ரூ.7 கோடி மோசடி இருவர் கைது
சென்னை :ஆழ்வார்பேட்டை, டி.டி.கே., சாலையில், 'ருத்ரா டிரேடிங்' என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் சார்பில், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக 2021ல் விளம்பரம் செய்து, 323 பேரிடம் 7 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து, பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் விசாரித்தனர். இதில், திருநெல்வேலியைச் சேர்ந்த சங்கர், 50, சின்னமணி வேலன், 49 ஆகியோர், சொந்த ஊரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார், திருநெல்வேலியில் ரகசிய விசாரணை நடத்தி, இருவரையும் நேற்று கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இத்தகவல் அறிந்து, ருத்ரா டிரேடிங் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று அசோக் நகர், நடேசன் சாலையில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் குவிந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தி, முக்கிய நபர்களை கைது செய்து, நீதிமன்றம் மூலம் உங்கள் பணத்தை மீட்டுத்தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.