கோவில் நகைகளை திருடி அடமானம் வைத்த பூசாரி கைது
தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே கோவில் நகைகளை அடமானம் வைத்த பூசாரியை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கஞ்சனுார், கீழ வீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் துகிலியைச் சேர்ந்த லட்சுமணன், 36, பூசாரியாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், கோவில் கும்பாபிஷேகத்திற்காக, கமிட்டி உறுப்பினர்கள் கோவிலில் சாமி நகைகள் வைக்கப்பட்டிருந்த பீரோவை திறக்க, அவரிடம் சாவியை கேட்டனர். சாவி தொலைந்து போனதாக கூறினார்.இருப்பினும், ஜூன், 5ல் கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பின், அந்த பீரோவை உடைத்து கிராம மக்கள் பார்த்தனர். அப்போது, பீரோவிற்குள் அம்மன் நகைகளை வைத்திருந்த பெட்டியை காணவில்லை. இது தொடர்பாக, கோவில் கமிட்டி உறுப்பினர் வேல்வேந்தன், நேற்று முன்தினம், திருப்பனந்தாள் போலீசில் புகார் அளித்தார்.லட்சுமணன் மீது சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் 7 சவரன் தங்க நகைகளை திருடி, அடமானம் வைத்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர்.