உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / குளுகுளு தொகுதியில் சூடு பறக்கும் சீட் போட்டி!

குளுகுளு தொகுதியில் சூடு பறக்கும் சீட் போட்டி!

''அ மைச்சரை எதிர்க்க முடிவு பண்ணிட்டாரு பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய். ''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''பள்ளிக்கல்வி துறையின் அமைச்சர் மகேஷ், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா இருக்காரு... ரெண்டாவது முறையா, இங்க ஜெயிச்சிருக்காரு பா... ''கடந்த, 2016ம் வருஷம் சட்டசபை தேர்தல்ல இவரை எதிர்த்து, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், 'எக்ஸெல்' குழுமத்தின் தலைவர் முருகானந்தம் போட்டியிட்டு, 14,500 ஓட்டுகள் வாங்கினாரு... அப்புறமா, அந்த கட்சியில் இருந்து விலகிட்டாரு பா... ''இப்ப, 'திருச்சியை, தமிழகத்தின் தலைநகராக்க வேண்டும்' என்ற கோஷத்துடன், வர்ற சட்டசபை தேர்தல்ல, திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட போறதா சொல்லியிருக்கார்... ஏதாவது கட்சியில சேர்ந்து போட்டியிட போறாரா அல்லது தனியா நிற்க போறாரான்னு தெரியல பா...'' என்றார், அன்வர்பாய். ''தொகுதியிலயே இருக்கிறது இல்லன்னு புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா. ''கரூர்ல, 41 பேர் பலியான விவகாரத்துல, பா.ஜ., - ஐ.டி., அணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அமித் மாள்வியா, கரூர் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி மீது சரமாரியா குற்றம் சாட்டியிருந்தாருங்க... ''அதாவது, 'உங்க தொகுதியில், நெரிசல்ல சிக்கி, 41 பேர் இறந்திருக்காங்க... இந்த சூழல்ல நீங்க அங்க இருக்காம, வெளிநாட்டுக்கு போயிட்டது ஏன்'னு சமூக வலைதளத்துல காட்டமா கேட்டிருந்தாருங்க... ''இதுக்காகவே காத்திருந்த மாதிரி, காங்., கட்சியில் இருக்கும் ஜோதிமணியின் எதிர் கோஷ்டியினர் வரிஞ்சு கட்டிட்டு களத்துல இறங்கிட்டாங்க... அவங்களும், 'தொகுதி மக்களை ஜோதிமணி சந்திக்கிறதே இல்ல... அடிக்கடி சென்னை, டில்லி அல்லது வெளிநாடுன்னு பறந்துடுறாருங்க'ன்னு குறை சொல்லியிருந்தாங்க... ''ஜோதிமணி பதிவுல, 'மணிப்பூரில் கலவரம் நடந்த நேரம், அங்க போகாம, உலக நாடுகளை வலம் வர நான் பிரதமர் மோடியல்ல... என் மக்கள் துன்பப்படும் நேரத்தில், அவங்களுடன் தான் நிற்கிறேன்... பிணத்தின் மீது அரசியல் செய்ய வேண்டாம்'னு அமித் மாள்வியாவுக்கு காட்டமா பதிலடி குடுத்திருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''குளுகுளு தொகுதியில் அனல் பறக்குல்லா...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''நீலகிரி மாவட்ட ஆளுங்கட்சியில், இப்பவே தேர்தல் ஜுரம் துவங்கிட்டு... தி.மு.க., கோட்டையான குன்னுார் தொகுதியில் யார் போட்டியிடுறதுன்னு இப்பவே பலரும் மல்லுக்கு நிற்காவ வே... ''இந்த தொகுதிக்கு, 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வான அரசு கொறடா ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட செயலர் முபாரக்னு ரெண்டு பேரும் முண்டா தட்டுதாவ... இவங்களுக்கு மத்தியில், நீலகிரி தி.மு.க., - எம்.பி., ராஜாவின் ஆதரவாளரான படுகர் சமூகத்தை சேர்ந்த, முன்னாள் ஊராட்சி தலைவர் சுனிதா நேருவை களம் இறக்க சிலர் நினைக்காவ வே... ''இது தவிர, கோத்தகிரியை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளரான ராஜுவை களம் இறக்கலாமான்னு இன்னொரு குரூப் ஆலோசனை நடத்துறதால, குன்னுார் தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சியில இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி. விவாதம் முடிவுக்கு வர, பெரியவர்கள் எழுந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ