நாட்டு சர்க்கரை டீயை ருசித்தபடியே, “விவசாய பணி என்ற பெயர்ல, பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்துதாங்க வே...” என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.“எந்த ஊருலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.“மலை மாவட்டமான நீலகிரியில், பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் இருக்கு... இதனால, சமீப காலமா விவசாய பணி என்ற போர்வையில், பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி விவசாய நிலங்கள், எஸ்டேட்கள்ல சாலைகளை போடுதாங்க வே...“சில மாசங்களுக்கு பிறகு, 'பிளாட்' போட்டு, கட்டுமான பணிகளையும் செய்யுதாவ... சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அரசு நிறைய தடை உத்தரவு போட்டிருந்தாலும், விவசாய பணிகள் என்ற பெயர்ல இந்த மாதிரி நிறைய விதிமீறல்கள் நடக்கு வே...“வார இறுதி மற்றும் விடுமுறை நாட்கள்ல பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்த, வருவாய் துறை அதிகாரிகள் வாய்மொழியா அனுமதி வழங்கி, வசூல் வேட்டையில ஈடுபடுதாவ... அதே நேரம், நேர்மையான முறையில விவசாய பணி செய்றவங்களுக்கு அனுமதி கிடைக்க மாட்டேங்கு வே...” என்றார், அண்ணாச்சி.“மாநாடு நடத்துங்கோன்னு நிர்ப்பந்தம் பண்றா ஓய்...” என, அடுத்த தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.“எந்த கட்சியில பா...” என கேட்டார், அன்வர்பாய்.“கட்சியில இல்ல... சமீபத்துல, சில, சார் - பதிவாளர் ஆபீஸ்கள்ல வெளியாட்கள் புகுந்து தாக்குதல் நடத்தினாளோல்லியோ... இதனால, தங்களுக்கு பாதுகாப்பு இல்லன்னு, சார் - பதிவாளர்கள் எல்லாம் புலம்பறா ஓய்...“தங்களது அதிருப்தியை காட்டும் வகையில், சார் - பதிவாளர்கள் மற்றும் ஊழியர்கள் சமீபத்துல கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தா... இது, மேலிடத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திடுத்து ஓய்...“இந்த நெருக்கடியை சமாளிக்கும் வகையில், பதிவுத்துறை பணியாளர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் சங்க மாநாட்டை மதுரையில் நடத்தும்படியும், அதுல, அரசை புகழ்ந்து பேசும்படியும் உத்தரவு போட்டிருக்கா... இதன் வாயிலா, 'பதிவு துறையில எந்த பிராப்ளமும் இல்ல'ன்னு காட்டிக்க நினைக்கறா ஓய்...” என்றார், குப்பண்ணா.“கணவர்கள் தொல்லை தாங்க முடியல பா...” என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.“எந்த உள்ளாட்சி அமைப்புலங்க...” என, பட்டென கேட்டார் அந்தோணிசாமி.“காஞ்சிபுரம் மாநகராட்சி, தி.மு.க., வசம் தான் இருக்கு... மாநகராட்சி பெண் கவுன்சிலர்களுக்கு பதிலாக, அவங்க கணவர்கள் தான் வார்டுகள்ல ஆதிக்கம் செலுத்துறாங்க பா...“வழக்கமா, எல்லா உள்ளாட்சி அமைப்பு கள்லயும் இது நடக்கிறது தான்... ஆனா, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகளை, கணவர்கள் தரப்பு ரொம்பவே மிரட்டுது பா...“குறிப்பா, வரிகள், கட்டட அனுமதி உள்ளிட்ட பிரிவுகள்ல இருக்கிற அதிகாரிகளை மிரட்டுறதும் இல்லாம, கமிஷன் கேட்டும் நெருக்கடி குடுக்கிறாங்க... தங்களது ஆபீஸ் தேடி வந்து மிரட்டும் கவுன்சிலர்களின் கணவர்களால, பல அதிகாரிகள் நீண்ட விடுப்புல போயிடலாமான்னு யோசிக்கிறாங்க... 'புதுசா வந்திருக்கிற மாநகராட்சி கமிஷனர், இவங்களை கட்டுப்படுத்தணும்'னு அதிகாரிகள் சொல்றாங்க பா...” என முடித்தார், அன்வர்பாய்.பெஞ்சில் மேலும் சிலர் அமர, நண்பர்கள் குழு கலைந்தது.