''எல்லாரையும் மன உளைச்சல்ல தள்ளிடுறாரு பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.''யாருங்க அந்த அதிகாரி...” என பட்டென கேட்டார், அந்தோணிசாமி.''முதல்வர் ஸ்டாலின் தொகுதி உட்பட மூணு காவல் மாவட்டங்களுக்கு, ஐ.எஸ்., எனப்படும் நுண்ணறிவு பிரிவுல ஒரு உயர் அதிகாரி இருக்காரு... போலீசாருக்கு வார விடுப்பு தரணும்னு முதல்வரே உத்தரவு போட்டும், அதிகாரி கண்டுக்கல பா...''சமீபத்துல, முதல்வர் தொகுதி ஸ்டேஷன்ல நைட் டூட்டி பார்த்த காவலருக்கு மறுநாள் வார விடுப்பு... ஆனாலும், டூட்டிக்கு வரணும்னு அதிகாரி கட்டாயப்படுத்தியிருக்காரு... களைப்போட பணிக்கு வந்த காவலர், மயங்கி விழுந்து மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகிட்டாரு பா...''உயர் அதிகாரி, ஏற்கனவே இருந்த இடத்துலயும் சர்ச்சையில சிக்கிதான், இங்க வந்தாரு... 'இங்கயும் அவரது போக்கு மாறல'ன்னு ஐ.எஸ்., போலீசார் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''அனுமதி தர்றதுல பாரபட்சம் காட்டுதாவ வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் காரணமா, நடத்தை விதிகள் அமல்ல இருக்கு... ஆனா, கிழக்கு மட்டுமல்லாம மேற்கு, மொடக்குறிச்சி,பெருந்துறை தொகுதிகள்ல கூட ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்த போலீசார் அனுமதி தர மாட்டேங்காவ வே...''போக்குவரத்து ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டும் தரல... அதே நேரம், சூரம்பட்டியில் காங்கிரசார் நடத்திய ஆர்ப்பாட்டம், சீமானை கண்டிச்சு மூலப்பாளையத்தில் போராட்டம் நடத்திய பெரியார் - அம்பேத்கர் கூட்டமைப்புக்கு எல்லாம் அனுமதி குடுத்தாங்க வே...''தி.மு.க., ஆதரவு கட்சிகள், அமைப்புகளுக்கு மட்டும் அனுமதி தர்ற போலீசார், கம்யூனிஸ்ட் சார்பு சி.ஐ.டி.யு., சங்க போராட்டத்துக்கு அனுமதி மறுத்துட்டாவ... இதனால, அவங்க கொதிப்புல இருக்காவ வே...” என்றார், அண்ணாச்சி.''இருபத்தி நாலு மணி நேரமும் சேவை பண்றா ஓய்...” என, கடைசி தகவலுக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...''சென்னை, தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் இருக்கற டாஸ்மாக் பார்ல, 24 மணி நேரமும், 'சரக்கு' சப்ளை பண்றா... இந்த மாதிரி மற்ற கடைகள்ல சரக்கு வித்தா, போலீசாருக்கும், கலால் துறையினருக்கும், 'கட்டிங்' வெட்டணும் ஓய்...''ஆனா, இந்த ரெண்டு துறையினரும் இந்த பார் பக்கம் தலைவச்சு கூட படுக்க மாட்டேங்கறா... ஏன்னா, அந்த பாரை நடத்தறது, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க.,வின் முக்கிய புள்ளி... அதோட, அவருக்கு மேலிடத்து செல்வாக்கும் இருக்கறதால, இந்த பார்ல எந்த வம்பு தும்பு நடந்தாலும் யாரும் எட்டி பார்க்கறது இல்ல ஓய்...''இதே மாதிரி, ஆயிரம் விளக்கு தொகுதி, 113வது வார்டுல இருக்கற ஒரு ஹோட்டல் வளாகத்துல பெரிய மரம் இருந்துது... இந்த மரத்தை மாநகராட்சி அனுமதி இல்லாம, 117வது வார்டு தி.மு.க., பிரமுகர் உத்தரவுப்படி வேரோட வெட்டி சாய்ச்சுட்டா ஓய்...''ஏன்னா தி.மு.க., பிரமுகர், அந்த ஹோட்டல் பார்ல தான், தன் ஆதரவாளர்களுடன், 'தீர்த்தம்' சாப்பிடுவார்... ஹோட்டல் நிர்வாகம் கேட்டுண்டதால, மரத்தை வெட்ட பர்மிஷன் தந்துட்டார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.''போதையின் பாதையில் போகாதீர்னு முதல்வர் சொல்றது, இவங்க காதுல விழலையோங்க...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.