உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  பக்தர்களிடம் கோவில் ஊழியர்கள் வசூல் வேட்டை!

 பக்தர்களிடம் கோவில் ஊழியர்கள் வசூல் வேட்டை!

போ கி கொண்டாட்ட புகை மூட்டத்துக்கு நடுவே, பெஞ்சில் ஆஜரான குப்பண்ணா, “பழைய அதிகாரிகளை தேட முடியாம சிரமப்படறா ஓய்...” என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார். “யாரை சொல்றீங்க பா...” என கேட்டார், அன்வர்பாய். “பள்ளிக்கல்வி துறையில், 38 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பணியிடம் காலியா கிடக்கு... இவற்றை நிரப்ப, பதவி உயர்வுக்கு தகுதியான தலைமை ஆசிரியர்கள் பட்டியலை, கல்வித் துறை வெளியிட்டிருக்கு ஓய்... “இதுல, 100க்கும் மேற்பட்டவா இருக்கா... இவாளது பணிக்கால செயல்பாடுகள் பத்தி, அப்ப பணியில் இருந்த, மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் அறிக்கை வாங்கி தரணும் ஓய்... “இந்த வகையில, ஒரு தலைமை ஆசிரியர், 10க்கும் மேற்பட்ட பழைய அதிகாரிகளிடம் அறிக்கை வாங்க வேண்டியிருக்கு... பழைய அதிகாரிகள் பெரும்பாலும், 'ரிட்டயர்' ஆகி, சொந்த ஊர்கள்ல செட்டிலாகிட்டா ஓய்... “இன்னும் சிலர், மகன், மகளுடன் வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் கூட போயிட்டா... 'இவாளை எல்லாம் தேடி பிடிச்சு, அறிக்கை வாங்கறது நடக்கற காரியமா... அதனால, இந்த விதிமுறையை மாத்தணும்'னு தலைமை ஆசிரியர்கள் புலம்பறா ஓய்...” என்றார், குப்பண்ணா. “போலீஸ் அதிகாரி சபதத்தை கேளுங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... “கடலோர தென் மாவட்டத்துக்கு, சமீபத்துல புது போலீஸ் அதிகாரி ஒருத்தரை நியமிச்சிருக்காங்க... இப்படி புதுசா வர்ற அதிகாரிகள், பத்திரிகையாளர்களை பார்த்து, மாவட்டத்துல இருக்கிற பிரச்னைகளை கேட்டு தெரிஞ்சிக்குவாங்க... “இந்த அதிகாரி, பத்திரிகையாளர்களை சந்திக்கவே இல்ல... 'மாவட்ட போலீஸ்ல மாற்றம் பண்றேன்'னு, பல பிரிவுகள்ல அதிரடி இடமாறுதல்களை போட்டிருக்காருங்க... “அதோட, கஞ்சா நடமாட்டத்தை குறைக்க, ரோந்து பணியை தீவிரப்படுத்தியிருக்காரு... 'எல்லாத்தையும் கட்டுப்படுத்திட்டு தான் பத்திரிகையாளர்களை சந்திப்பேன்'னு சபதமே போட்டிருக்காருங்க... “அதே நேரம், 'என்னதான் தீவிரமா வேலை பார்த்தாலும், ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு, பாஸ்போர்ட் பிரிவு, புகார் மனுக்கள் பிரிவுகள்ல பல வருஷங்களா இருக்கிறவங்களை களை எடுத்தா தான், அதிகாரி நினைச்சதை சாதிக்க முடியும்'னு மற்ற போலீஸ் அதிகாரிகள் சொல்றாங்க...” என்றார், அந்தோணிசாமி. “வாரும், சிலம்பரசன்... துாத்துக்குடியில இருந்து எப்ப வந்தீரு...” என, நண்பரிடம் நலம் விசாரித்த பெரியசாமி அண்ணாச்சியே, “பக்தர்களிடம் வசூல் வேட்டை நடக்கு வே...” என்றார். “எந்த கோவில்ல ஓய்...” என கேட்டார், குப்பண்ணா. “காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்ல, போன டிச., 8ல், கும்பாபிஷேகம் நடந்துச்சு... இப்ப, மண்டலாபிஷேகம் நடக்கிறதால, தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வர்றாவ வே... “இங்க, விரைவு தரிசனத்துக்கு, 100 ரூபாய் கட்டணம்... அதுலயும் நீண்ட நேரம் ஆகிறதால, கோவில் ஊழியர்கள் சிலர், பக்தர்களிடம் ரூபாயை வாங்கிட்டு, குறுக்கு வழியில சுவாமி தரிசனம் செய்ய அழைச்சிட்டு போயிடுதாவ வே... “இதனால, வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் சண்டை போடுதாவ... சமீபத்துல, கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் பக்தர்கள் வாக்குவாதம் செஞ்ச வீடியோ வெளியாச்சு வே... “ஆனா, கோவில் பெண் அதிகாரி எதையும் கண்டுக்காம இருக்காங்க... அவங்க சரியா இல்லாததால, ஊழியர்கள் ஆட்டம் போடுதாவ வே...” என முடித்தார், அண்ணாச்சி. ஒலித்த மொபைல் போனை எடுத்த அந்தோணிசாமி, “சொல்லுங்க, முத்துலட்சுமி மேடம்...” என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anantharaman Srinivasan
ஜன 14, 2026 19:45

சிலம்பரசன் என்னதான் கஞ்சா நடமாட்டத்தை சிலம்பாடி கட்டுப்படுத்த முயன்றாலும் அது கடினம். அரசியல்வாதி ஆதரவுடன் நடக்கும் வியாபாரம். லோக்கல் மந்திரி துணையுடன் மேலிடத்துக்கு பிரஷர் கொடுத்து சிலம்பரசனை கூடிய சீக்ரம் பந்தாடி விடுவார்கள்


N Sasikumar Yadhav
ஜன 14, 2026 19:11

இந்துசமய அறமில்லாத்துறையை கழுத்தை பிடித்து கோயில்களிலிருந்து வெளியேற்றினால்தான் கோயில்கள் பிழைக்கும் ஏற்கனவே அந்த கோயில் தங்கத்தேர் என்கிற பெயரில் இருக்கிற ஊர்தியில் பக்தர்கள் கொடுத்த அனைத்து தங்கத்தையும் ஆட்டய போடுகிறானுங்க இந்த மானங்கெட்ட இந்துமத துரோக இந்துமத விரோத திமுக கும்பலுங்க


Venugopal S
ஜன 14, 2026 10:17

இங்கு கோவில் ஊழியர்கள் செய்வது போலவே வேறு பல கோவில்களில் அர்ச்சகர்களும் செய்கின்றனர்!


S.V.Srinivasan
ஜன 14, 2026 08:43

பி ஜே பி சொல்வது போல் யார் ஆட்சிக்கு வந்தாலும், அறநிலைய துறையை ஒழித்துக்கட்ட வேண்டும். கோவில்களிலும் இவனுகளுடைய ஊழல் தாங்க முடியல.


D.Ambujavalli
ஜன 14, 2026 06:11

போலீஸ் ஆபீசர் அவருக்கு எதிரிகள் வெளியே இருந்தால்தானே ரோந்து சுற்றிப் பிடிக்க? புரளும் பணத்தில் எத்தனை percent போகிறதோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை