பெண் கொலை வழக்கில் சக ஊழியரை தேடும் போலீஸ்
காஞ்சிபுரம், காரை பகுதியில் செயல்படும் அட்டை கம்பெனியில், பெண் கொலை வழக்கில், உடன் பணியாற்றி வந்த நபர் தலைமறைவான நிலையில், போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.காஞ்சிபுரம் அடுத்த, காரை பகுதியில், அட்டை பெட்டிகள் தயாரிக்கும் தனியார் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனி வளாகத்திற்குள்ளேயே, ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த, ஹெப்சிபா மேரி, 41, என்ற பெண், தலை உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன், கடந்த சனிக்கிழமை இரவு இறந்து கிடந்துள்ளார்.கம்பெனி ஊழியர்கள் பெண் உடலை பார்த்தவுடன், பொன்னேரிக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இறந்த ஹெப்சிபா மேரி, அட்டை கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து வெறும் மூன்று நாட்களே ஆனதாகவும், இவர் தலை உள்ளிட்ட இடங்களில் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.மேலும், அவர் அணிந்திருந்த நகைகளும் மாயமாகி இருந்தன. கம்பெனியில் பணியாற்றிய ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அங்கு பணியாற்றி வந்த கணபதிபுரத்தைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. கம்பெனியில் போலீசார் தேடும்போது, அவர் மாயமாகி உள்ளார்.கொலை சம்பவம் நடந்த சனிக்கிழமை பணியில் இருந்த செந்தில்நாதன் அன்று முதல் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க, டி.எஸ்.பி.,சங்கர்கணேஷ் தலைமையில், பொன்னேரிக்கரை போலீஸ் ஆய்வாளர் அலெக்சாண்டர், உதவி ஆய்வாளர் கிஷோர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் தனித்தனியாக தேடி வருகின்றனர்.தலைமறைவாக உள்ள செந்தில்நாதனை பிடித்தால்தான், அவருடன் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது தெரியவரும் என, போலீசார் தெரிவிக்கின்றனர்.