உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / வசூல் ராஜாவான வட்டார போக்குவரத்து அதிகாரி!

வசூல் ராஜாவான வட்டார போக்குவரத்து அதிகாரி!

பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, “அறிவாலயத்துக்கு பஞ்சாயத்து போயிருக்கு வே...” என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமிஅண்ணாச்சி.“என்ன விவகாரம் பா...” என கேட்டார், அன்வர்பாய்.“புதுக்கோட்டை மாநகர தி.மு.க., செயலர் செந்தில் மறைவை அடுத்து, அந்த பதவிக்கு அவரது மகன் கணேஷை நியமிக்க போறதா, மாவட்ட நிர்வாகிகளிடம் அமைச்சர் நேரு சொல்லியிருந்தாரு...“ஆனா, ராஜ்யசபா எம்.பி., அப்துல்லாவின்ஆதரவாளரான ராஜேஷை, மாநகர செயலரா போன 12ம் தேதி திடீர்னு நியமிச்சுட்டாவ வே...“இதனால, கணேஷின் ஆதரவாளர்கள், கட்சி ஆபீஸ் முற்றுகை, தர்ணா, சாலை மறியல்ல இறங்கினாவ... 13ம் தேதி புதுக்கோட்டைக்கு வந்த மாவட்ட அமைச்சர் ரகுபதியை பார்த்தும், நியாயம் கேட்டிருக்காவ வே...“அவரும், 'இது சம்பந்தமா இங்க எதுவும் பேச வேண்டாம்... அறிவாலயம் வாங்க... அங்க பேசிக்கலாம்னு சொல்லிட்டாரு வே...“இதன்படி, மாவட்டத்துல இருக்கிற 42 வட்ட செயலர்கள்ல 39 பேர் சென்னைக்கு போயிருக்காவ... அங்க, உதயநிதியை சந்திச்சி பேசுறதுக்காக ரூம் போட்டு காத்துட்டு இருக்காவ வே...” என்றார், அண்ணாச்சி.“இருக்கிற இடத்தை விட்டு அசைய மாட்டேங்கிறாருங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...“வனத்துறையில், மூணு வருஷத்துக்கு ஒருமுறை கண்டிப்பா இமாறுதல் போடணும்கிறது விதி... ஆனா, வனத்துறை தலைமை அலுவலகத்தில், கூடுதல் வனப் பாதுகாவலர் நிலையில் இருக்கிறவர், நிர்வாக அதிகாரியாகவும் இருக்காருங்க...“பதவி உய்வு கிடைச்சும், நிர்வாக அதிகாரி பணியிடத்தை விடாம, அதே இடத்துல பணியில நீடிக்கிறாருங்க... ''இப்படி, விதிகளுக்கு புறம்பா செயல்படுறதும் இல்லாம, பொது இடமாறுதலில் முறைகேடு; புதிய திட்டங்களை செயல்படுத்துறதுல அலட்சியம்; புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காம இருக்கிறதுன்னு இவர் மேல ஏகப்பட்ட குற்றச்சாட்டு களை துறை ஊழியர்களே அடுக்குறாங்க...” என்றார், அந்தோணிசாமி.ஒலித்த மொபைல் போனை எடுத்த அன்வர்பாய், “சொல்லுங்க ஜனா... வீட்டுல எல்லாரும் சவுக்கியமா பா...” என, தள்ளி சென்று பேச துவங்கினார்.உடனே, “வசூல் ராஜாவா வலம் வரார் ஓய்...” என, கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி.“சென்னை, புளியந் தோப்பு வட்டார போக்குவரத்து அதிகாரியை தான் சொல்றேன்... வாகன ஓட்டிகளிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு தொந்தரவு செய்ற இவர், கறாரா பணத்தையும் கேட்டு வாங்கிடறார் ஓய்...“சமீபத்துல, பல்லவன் சாலையில் ஒரு லாரியை, 'ஓவர் லோடு'ன்னு மடக்கி, அரிசி, பருப்பு மூட்டைகளை லஞ்சமா வாங்கிட்டார்... இது சம்பந்தமா வீடியோ வெளியாகியும், இவர் மேல எந்த நடவடிக்கையும் இல்ல ஓய்...“அதுவும் இல்லாம, ஆபீசுக்கு நேரடியா வர்ற பொதுமக்களை கண்டுக்காதவர், புரோக்கர்கள் வழியா வர்றவங்களுக்கு மட்டுமே முன்னரிமை தரார்... இவரை பத்தி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார்கள் போயும், எந்த நடவடிக்கையும் இல்ல ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.“ஞானவேல்ராஜா, இந்த பேப்பரை அங்கன வையும்...” என்றபடியே அண்ணாச்சி எழ, மற்ற வர்களும் இடத்தை காலி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sugumar s
மார் 19, 2025 15:39

he must sharing the bribes with all concerned and hence he is safe


Oru Indiyan
மார் 19, 2025 12:02

ஞானவேல்ராஜா வேப்பெரி.. வசூல்ராஜா பட வசனம்.ஞாபகம் வருகிறது


D.Ambujavalli
மார் 19, 2025 06:17

பத்திரப்பதிவு, போக்குவரத்து துறைகளில் மற்றதுறைகள் என்ன வாழுதாம் லஞ்சமில்லாமல் வேலை நடந்திருந்தால் மட்டுமே கொட்டை எழுத்தில் செய்தியாகப் போடவும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை