உறவினர் பெயரில் டெண்டர் எடுக்கும் ஊராட்சி செயலர்கள்!
மெ து வடையை கடித்தபடியே, ' 'வேளச்சேரி உங்களுக்கு தான்னு உறுதி தந்திருக்கார் ஓய்...'' என, அரட்டை கச்சேரியை ஆரம்பித்தார் குப்பண்ணா. ''எந்த கட்சி விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''தமிழக பா.ஜ., தலைவர் பதவியில் இருந்து, அண்ணாமலையை மாற்றியதில் இருந்தே, 'பா.ஜ.,வில் இளைஞர்களை வளர விட மாட்டேங்கறா'ன்னு ஒரு தகவல் பரவிடுத்து... இதை சரி பண்றதுக்காகவே, கட்சியின் மாநில செயலரா இருந்த, 34 வயதே ஆன எஸ்.ஜி.சூர்யாவுக்கு, மாநில இளைஞர் அணி தலைவர் பதவியை மேலிடம் தந்திருக்கு ஓய்... ''சமீபத்துல புதுச்சேரி வந்த, பா.ஜ., தேசிய பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ், சென்னைக்கு வந்தப்போ கார்ல சூர்யாவையும் அழைச்சுண்டு வந்திருக்கார்... ''அந்த பயணத்துல, தமிழகத்துல இளைஞர் அணியை வலுப்படுத்தறது பத்தியும், தி.மு.க., - த.வெ.க.,வுக்கு போகும் இளைஞர்களை, பா.ஜ., பக்கம் ஈர்க்கிறது பத்தியும் அறிவுரை வழங்கி யிருக்கார் ஓய்... ''அதே கையோட, 'சென்னை வேளச்சேரி சட்டசபை தொகுதியை, உங்களுக்கு வாங்கி தரோம்... இப்பவே, அங்க தேர்தல் பணிகளை துவங்கிடுங்கோ'ன்னும் உறுதி குடுத்துட்டு போயிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''பணமில்லாம தவிக் காவ வே...' ' என்ற பெரிய சாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''சேலம் மாவட்டத்தில் பல கிராம ஊராட்சிகள்ல, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்துட்டு இருக்கு... இதுக்கான ஏற்பாடுகளை செய்யும்படி, ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய் துறை யினருக்கு உயர் அதிகாரிகள் வாய்மொழியா உத்தரவு போட்டிருக்காவ வே... ''ஷாமியானா பந்தல், சேர்கள், வண்டி வாடகை, கம்ப்யூட்டர்கள், காலை, மதியம் சாப்பாடு செலவுன்னு ஒரு முகாமுக்கு சராசரியா, 1.50 லட்சம் ரூபாய் செலவாகுது... இதுக்குன்னு ஊரக வளர்ச்சித் துறைக்கு தனியா நிதி எதையும் ஒதுக்கல வே... ''பி.டி.ஓ., மற்றும் மண்டல துணை பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி செயலர்கள் தான் கையில இருந்து செலவு பண்ணுதாவ... 'இந்த பணத்தை திருப்பித் தருவாங்களா அல்லது அரசு நிதியில இருந்து எடுக்க அனுமதி கிடைக்குமா'ன்னு தெரியாம முழி பிதுங்கி கிடக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி. ''ஊராட்சிகள் சம்பந்தமா என்கிட்டயும் ஒரு தகவல் இருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களும், 526 ஊராட்சிகளும் இருக்கு... இந்த ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடிஞ்சிட்டதால, ஊராட்சி செயலர்கள் தான் நிர்வாகம் பண்றாங்க... ''இவங்க, ஒன்றிய அதிகாரிகள் துணையுடன் தங்களது மனைவி, மகன், மகள் மற்றும் உறவினர்கள் பெயர்களை, ஒன்றியங்கள்ல ஒப்பந்ததாரர்களா பதிவு பண்ணியிருக்காங்க... அப்புறமா, ஊராட்சியில் நடக்கும் சாலை, குடிநீர் மற்றும் கட்டடங்கள் கட்டும் பணிகளை, அவங்க பெயர்கள்ல டெண்டர் எடுத்து பண்றாங்க... ''அதுலயும், அவங்க செய்றது தான் வேலை... உதாரணமா, 100 மீட்டர் போட்ட சாலைகளை, 150 மீட்டர், 200 மீட்டர் போட்டதா கணக்கு காட்டுறாங்க... ஒன்றிய அதிகாரிகளும் இவங்க வைக்கிற பில்களை உடனுக்குடன், 'ஓகே' பண்ணிடுறாங்க... ''அதுவும் இல்லாம, காலியா இருக்கிற ஊராட்சி செயலர் பணியிடங்களையும் கூடுதல் பொறுப்பா கேட்டு வாங்கி , அங்கயும் இப்படி டெண்டர் எடுத்து புகுந்து விளையாடுறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி. பேச்சு முடியவே, பெரியவர்கள் கிளம்பினர்.