உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அரசு நிலத்தை ஆக்கிரமித்த ஆளுங்கட்சி புள்ளிகள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்த ஆளுங்கட்சி புள்ளிகள்!

நாளிதழை மடித்தபடியே, ''அமைச்சர் கனவுல மிதந்தவங்களுக்கு, சீனியர்கள் தடை போட்டுட்டாங்க...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''கோர்ட் நெருக்கடியால செந்தில் பாலாஜியும், பொன்முடியும், அமைச்சர் பதவியை ராஜினாமா செஞ்சாங்களே... அவங்களுக்கு பதிலா, புதுசா ரெண்டு பேருக்கு வாய்ப்பு குடுக்க முதல்வர் நினைச்சிருக்காருங்க...''ஆனா, அதுக்கு மூத்த அமைச்சர்கள் பலரும் முட்டுக்கட்டை போட்டுட்டாங்க... அதாவது, ஒவ்வொரு அமைச்சரும், தங்கள் பகுதியில் இருந்து வேற யாராவது அமைச்சராகிட்டா, தங்களுக்கு முக்கியத்துவம் குறைஞ்சு போயிடும்னு நினைச்சு தடுத்துட்டாங்க...''சீனியர்கள் நெருக்கடியால, முதல்வரும் வேற வழியில்லாம, ஏற்கனவே அமைச்சர் பதவியில இருந்து நீக்கப்பட்ட மனோ தங்கராஜை மட்டும் அமைச்சராக்கிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.''கோழி தீவனத்துக்காக ரேஷன் அரிசியை கடத்துதாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''சென்னையை அடுத்துள்ள செங்குன்றத்தில், சைதாப்பேட்டை தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் இருக்கு... இதன் கட்டுப்பாட்டுல செங்குன்றம், புழல், வடகரை, சோழவரம், ஆவடி சுற்றுவட்டாரங் கள்ல, 85 ரேஷன் கடைகள் இயங்குது வே...''ஒவ்வொரு கடையிலும், 800 முதல் 1,400 ரேஷன் கார்டுகள் இருக்கு... இந்த கடைகள்ல, 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில இருக்காவ வே...''ஆந்திராவுல இருக்கிற கோழித்தீவன தொழிற்சாலைகளுக்கு, இந்த ரேஷன் கடைகள்ல இருந்து அரிசியை கடத்திட்டுப் போறாவ... இதனால, மொத்த கார்டுதாரர்கள்ல, 30 சதவீதம் பேருக்கு அரிசி, கோதுமை கிடைக்க மாட்டேங்கு வே...''இதை கண்டுக்காம இருக்க, கூட்டுறவு சங்கத்துல இருக்கிற இரண்டு அதிகாரிகள், கடைக்கு மாசம் 1,500 ரூபாய் வீதம், 'கட்டிங்' கறந்துடுதாவ... இதுதவிர, ஒவ்வொரு ஊழியரின் சம்பளத்துல இருந்தும், தனியா 500 ரூபாய் வாங்கிடுதாவ... எந்த கெடுபிடியும் இல்லாம, தினமும் பல ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, ஆந்திராவுக்கு போகுது வே...'' என்றார், அண்ணாச்சி.''வாங்க நீதிராஜன்... தணிகாசலம் இப்பதான் கிளம்பினார்...'' என, நண்பரை வரவேற்ற குப்பண்ணாவே, ''அரசு நிலங்களை ஆக்கிரமிக்கறா ஓய்...'' என்றார்.''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''துாத்துக்குடியில், சமீபகாலமா உப்பு உற்பத்தி குறைஞ்சுட்டே போறது... இதனால, 'உப்பு உற்பத்தியை அதிகரிக்க போறோம்' என்ற பெயர்ல, அரசு புறம்போக்கு நிலங்களை, ஆளுங்கட்சி புள்ளிகள் ஆக்கிரமிக்கும் சம்பவங்கள் அதிகமா நடக்கறது ஓய்...''உதாரணத்துக்கு, முள்ளக்காடு பகுதியில், 2,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடக்கறது... ஆளுங்கட்சியின் முக்கிய பெண் பிரமுகர், தன் மகன் பெயர்ல புதுசா உப்பு கம்பெனி ஆரம்பிச்சிருக்காங்க ஓய்...''இந்த கம்பெனிக்காக, பல்வேறு பினாமி பெயர்கள்ல, அங்குள்ள 200 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிச்சிருக்காங்க... பக்கத்துலயே மூணு குடோன்களையும் கட்டியிருக்காங்க ஓய்...''இதனால, 'முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதிகள்ல புதுசா வந்திருக்கற உப்பளங்கள்ல ஆய்வு நடத்தி, ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை மீட்கணும்'னு அப்பகுதி மக்கள் சொல்றா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ