உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  மொபட் மீது வேன் மோதல்: இரு தொழிலாளர்கள் பலி

 மொபட் மீது வேன் மோதல்: இரு தொழிலாளர்கள் பலி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே, மொபட் மீது தனியார் கம்பெனி வேன் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். உத்திரமேரூர் ஒன்றியம், சிறுங்கோழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன், 40; தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டு மளிகைப் பொருட்கள் வாங்க, 'டிவிஎஸ் - என்டார்க்' மொபட் வாகனத்தில் கட்டியாம்பந்தல் பகுதிக்கு சென்றார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பழனிவேல், 52; என்பவரும் உடன் சென்றார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டு இருவரும், கட்டியாம்பந்தல் கூட்டுச்சாலையில் இருந்து, சிறுங்கோழி பிரிவு சாலைக்கு செல்ல சாலையை கடக்க முயன்றனர். மொபட் வாகனத்தை ஆனந்தன் ஓட்டி வந்தார். அப்போது, உத்திரமேரூரில் இருந்து, மறைமலை நகர் செல்லும் தனியார் கம்பெனி மகேந்திரா வேன், மொபட் மீது மோதியது. இதில், ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பழனிவேலை அப்பகுதியினர் மீட்டு, '108' இலவச ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிவேல் உயிரிழந்தார். வேனை ஓட்டி வந்தவர், வாகனத்தை விட்டு விட்டு ஓடி விட்டார். வாகனத்தை பறிமுதல் செய்த உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ