடாம, பக்கத்துல இருக்கிற பொது கிணற்றுல இருந்து தண்ணீரை எடுத்து, ஏற்கனவே இருந்த தொட்டியில நிரப்பிட்டு, பணிகளை முடிச்சுட்டதா போலி பில் வச்சு, பணம் தரும்படி ஓவர்சியரிடம் கேட்டிருக்காரு வே...''அதெல்லாம் சரிவராதுன்னு ஓவர்சியர் மறுக்கவே, பேச வேண்டிய இடத்துல பேசி, ஓவர்சியரை துாக்கி அடிச்சிட்டாரு... இந்த இடமாறுதல், துறையின் திட்ட இயக்குநருக்கே தெரியாது வே...'' என முடித்தார், அண்ணாச்சி.ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''சொல்லுங்கோண்ணா... ஆமாமா, பேர்தான் நல்லதம்பி... பண்றது எல்லாம் விஷமம்...'' என பேசியபடியே நடக்க, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூன் 04, 2025 18:13

நல்ல வேளை, அவரைத் தூக்கி அடிக்க மட்டும் செய்தார்கள், ‘தூக்காமல்’ விட்டதே பெரிய காரியம் போலி வவுச்சர், செய்யாத வேலைக்கு பணம் எல்லாம் இந்த மாடலில் தண்ணீர் பட்ட பாடாயிற்றே


S.V.Srinivasan
ஜூன் 04, 2025 09:55

திராவிட மாடல் ஆட்சில ஒரிஜினல் பில்லுக்கெல்லாம் பணம் கொடுக்கக்கூடாது. போலி பில்லுக்கெல்லாம் உடனே கொடுத்துடனும். இல்லேன்னா தூக்கி அடிக்கத்தான் செய்வாய்ங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை