பேச்சு, பேட்டி, அறிக்கை
காங்., மூத்த தலைவரும், புதுச்சேரி முன்னாள் முதல்வருமான நாராயணசாமி பேட்டி:
தமிழக மக்களை அவமதிக்கும் வகையிலும், அரசுக்கு தொல்லை கொடுக்கும் வகையிலும், கவர்னர் ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவர், மத்திய அரசின் கைப்பாவையாக இருந்து, பிரதமர் மோடிக்கு சேவகம் செய்கிறார். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழ் மக்களின் உணர்வுக்கும் மதிப்பளிக்காமல், பாரபட்சமாக செயல்படும் அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.கவர்னர்களை வச்சு, மாநில அரசுகளுக்கு குடைச்சல் கொடுக்கலாம் என்பதை துவக்கி வச்சதே இவரது கட்சி தானே! இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் முத்தரசன் பேட்டி: இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த பிரச்னைகளுக்கு, மத்திய அரசு சரியான தீர்வு காண வேண்டும்.ஒரு காலத்துல, இந்த மாதிரி பிரச்னைக்கெல்லாம் கம்யூனிஸ்ட்கள் போராட்டம் பேச வைக்கும்... இப்ப, இவங்க இருக்கிற இடமே தெரியலையே!தமிழக துணை முதல்வர் உதயநிதி பேச்சு: கடந்த, 2024 தேர்தல், 'செமி பைனல்' தான். அதில் நாம் வெற்றி பெற்று விட்டோம். 2026ல் நடக்கவுள்ள தேர்தல், 'பைனல் மேட்ச்' ஆக இருக்கும். அதில் கண்டிப்பாக, 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற வேண்டும். அரசு திட்டங்களை, அமைச்சர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் வாயிலாக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.திட்டங்களை சேர்க்கிறீங்களோ இல்லையோ, தேர்தலுக்கு முதல் நாள் கொண்டு சேர்க்கிற, 'நோட்டு'கள் தான் வெற்றிக்கு உதவும்!பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில் தலைவிரித்தாடும் கந்துவட்டி கொடுமைகளை, தமிழக அரசும், காவல் துறையும் வேடிக்கை பார்ப்பதற்கும், கந்து வட்டிக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும் உதாரணம்தான் நெல்லை சாவித்ரி படுகொலை. ஆளுங்கட்சி ஆதரவுடன் செயல்படும் கந்து வட்டிக்காரர்களை கட்டுப்படுத்தாத வரை, இதுபோன்ற படுகொலை களை தவிர்க்க முடியாது. கடுமையான தண்டனைகளுடன், புதிய கந்துவட்டி தடை சட்டத்தை அரசு இயற்ற வேண்டும்.வட்டி தொழில் செய்யும், 90 சதவீதம் பேர் அரசியல்வாதிகள் என்பதால், என்ன சட்டம் இயற்றி, என்ன பிரயோஜனம்?