உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  விதிமீறல் உணவகங்களை கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

 விதிமீறல் உணவகங்களை கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

நாளிதழை மடித்தபடியே, “மேற்பார்வையாளர் மிரட்டலுக்கு அதிகாரிகளே நடுங்கறா ஓய்...” என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா. “எந்த துறையிலங்க...” என கேட்டார் அந்தோணிசாமி. “சென்னை மாநகராட்சியின் அஞ்சாவது மண்டலத்துல, ஒரு வார்டு மேற்பார்வையாளர், 20 வருஷமா அதே இடத்துல இருக்கார்... இதனால, அவரது கண்ணசைவு இல்லாம, அந்த வார்டுல எந்தப் பணிகளும் நடக்காது ஓய்... “சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், சட்டவிரோத கட்டடங்களின் உரிமையாளர்கள், குப்பை கழிவுகள் அள்ளும் ஒப்பந்ததாரர்கள்னு பலரிடமும் வசூல் பண்ணி, அதிகாரிகளுக்கு பிரிச்சு குடுக்கறார்... இவர் மேல நிறைய புகார்கள் வரவே, சமீபத்துல நாலாவது மண்டலத்துக்கு இடமாறுதல் பண்ணிட்டா ஓய்... “ஆனா, புது இடத்துல போய் சேராம, தன் இடமாறுதலை ரத்து பண்ணும்படி ஆளுங்கட்சியினர் மூலமா அதிகாரிகளுக்கு அழுத்தம் தரார்... 'பழைய இடத்துல பணி ஒதுக்கலைன்னா, யார் யாருக்கு எவ்வளவு கட்டிங் வாங்கி குடுத்தேன் என்ற பட்டியலை வெளியிடுவேன்'னும் மிரட்டறார்... இதனால, அதிகாரிகள் எல்லாம் கிலியில இருக்கா ஓய்...” என்றார் குப்பண்ணா. “ரவி, தள்ளி உட்காருங்க...” என்ற அந்தோணிசாமி, “ஒரு காபி விவகாரத்துல, அதிகாரியை பந்தாடிட்டாருங்க...” என்றபடியே தொடர்ந்தார்... “தெற்கு ரயில்வேயின் முக்கிய அதிகாரி ஒருத்தர், சமீபத்துல குடும்பத்துடன் மதுரைக்கு வந்தார்... கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் இருந்த விருந்தினர் இல்லத்துல தங்கினாருங்க... “அவருக்கு உதவிகள் செய்ய, 'வெல்பேர் இன்ஸ்பெக்டர்' எனும் ஆய்வாளரையும், ஒரு பியூனையும் நியமிச்சாங்க... ஆய்வாளரிடம் அதிகாரி, 'மதுரையிலயே நல்ல காபி எங்க கிடைக்குமோ அந்த காபி வேணும்'னு கேட்டிருக்காருங்க... “ஆனா, 'பியூன் வாங்கிட்டு வந்த காபியில சூடே இல்ல'ன்னு சூடான அதிகாரி, ஆய்வாளரை திட்டியதும் இல்லாம, 'சென்னைக்கு போனதும் நான் யார்னு காட்டுறேன்'னு சொல்லிட்டு போயிட்டாருங்க... “சொன்ன மாதிரியே, ஆய்வாளரை மதுரையில் இருந்து அதிரடியா திருவனந்தபுரம் கோட்டத்துக்கு துாக்கியடிச்சிட்டார்... இதனால, ஊழியர்கள் எல்லாம் கொதிச்சு போய், ரயில்வே வாரிய மனிதவளத் துறை அதிகாரியிடம் முறையிட்டிருக்காங்க... “அவரோ, 'அதிகாரி திட்டியதும், இடமாறுதலும் தற்செயலா நடந்திருக்கும்... இருந்தாலும் விசாரிக்கிறேன்'னு சொல்லி இருக்காருங்க...” என்றார் அந்தோணிசாமி. “நாராயணன், இருங்க சேர்ந்து போலாம்...” என்ற அன்வர்பாயே, “உணவு பாதுகாப்பு துறைன்னு ஒண்ணு இருக்கான்னே தெரியல பா...” என்றார். “எந்த ஊருல வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி. “தமிழகத்தின் எல்லா மாவட்டங்கள்லயும், 'ஹோட்டல் உள்ளிட்ட உணவகங்கள்ல அடிக்கடி ஆய்வு நடத்தி, விதிமீறல் இருந்தா நடவடிக்கை எடுக்கணும்'னு அரசு உத்தரவு போட்டிருக்கு... “பனியன் தொழிலாளர்கள் நிறைஞ்ச திருப்பூர்ல ஏராளமான ஹோட்டல்கள், தள்ளுவண்டி உணவகங்கள் நிறைய இருக்கு... இங்க, உணவுகள்ல செயற்கை நிறங்கள் சேர்க்கிறது, எண்ணெயை திரும்ப திரும்ப சூடு பண்ணி பயன்படுத்துறதுன்னு ஏகப்பட்ட விதிமீறல்கள் நடக்குது பா... “குறிப்பா, பல அசைவ உணவகங்கள்ல சுத்தம், சுகாதாரம் இல்லாம சமையல் பண்றாங்க... இதை எல்லாம் கண்டுக்காத உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தங்களது பாக்கெட்டை மட்டும் நிரப்பிக்கிறாங்க பா...” என முடித்தார் அன்வர்பாய் . “செந்தில்குமார், நாளைக்கு பார்க்கலாம்...” என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D Natarajan
செப் 23, 2026 19:24

தேவை , ஒரு துக்காராம் முண்டே


baala
செப் 23, 2026 12:12

இதென்ன புதிதா ?


S.V.Srinivasan
செப் 23, 2026 08:38

லஞ்சம், ஊழலில் சந்தேகமேயில்லாமல் த வெ க, திராவிட மாடல்களின் மூன்றாவது அவதாரம்.


S Subramanian
செப் 23, 2026 06:19

Large number of roadside 'Biriyani' shops have sprung up in all roads in Pallavaram. They display boards 'Bismilla biriyani' 'halal biriyani' etc. Trucks with large aluminum vessels with biriyani is supplied. Nobody knows what kind of hygiene is maintained at kitchens. Students patronize these stalls . The shops oc up half of the roads. Corporation says it doesn't have powers to remove the stalls. Stalls have protection under community umbrella


முக்கிய வீடியோ