துாய்மை பணியாளருக்கு உணவு மாநகரில் எப்போது செயல்பாடு?
திருப்பூர்:தமிழக அரசு அறிவித்துள்ள துாய்மைப் பணியாளருக்கு உணவு வழங்கும் திட்டம், திருப்பூர் மாநகராட்சியில் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துாய்மைப்பணியாளர்களுக்கு அவர்கள் பணி நேரத்தின் போது, உணவு வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் உள்ள துாய்மைப் பணியாளர்களுக்கு இத்திட்டத்தில் உணவு வழங்கப்படவுள்ளது. இதை வரும் 15 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கவுள்ளார். இதற்காக 186 கோடி ரூபாய் நிதி மூன்றாண்டு காலத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பணியாற்றும் 30 ஆயிரம் துாய்மைப் பணியாளர்களுக்கு இத்திட்டத்தில் உணவு வழங்கப்படவுள்ளது. இதில் தற்போது அங்கு பணியாற்றும் சாலைப் பணியாளர்கள் 1800 பேரையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முதல் கட்டமாகத் துவங்கும் இந்த திட்டம் பிற மாநகராட்சிகளில் அடுத்த கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 3 ஆயிரம் துாய்மைப்பணியாளர்கள் திருப்பூர் மாநகராட்சியில் தற்போது ஏறத்தாழ 2500 துாய்மைப்பணியாளர்கள் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழும், மாநகராட்சி ஊழியர்கள் 500 பேரும் பணியாற்றி வருகின்றனர். அவ்வகையில் ஏறத்தாழ 3 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தில் உணவு வழங்க வேண்டும். திருப்பூரைப் பொறுத்தவரை பெரும்பாலான ஊழியர்கள் அதிகாலை முதல் பிற்பகல் வரையில் பணியாற்றுகின்றனர். பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட சில இடங்களிலும், ரோட்டோர மண் அகற்றும் பணியிலும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களும் உள்ளனர். எனவே, காலை மற்றும் பகல் உணவு பெரும்பாலானோருக்கும், குறைந்த அளவிலான பணியாளர்களுக்கு இரவு உணவும் வழங்க வேண்டும். இதற்கான உத்தரவு இதுவரை மாநகராட்சிக்கு பிறப்பிக்கப்படவில்லை. உரிய நிதி ஒதுக்கீடு செய்து, இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் இந்த உணவு திட்டத்துக்கான சமையல் அறை, உணவு கொண்டு சென்று வினியோகம் செய்யும் நடைமுறை ஆகியன குறித்து ஆய்வு செய்து அதற்கான ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. பணி நேரத்தில் எங்களுக்கு உணவு வழங்கப்படும் நிலையில், பணித்திறன் மேம்படும். அதிகாலை நேரம் பணிக்கு புறப்பட்டு வரும் போது, சமையல் செய்வதோ, சாப்பிட்டு விட்டு வருவதோ முடியாத காரியம். இது போன்ற நிலையில் இது எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். எப்போது இத்திட்டம் இங்கு துவங்கப்படும் என எதிர்பார்த்துள்ளோம். - துாய்மைப்பணியாளர்கள், திருப்பூர் மாநகராட்சி.