உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சகாக்களிடமே கட்டிங் கேட்கும் அதிகாரிகள்!

சகாக்களிடமே கட்டிங் கேட்கும் அதிகாரிகள்!

நா ளிதழை மடித்த படியே, ''ஆளுங்கட்சியினரே சரண்டர் ஆகிட்டாங்க பா...'' என, முதல் ஆளாக பேச்சை துவங்கினார் அன்வர்பாய். ''யாருகிட்டங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. “மதுரை தொகுதி மா.கம்யூ., - எம்.பி., யான வெங்கடேசனுக்கும் , கூட்டணி கட்சியான தி.மு.க.,வினருக்கும் எப்பவுமே ஆகாது... சமீபத்துல, 'குப்பை நகரமான மதுரை மாநகராட்சி, துாய்மை இந்தியா திட்டத்தில் கடைசி இடத்துக்கு போயிடுச்சு'ன்னு வெங்கடேசன் கிண்டல் பண்ணியிருந்தாரு பா... ''இதுக்கு, 'தெரு தெருவா அலைஞ்சு ஓட்டு கேட்டு உங்களை ஜெயிக்க வச்சா, மாநகராட்சியை குப்பைன்னு திட்டுறீங்களா'ன்னு தி.மு.க.,வினர் ஆவேசமாகிட்டாங்க... பதிலுக்கு, '2026 சட்டசபை தேர்தலில், எங்க கூட்டணி இருந்தால் தான் ஆட்சியை பிடிக்க முடியும்'னு மார்க்சிஸ்ட் கட்சியினரும் பதிலடி தந்தாங்க... ''இது, ஆளுங்கட்சி மேலிடம் வரைக்கும் போக, 'இனி எம்.பி., குறித்து யாரும் விமர்சிக்க கூடாது'ன்னு ஆளுங்கட்சி மாவட்ட செயலர் தளபதி அறிக்கை விட்டு, பிரச்னைக்கு முற்றும் போட்டுட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய். ''புகாரை கண்டுக்கவே மாட்டேங்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... ''துாத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் ஆளுங்கட்சி முக்கிய புள்ளிக்கு, பெயருக்கு ஏத்த மாதிரியே பெண்கள் சகவாசம் ஜாஸ்தி... இவரது கடையில் பணிபுரிந்த விதவை பெண்ணை, திருமணம் பண்ணிக்கறதா சொல்லி நெருங்கி பழகிட்டு ஏமாத்திட்டார் ஓய்... ''அந்த பெண், போலீஸ்ல புகார் குடுத்து, ஆளுங்கட்சி புள்ளி மீது வழக்கு மட்டும் பதிவு பண்ணா... ஆனா, மேல் நடவடிக்கை எடுக்கல ஓய்... ''தி.மு.க., புள்ளி, வேற ஒரு பெண்ணுடன் நெருக்கமா பழகி, அதை வீடியோவும் எடுத்து, அப்பெண்ணின் கணவருக்கே அனுப்பிட்டார் ... இது சம்பந்தமா போலீஸ்ல புகார் குடுத்தும், போலீசார் கண்டுக்கல... ''இப்படி, தொடர்ந்து பெண்கள் வாழ்க்கையில் விளையாடும் இவருக்கு, ஆளுங்கட்சியின் தெற்கு மாவட்ட முக்கிய புள்ளியின் அமோக ஆதரவு இருக்காம் ஓய்...'' என்றார், குப்பண்ணா. டீ கடை ரேடியோவில் ஒலித்த, 'கண்ணன் வருவான்... கதை சொல்லுவான்...' என்ற பாடலை ரசித்தபடியே, ''சகாக்களிடமே வசூல் பண்ணுதாவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி. ''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி. எம்.டி.ஏ., இருக்குல்லா... இங்க, கட்டட அனுமதி கேட்டு வர்ற விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்க, அதிகாரிகள், 'கட்டிங்' வசூல் பண்ணுதாவ வே... ''சி.எம்.டி.ஏ.,வுல அனைத்து பிரிவு பணியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்குறது நிர்வாக பிரிவின் பொறுப்பு... இங்க முழுநேர அதிகாரிகள் யாரும் இல்ல வே... ''இதனால, தற்காலிக ஏற்பாடா பொறுப்பு அதிகாரிகளை நியமிச்சிருக்காவ... இவங்களுக்கு ஒழுங்கா வேலை செய்ய தெரியல... அதே நேரம், வழக்கமான பதவி உயர்வுக்கு கூட பணியாளர்களிடம் பணம் கேட்டு நெருக்கடி தர்றாவ வே... ''யாராவது எதிர்த்து கேட்டா, 'கட்டட அனுமதிக்கு நீங்க வசூல் பண்ணுதீங்கல்லா... அதுல இருந்து எங்களுக்கு தந்தா குறைஞ்சா போயிடு வீங்க'ன்னு கேட்காவ... இது சம்பந்தமா, சி.எம்.டி.ஏ., உறுப்பினர், செயலர் வரைக்கும் புகார்கள் போயிருக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி. அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஆக 14, 2025 23:41

பெண்கள் வாழ்க்கையில் விளையாடும், தூத்துக்குடி கண்ணன் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள், கர்நாடக மஜத கட்சி ரேவண்ணா போல் மாட்டிக்கொண்டு உள்ளே போவான்.


D.Ambujavalli
ஆக 14, 2025 17:08

Field work என்று சம்பாதிக்க மட்டும் நீங்க, paper work செய்யும் நாங்கள் மட்டும் ஏமாளியா? தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறெதானே


முக்கிய வீடியோ