நாளிதழை மடித்தபடியே, ''ஊட்டிக்கு துாக்கி அடிச்சிடுவேன்னு மிரட்டுறாரு பா...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''இந்த வெயிலுக்கு நல்லா 'குளுகுளு'ன்னு இருக்குமேங்க...'' என்றார், அந்தோணிசாமி.''முழுசா கேளுங்க... கோவை ரயில்வே போலீஸ்ல ஒரு அதிகாரி இருக்காரு... இவரது கட்டுப்பாட்டுல, அஞ்சு ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்குது பா...''இதுல, 'அவுட் டியூட்டி' எனும் ஓ.டி., பார்க்க போலீசாருக்குள்ள போட்டியே நடக்கும்... ஏன்னா, 'கட்டிங்' கை நிறைய கிடைக்கும் பா...''ஆனா தனக்கு, 'கட்டிங்' வெட்டுற போலீசாருக்கு தான், அதிகாரி ஓ.டி., போடுவாரு... அதிகாரி, ஸ்டேஷன்களுக்கு ஆய்வுக்குப் போறப்ப, தடபுடலான அசைவ விருந்து இருக்கணும் பா...''யாராவது சைவ சாப்பாடு வாங்கி வச்சுட்டா, அவங்களை, 'ஊட்டி ஸ்டேஷனுக்கு மாத்திடுவேன்'னு மிரட்டுறாரு... ஏற்கனவே, இந்த மாதிரி ரெண்டு போலீசாரை, 'பனிஷ்மென்ட்'டா ஊட்டிக்கு மாத்தியிருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.''பாபு, இங்கன உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த பெரியசாமி அண்ணாச்சியே, ''ஊட்டின்னதும் தான் ஞாபகம் வருது... இதையும் கேளுங்க வே...'' என்றபடியே தொடர்ந்தார்...''நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கீழ்கோத்தகிரி மற்றும் கட்டபெட்டு வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகள்ல, ஆயிரக்கணக்கான ஏக்கர் பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்கள்ல தேயிலை தோட்டங்கள் இருக்கு... இதுல, ஊடுபயிரா சில்வர் ஓக் மரங்களை வளர்க்காவ வே...''எந்த அனுமதியும் வாங்காம, தினமும் பல லாரிகள்ல இந்த சில்வர் ஓக் மரங்களை வெட்டி, மேட்டுப்பாளையத்துல இருக்கிற மர அறுவை மில்களுக்கு கடத்துதாவ... இந்த லாரிகள்ல, குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் மட்டும் பெயரளவுக்கு சோதனை போடுதாவ வே...''வனத்துறை அதிகாரிகளுக்கு மர வியாபாரிகளிடம் இருந்து கரெக்டா மாமூல் வந்துடுறதால, அவங்க கண்டுக்க மாட்டேங்காவ... வருவாய்த் துறையினரும் அலட்சியமா இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''கருணாநிதி சமாதியில மனு குடுத்திருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 1.20 லட்சம் பேர் வேலைக்கு காத்துண்டு இருக்கா... இதுல பலரும், தனியார் பள்ளிகள்ல சொற்ப சம்பளத்துக்கு வேலை பார்க்கறா ஓய்...''இவா, 'இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வர்கள்' எனும், டி.என்.எஸ்.ஜி.டி., என்ற அமைப்பை நடத்திண்டு இருக்கா... இவா, 'துவக்கப் பள்ளிகளில் உள்ள, 11,000 ஆசிரியர் காலியிடங்களை நிரப்பணும்'னு தொடர்ந்து போராடறா ஓய்...''இந்த சூழல்ல, 2,768 பணியிடங்களை நிரப்ப நியமன தேர்வு நடத்தினா... ஆனா, நிதி நிலையைக் காரணம் காட்டி இந்த பணியிடங் களையும் நிரப்பாம வச்சிருக்கா ஓய்...''பலமுறை அமைச்சர்கள், அதிகாரிகள், துணை முதல்வர், முதல்வரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்ல... அரசின் கவனத்தை ஈர்க்க விதவிதமா போராடி பார்த்துட்டா ஓய்...''இந்த சூழல்ல, சமீபத்துல முதல்வரை சந்திக்க முயற்சி பண்ணி, முடியல... இதனால, முதல்வரின் தந்தையான கருணாநிதி நினைவிடத்துக்கு போய், கோரிக்கை மனுவை வச்சு முறையிட்டிருக்கா... இது சம்பந்தமான வீடியோவை சமூக வலைதளங்கள்ல வெளியிட்டு, 'இனியாவது எங்களுக்கு விடியல் பிறக்குமா'ன்னும் கேட்டிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.