உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  ரவுடி கும்பலுடன் மது அருந்தி சீட்டாடும் எஸ்.எஸ்.ஐ.,

 ரவுடி கும்பலுடன் மது அருந்தி சீட்டாடும் எஸ்.எஸ்.ஐ.,

துண்டால் பெஞ்சை தட்டியபடியே அமர்ந்த பெரியசாமி அண்ணாச்சி, ''வேவு பார்க்கவே சொந்தக்காரங்களை வச்சிருக்காரு வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார். ''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா. ''காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தின் முக்கிய பதவியில், தி.மு.க., முன்னாள் முதல்வர் பெயர் கொண்டவர் இருக்காரு... இவரது சொந்தக்காரர் ஒருத்தர், அலுவலக உதவியாளரா இருக்காரு வே... ''மனைகளுக்கு ஒப்புதல், கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி சம்பந்தமான பைல்களை எல்லாம், இவர்தான் தயார் பண்ணி, அதிகாரிகளுக்கு அனுப்புதாரு... அந்த பைல்களின் நிலை குறித்து, அப்பப்ப தி.மு.க., முக்கிய புள்ளிக்கு தகவல் தர்றாரு வே... ''அதேபோல, முக்கிய புள்ளியின் மற்றொரு சொந்தக்காரர், ஒன்றிய அதிகாரியின் வாகன ஓட்டுநரா இருக்காரு... இவரும், அதிகாரி எங்க எல்லாம் போறார், யார் யாரை பார்க்கிறார்னு, தி.மு.க., முக்கிய புள்ளிக்கு தகவல் குடுத்துடுதாரு வே... ''தனக்கு தெரியாம, அதிகாரிகள், 'கட்டிங்'ல புகுந்து விளையாடிருவாங்களோன்னு சந்தேகப்பட்டு தான், உறவினர்களை உளவாளிகளா தி.மு.க., புள்ளி நியமிச்சிருக்கிறதா, ஒன்றிய ஊழியர்கள் பேசிக்கிடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி. ''கந்தவேல், சுரேஷ் இப்படி உட்காருங்க... உங்க சொந்தக்காரர் கருணாநிதி சவுக்கியமா...'' என கேட்ட அந்தோணிசாமியே, ''மாவட்ட செயலரை கண்டுக்கவே இல்லைங்க...'' என்றார். ''எந்த கட்சியில பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் - தனி தொகுதியில, அ.தி.மு.க., கூட்டணியில், அ.ம.மு.க., வேட்பாளரா முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தர்ராஜ் போட்டியிடுறாரு... இங்க போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் ராமஜெயம், வெளியூர்காரர்ங்கறதால, சுந்தர்ராஜுக்கு தொகுதிக்குள்ள ஓரளவு ஆதரவு இருக்குதுங்க... ''ஆனா, சுந்தர்ராஜ் வேட்பு மனு தாக்கல் செய்ய போகும்போதே, தன் கட்சி மாவட்ட செயலர் ஜேனியேலை அழைச்சிட்டு போகாம புறக்கணிச்சிட்டாரு... இத்தனைக்கும், ஜேனியேல் சார்ந்த சமூக ஓட்டுகள் அந்த தொகுதியில் அதிகம் இருக்குது... வேட்பாளர் தன்னை கண்டுக்காம இருக்கிறதை பத்தி, கட்சி தலைமைக்கு ஜேனியேல் புகார் அனுப்பியிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''எஸ்.எஸ்.ஐ.,யின் அடாவடியை கேளுங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்... ''சென்னை ஆலந்துார், எம்.கே.என்., சாலையில் இருக்கிற போலீசார் குடியிருப்புல, 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்குது... இங்க ஒரு எஸ்.எஸ்.ஐ.,யும் குடியிருக்காரு பா... ''இவர், தன் வீட்டுக்கு பின்புறம் சட்டவிரோதமா கூடாரம் அமைச்சிருக்காரு... வ.உ.சி., நகரை சேர்ந்த ரவுடி கும்பலுடன் சேர்ந்து கூடாரத்துல மது அருந்திட்டே, கேரம் போர்டு மற்றும் காசு வச்சு சீட்டு ஆடுறாரு பா... ''ரவுடி கும்பல், அந்த வழியா போற பெண்களை கேலியும், கிண்டலும் பண்ணுது... இந்த எஸ்.எஸ்.ஐ., நிறைய குற்ற வழக்குகள்ல தொடர்பு இருக்கிறவங்களுக்கு அடைக்கலம் குடுத்து காப்பாத்திட்டும் இருக்காரு பா... ''இதுல என்ன வேடிக்கைன்னா, மொத்த குடியிருப்புக்கும் இவர் தான், 'லைன் இன்சார்ஜ்' எனும் பொறுப்பாளர் பதவியிலும் இருக்காரு... இதனால, இவரை தட்டி கேட்க பலரும் தயங்குறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய். ''கோடீஸ்வரன், நாளைக்கு பார்க்கலாம் ஓய்...'' என, நண்பரிடம் குப்பண்ணா விடைபெற, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை