உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / எல்லா இடத்திலேயும் ஜெயில் கட்ட எதிர்ப்பு!

எல்லா இடத்திலேயும் ஜெயில் கட்ட எதிர்ப்பு!

கருப்பட்டி காபியை பருகியபடியே, ''இன்ஸ்பெக்டரை இட மாற்றம் பண்ண முயற்சி நடக்கு வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''கோவை சிட்டி போலீஸ் கமிஷனர், துறை ரீதியா இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சொல்ற தகவல்கள், மீட்டிங்கில் பேசப்படும் முக்கிய விஷயங்கள் எல்லாம், கட்சி நிர்வாகிகளுக்கு, 'லீக்' ஆகியிருக்கு வே...''இது ரொம்ப நாளா நடக்கவே, உளவுத்துறையினர் ரகசியமா விசாரணை நடத்தியிருக்காவ... இதுல, கோவையில் கல்லுாரிகள் அதிகம் இருக்கும் ஏரியா இன்ஸ்பெக்டர் தான், தகவல்களை கட்சிக்காரங்களுக்கு, 'பாஸ்' செஞ்சாருன்னு தெரிஞ்சிட்டு... இப்ப, அந்த இன்ஸ்பெக்டரை டம்மி இடத்துக்கு மாத்த ஏற்பாடு நடக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.''மூடி மறைக்க பார்க்கறா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.''யாரு, எதை மறைக்க பார்க்கிறாங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் சிறுநீரக பிரிவில், சிறப்பு டாக்டரா இருக்கறவர், அதே ஊர்ல தனியா மருத்துவமனையும் நடத்தறார்... இங்க வேலை பார்த்த ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியா அத்துமீறியிருக்கார் ஓய்...''அதுவும் இல்லாம, 'இதை வெளியில சொன்னா, கொலை பண்ணிடுவேன்'னும் அந்த பெண்ணை மிரட்டியிருக்கார்... அந்த பெண், தன் பெற்றோரிடம் விஷயத்தை சொல்ல, அவா வந்து டாக்டரை கண்டிச்சிருக்கா ஓய்...''விஷயம் உள்ளூர் போலீசுக்கு போக, டாக்டரும், பெண்ணும் வேற வேற சமுதாயத்தைச் சேர்ந்தவாங்கறதால, பிரச்னை வந்துடப்படாதுன்னு போலீசார் மூடி மறைக்க பார்த்திருக்கா...''இதனால பாதிக்கப்பட்ட பெண், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் மூலமா புகார் அனுப்பிட்டாங்க... இதனால, என்ன பண்றதுன்னு தெரியாம உள்ளூர் போலீசார் தவிச்சுண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''ஜெயிலுக்கு இடம் கிடைக்காம தவிக்கிறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''மதுரை சிட்டிக்குள்ள நெருக்கடியான இடத்துல இருக்கிற மத்திய சிறையை, சென்னை புழல் மாதிரி, புறநகருக்கு மாத்த முடிவு செஞ்சாங்க... முதல்ல, திருவாதவூர் அருகே இடையப்பட்டியில் இடம் பார்த்தாங்க பா..''அது, பல்லுயிர் தளம்னு எதிர்ப்பு கிளம்பியதால, வாடிப்பட்டி அருகே தெக்கூரில் இடம் பார்த்தாங்க... அது, பசுமை வழித்தடம்னு மக்கள் எதிர்க்கவே, மேலுார் அருகே செம்பூர்ல அரசு புறம்போக்கு நிலம், 87 ஏக்கரை தேர்வு பண்ணி, பூமி பூஜையும் போட்டுட்டாங்க பா...''ஆனா, 'இங்க ஜெயில் கட்டுனா, கால்நடைகள் மேய்ச்சல் பாதிக்கும்... எங்க வாழ்வாதாரம் போயிடும்'னு அந்த பகுதி மக்கள், கலெக்டர், ஆர்.டி.ஓ.,விடம் புகார் குடுத்திருக்காங்க பா...''இதனால, கட்டுமான பணிகளை பண்றதா, வேண்டாமான்னு காவலர் வீட்டு வசதி கழக அதிகாரிகள் கையை பிசைஞ்சுட்டு இருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.''இப்படி எல்லா இடத்துலயும் எதிர்ப்பு தெரிவிச்சுட்டே இருந்தா, கடலுக்குள்ள தான் ஜெயிலை கட்டணும் போல...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கிஜன்
பிப் 10, 2025 07:36

ஒரு இடத்துல பள்ளிக்கூடமோ ...கல்லூரியோ வருகிறதென்றால் .... அந்த பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ...நிலமதிப்பு உயரும் .... சிறைச்சாலை வருகிறதென்றால் ....அனைவரும் இடத்தை காலிசெய்ய வேண்டியது தான் .... அவர்கள் எதிர்ப்பில் நியாயம் உள்ளது ....


சமீபத்திய செய்தி