உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  கட்டிங் கொடுத்து லஞ்ச விசாரணையை அமுக்கிய அதிகாரி!

 கட்டிங் கொடுத்து லஞ்ச விசாரணையை அமுக்கிய அதிகாரி!

இ ஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''முக்கிய சங்கங்களை புறக்கணிச்சிட்டாங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி. ''என்ன விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''தமிழக அரசின் கீழ் இயங்கும் மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தை, சமீபத்தில் மறுசீரமைப்பு செஞ்சாங்க... இதுல, 22 பேரை உறுப்பினர்களா நியமிச்சிருக்காங்க... ''மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக, கடந்த, 40 வருஷங்களுக்கும் மேலா, 'உதவிக்கரம்' என்ற சங்கம் இயங்கிட்டு இருக்கு... 22 உறுப்பினர்கள் உள்ளனர்... இந்த சங்கத்தைச் சேர்ந்த ஒருத்தருக்கு கூட வாய்ப்பு தரலைங்க... ''கருணாநிதி முதல்வரா இருந்தப்ப, இந்த சங்கம் எடுத்த முயற்சியால தான், 2007ம் வருஷம் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தையே துவங்கினாங்க... இப்ப, 'மாற்றுத்திறனாளிகள் நலத் துறையை தன் வசம் வச்சிருக்கிற முதல்வர் ஸ்டாலின், இந்த நல வாரியத்தை மாத்தி அமைச்சு, இது போன்ற சங்கத்தினருக்கு வாய்ப்பு அளிக்கணும்'னு மாற்றுத் திறனாளிகள் எல்லாம் கேட்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''பிச்சைக்காரங்க தொல்லை அதிகமாகிடுத்து ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் குப்பண்ணா. ''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி சர்ச்சுக்கு தினமும் பல ஆயிரம் பேர் வரால்லியோ... இப்படி வர்றவாளை, பிச்சைக்காரர்கள் ரொம்பவே தொந்தரவு பண்றா ஓய்... ''குறிப்பா, நிறைய பெண்கள், பச்சிளம் குழந்தைகளை கையில வச்சுண்டு, வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க வர்ற ஆண்கள் மற்றும் பெண்களின் சட்டை, சேலை, கைகளை பிடிச்சி இழுத்து, வம்படியா பிச்சை கேக்கறா ஓய்... ''இத்தனைக்கும் அவாளுக்கு கை, கால்கள் நன்னா இருக்கு... 'இப்படி பிச்சை எடுக்கற பெண்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் கைத்தொழில் கற்று கொடுத்து, அவாளுக்கு உழைக்கற எண்ணத்தை உருவாக்கணும்'னு சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை வச்சும், மாவட்ட நிர்வாகம் கண்டுக்கவே இல்ல ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''லஞ்ச விசாரணைக்கு போனவரே, லஞ்சம் வாங்கிட்டு திரும்பிட்டாரு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்... ''விவசாய நிலங்களை வீட்டு மனைகளா மாத்தணும்னா, வேளாண் துறையிடம் தடையில்லா சான்றிதழ் வாங்கணும்... துாத்துக்குடியில் இப்படி சான்றிதழ் வழங்குற வேளாண் அதிகாரி ஒருத்தர், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம், 'கட்டிங்' வசூல் பண்றதா, போன, 3ம் தேதி பேசியிருந்தோமே பா... ''இதனால, சென்னையில் இருக்கிற வேளாண் துறையின் உயர் அதிகாரிகள் அதிர்ச்சியாகிட்டாங்க... இது சம்பந்தமா விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் பண்ணும்படி, புதுக்கோட்டை மாவட்ட வேளாண் அதிகாரி ஒருத்தரை, துாத்துக்குடிக்கு அனுப்பி வச்சாங்க பா... ''அவரும் துாத்துக்குடிக்கு போனாரு... ஆனா, லஞ்ச அதிகாரியிடம் எந்த விசாரணையும் நடத்தல... இதுக்கு கைமாறா, புதுக்கோட்டை அதிகாரிக்கு லஞ்ச அதிகாரி, தன்னோட ரெண்டு நாள், 'கட்டிங்' வசூலை காணிக்கையா குடுத்துட்டாரு பா... ''புதுக்கோட்டை அதிகாரியும், அவரிடம், பேருக்கு ஒரு விளக்க கடிதத்தை மட்டும் வாங்கிட்டு கிளம்பிட்டாரு... லஞ்ச அதிகாரி, வழக்கம்போல வசூல் வேட்டையை தொடர்ந்துட்டு இருக்காரு பா...'' என முடித்தார், அன்வர்பாய். எதிரில் வந்தவரை நிறுத்திய குப்பண்ணா, ''வாங்கோ சங்கரலிங்கம்... ஊர்ல இருந்து எப்ப வந்தேள்... அங்க, பெரியசாமி உங்களை நன்னா கவனிச்சதா கேள்விப்பட்டேனே...'' என பேச, மற்றவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
டிச 09, 2025 06:22

போலீஸ், லஞ்ச ஒழிப்பு, அமலாக்கத்துறை மட்டும் புனிதர்கள், புத்தர்கள் நிரந்ததா? அவர்களும் ஊரோடு ஒத்து வாழ்ந்து நாலு காசு பார்க்க வேண்டாமா ?


புதிய வீடியோ