உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  அவசரமாக இடமாறுதல் வழங்கி ஆதாயம் அடைந்த அதிகாரி!

 அவசரமாக இடமாறுதல் வழங்கி ஆதாயம் அடைந்த அதிகாரி!

“சாயந்தரம், 6:00 மணிக்கு மேல எங்க போயிடுதாங்கன்னு தெரியல வே...” என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி. “யாரை சொல்றீங்க பா...” என கேட்டார், அன்வர்பாய். “ராமநாதபுரம் நகர்ல இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்கள்ல பணிபுரியும் போலீசாரை, சாயந்தரம் 6:00 மணிக்கு மேல யாராலயும் தொடர்பு கொள்ள முடியல... அடிதடி தகராறுகள், விபத்துகள், சந்தேக நபர்கள் நடமாட்டம் பத்தி தகவல் தெரிவிக்கலாம்னு, போலீசாருக்கு பொதுமக்கள் போன் போட்டா, 'நாட் ரீச்சபிள்'னே வருது வே... “இத்தனைக்கும், போலீஸ் சார்பில் தான் இந்த நம்பர்களை வெளிப்படையா அறிவிச்சிருக்காவ... ஆனா, இதுல எந்த போன் நம்பருக்கு போட்டாலும், கிடைக்க மாட்டேங்கு வே... “நள்ளிரவில் நடக்கிற விபத்து, கொலை போன்ற சம்பவங்கள் பத்தி தகவல் கேட்க பத்திரிகையாளர்கள் போன் போட்டாலும், எந்த நம்பரும் கிடைக்கிறது இல்ல... 'போலீசார், 24 மணி நேரமும் விழிப்பா இருக்கணும்... ஆனா, 6:00 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது'ன்னு சொன்ன வடிவேலு காமெடி மாதிரி, காணாம போயிடுதாங்களே'ன்னு மக்கள் எல்லாம் புலம்புதாவ வே...” என்றார், அண்ணாச்சி. “புறக்காவல் நிலையம் அமைக்க வசூல் வேட்டை நடக்குதுங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... “திருவள்ளூர் மாவட்டம், ஆவடி கமிஷனரகத்தின் கீழ் வர்ற பொன்னேரியில், அரசு மகளிர் பள்ளி பக்கத்துல, மகளிர் புறக்காவல் நிலையம் அமைக்க ஏற்பாடுகள் நடக்குது... இதுக்காக, டாஸ்மாக் பார் நடத்துறவங்க, ரியல் எஸ்டேட்காரங்க, கான்ட்ராக்டர்கள்னு பலரிடமும் போலீசார் வசூல் பண்ணிட்டு இருக்காங்க... “காயலான் கடையில் வாங்கிய பெரிய இரும்பு பெட்டியை சாலை ஓரமா வச்சு, அதுக்கு பெயின்ட் அடிச்சு, 'ஏசி' உள்ளிட்ட நவீன வசதிகளை எல்லாம் செஞ்சிட்டு இருக்காங்க... வசூல் செஞ்ச பணத்துல ஒரு பகுதியில் இந்த செலவுகளை பண்ணிட்டு, மிச்சத்தை ஸ்டேஷன் அதிகாரிகளும், போலீசாரும் பங்கு போட்டுக்கிட்டாங்க... “இதனால, 'புறக்காவல் நிலையத்தை அரசிடம் பணம் வாங்கி அமைக்கலாம் அல்லது தொண்டு நிறுவனங்கள் மூலமா செய்றதை விட்டுட்டு, இப்படி வசூல் வேட்டை நடத்துறது சரியில்ல'ன்னு பலரும் புலம்புறாங்க...” என்றார், அந்தோணிசாமி. “அமைச்சர் வர்றதுக்கு முன்னாடியே அதிரடியா வசூல் பண்ணிட்டாரு பா...” என்றார், அன்வர்பாய். “எந்த துறையில ஓய்...” என கேட்டார், குப்பண்ணா. “த.வெ.க., அரசுல, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு இன்னும் அமைச்சர் நியமிக்கப்படல... ஆனா, தமிழகம் முழுக்க, இந்த துறையில் கண்காணிப்பாளர்களா இருக்கிற, 12 பேருக்கு இடமாறுதல் குடுத்து, துறையின் உயர் அதிகாரி வசூலை வாரிட்டாரு பா... “திருச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதியில் வார்டனா இருக்கிறவர் தான் புரோக்கரா செயல்பட்டு, ஒரு இடமாறுதலுக்கு 1 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வாங்கி, அதிகாரிக்கு குடுத்திருக்காரு... பணம் குடுத்து இடமாறுதல் வாங்கியவங்க, 'ஆட்சி மாறியும், காட்சி மாறலையே'ன்னு புலம்பிட்டு இருக்காங்க பா...” என முடித்தார், அன்வர்பாய். “வாரும் அன்பழகன்... சுரேஷ்குமாருக்கு முழு பணத்தையும் குடுத்துட்டீரா ஓய்...” என நண்பரிடம் குப்பண்ணா விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி